2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

‘பிரதேச சபைக்குச் சொந்தமான கட்டடங்கள் இராணுவ வசம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குச் சொந்தமான 7 கட்டடங்கள், படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக, வலிகாமம் வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், வலிகாமம் வடக்குப் பகுதியில், பல பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு விடுவிக்கப்படாத பகுதிகளுக்குள் அரசக் கட்டடங்களும் பாடசாலைகளும் காணப்படுவதாகத் தெரிவித்ததுடன், அவ்வாறு காணப்படும் அரசக் கட்டடங்களில் 7 கட்டடங்கள் தமது சபைக்குரியதெனவும் அவர் குறிப்பிட்டார்.

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தலைமை அலுவலகக் கட்டடம் கூட இன்று வரை விடுவிக்கப்படவில்லையெனத் தெரிவித்த அவர், அதேபோன்று, தமது சபையின் காங்கேசன்துறை அலுவலகத்தின் நூல் நிலையம், பிரதேச சபையின் சிறுவர் பூங்கா என்பவற்றோடு பிரதேச சபைக்குரிய வாடி வீடும் படையினரின் கட்டுப்பாட்டில் இன்றும் காணப்படுவதோடு, குரும்பசிட்டி, வசாவிளான் மற்றும் காங்கேசன்துறை ஆகிய மூன்று மைதானங்களும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகவும் கூறினார்.

இவ்வாறு, தமது சபைக்குரிய கட்டடம் படையினரின் வசம் உள்ள நிலையில், சபையின் இந்தச் செயற்பாடுகளுக்காக தாம் தனியாருக்குச் சொந்தமானக் கட்டடங்களை வாடகைக்குப் பெற்றே பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

அதனால், வலிகாமம் வடக்கில் இடம்பெறும் அபிவிருத்திகள் பல தாமதம் கண்டு வரும் நிலையில், விடுவிக்கப்படும் பிரதேசத்துக்கான மின்சார விநியோகமும் சீராக இல்லாமலுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மின்சார சபை அலுவலக வளாகம் படையினரின் வசமுள்ளதால், மின்சார சபை தமது செயற்பாட்டுக்காகவும் திடீர் பழுதுகள் ஏற்பட்டாலும், 18 கிலோ மீற்றர் பயணித்தே தமது சேவையை வழங்குவதாக, அவர் கூறினார்.

இதனால் படையின் வசமுள்ள தமது சபையின் 7 இடங்களையும் மின்சார சபையின் இடத்தையும் விடுவிக்க வேண்டிய தேவை உள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X