Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 12 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் மீள்குடியேற்றம், காணி மற்றும் வாக்குரிமைப் பிரச்சினைகளை கையாளுவதற்கு, குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கி வரும் சமூக அபிவிருத்திக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்து அறிக்கையொன்றை நேற்று புதன்கிழமை விடுத்துள்ளது.
'1990ஆம் ஆண்டு முல்லைத்தீவு முஸ்லிம்களும் தமது சொந்த பூர்வீக இடத்தைவிட்டு கடல் மற்றும் தரை மார்க்கமாக புத்தளம், அநுராதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில், நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ள போதிலும் முல்லைத்தீவு முஸ்லிம்கள், தமது சொந்த மண்ணில் மீள்குடியேற முடியாத அளவுக்கு காணி மற்றும் வீடு என்பன குறைபாடாகவே காணப்படுகின்றன.
1990ஆம் ஆண்டு சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட போது 1,300 குடும்பங்களாக இருந்தவர்கள் தற்போது 4,000 குடும்பங்களாக அதிகரித்துள்ளனர்.
இதனால், எல்லோரும் தமது சொந்த மண்ணில் குடியேறி வாழ்வதற்கான காணி, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை.
எனினும், மக்களின் நிலைமையைக் கவனத்திற்கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியால் காணியற்ற முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு பொருத்தமானதொரு இடத்தில் அரச காணியை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அததுடன், முஸ்;லிம்களை குடியேற்றுவதற்காக முள்ளியவளை மற்றும் கூழாமுறிப்பு ஆகிய பிரதேசங்களில் பொருத்தமான இடத்தில் காணி அடையாளம் காணப்பட்டு, அதனை காணியற்ற முஸ்லிம் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக குறித்த அரச காணியை துப்பரவு செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வெளிமாவட்ட முஸ்லிம் குடும்பங்களை மீள்குடியேற்ற முயற்சிக்கிறார் என குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் சிலர் தமது சொந்த அரசியலுக்காக திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு காணி வழங்கும் திட்டத்தை தடுத்து நிறுத்தினார்கள்.
சமாதானத்தின் பின்னரான காலப்பகுதியில் சட்டரீதியாக இரண்டு, மூன்று தடவைகள் காணிக்கச்சேரிகளும் நடத்தப்பட்டு காணி வழங்குவதற்கு பொருத்தமான குடும்பங்கள் இணங்காணப்பட்டும் இன்றுவரைக்கும் முல்லை. முஸ்லிம்களுக்கு ஒரு அங்குலக் காணியேனும் வழங்கப்படவில்லை.
காணி, வீடு இன்றி தமது சொந்த மண்ணில் குடியேற முடியாமல் எமது மக்கள் தற்போது எந்த மாவட்டத்தில் வாழ்கிறார்களோ அந்த மாவட்டங்களிலேயே மிகவும் மன வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையில், 1970 ஆம் ஆண்டு மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகளை துப்பரவு செய்து மீளக்குடியேற முற்படும் போது இங்குள்ள தமிழ்த் தரப்பினர், முஸ்லிம்கள் காட்டை அழிக்கிறார்கள், சட்டவிரோதமாக மீள்குடியேற முற்படுகிறார்கள் என உண்மைக்குப் புறம்பான தகல்களை வழங்கி இங்கு வாழும் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
எனவே, இந்த விடயத்தில் உடனடியாக விசாரணை செய்து முல்லைத்தீவு முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைக்கும் மீள்குடியேற்றத்திற்கும் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்மையில், முல்லைத்தீவுக்கு வருகை தந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
எனவே, எமது 25வருட இடப்பெயர்வு, அகதி வாழ்வு என்பவற்றுக்கு உங்களது தலைமையிலான நல்லாட்சி, நல்லதொரு முடிவைப் பெற்றுக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பக்களுடன் எமது முல்லைத்தீவு முஸ்லிம்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
எனவே, முல்லைத்தீவு முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யவும், அவர்களின் காணிப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் காணி, வீடு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் மாத்திரமின்றி, 1990ஆம்ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் விவகாரங்களை கையாளும் வகையில் ஆணைக்குழுவை உடனடியாக நியமிக்க நல்லாட்சி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்' என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
29 minute ago