Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 16 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மார்க் ஆனந்த், எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் பொது வைத்தியசாலை தரப்பினரின் அசமந்தப்போக்கினால் தொடர்ச்சியாக மரணங்கள் இடம்பெறுவதாகக் கூறி மன்னார், வாங்காலை கிராம மக்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தே இன்று திங்கட்கிழமை (16) காலை மேற்கொண்டிருந்தனர்.
வங்காலை கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களும் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை காலை 9.30 மணி முதல் மேற்கொண்டனர்.
இப்போராட்டம் குறித்து தெரியவருவதாவது,
மன்னார், வங்காலையைச் சேர்ந்த பத்திநாதன் ஜேன்போள் சோசை (வயது-20) என்ற இளைஞன், கடந்த மாதம் 31ஆம் திகதி மன்னாரில் இருந்து வாங்காலை நோக்கி தனியார் பஸ்ஸில் பயணித்த போது பஸ்ஸிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
சம்பவதினம் கடமையில் இருந்த வைத்தியர், உரிய முறையில் சிகிச்சை வழங்காது தலையில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து கட்டி நோயாளர் விடுதியில் அனுமதித்துள்ளார்.
எனினும், இளைஞனின் உடல் நிலை மிக மோசமாக காணப்பட்டதனால் மேலதிக சிகிச்சைக்காக வேறு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்ட போதும் சுமார் 6 மணி நேர தாமதத்தின் பின் இரவு 10.45 மணிக்கு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதன்போது, யாழ். வைத்தியசாலை வைத்தியர்கள், இளைஞனின் நிலை குறித்து மன்னார் வைத்தியசாலை தரப்பினர் மீது விசனம் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த இளைஞன் யாழ். வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி, உயிரிழந்தார்.
சம்பவதினம், மன்னார் பொது வைத்தியசாலையில் கடமையிலிருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் தான் குறித்த இளைஞனின் மரணத்துக்கு காரணம் எனக் கூறி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் மற்றும் வங்காலை கிராம மக்கள் ஆகியோர் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.
நூற்றுக்கணக்காக மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு இதில் கலந்துகொண்டனர்.
வைத்தியசாலை ஊழியர்களே கருணை அடிப்படையிலாவது எங்களை கவனியுங்கள், அரசே வைத்தியசாலை நிர்வாகத்தை சீர்படுத்து, வைத்தியர்களே பொதுமக்களின் வரிப்பணமே உங்கள் வேதனம், கடமை நேரத்தில் விழிப்பாய் இரு போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.
மன்னார் பொது வைத்தியசாலை தரப்பினரின் அசமந்தப்போக்கினால் இதுவரை 3 மரணச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களுக்கு ஆரதவு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டார்.
இதனைத்தொடர்ந்து தமது கோரிக்கை அடங்கிய மகஜரை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளித்ததோடு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடமும் கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
23 minute ago