2024 மே 19, ஞாயிற்றுக்கிழமை

நேர்முக வர்ணனையாளர் ரொனி கிரெய்க்கு புற்றுநோய்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் போட்டிகளின் நேர்முக வர்ணனையாளருமான ரொனி கிரெய்க்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக டுவென்டி டுவென்டி தொடரை அடுத்து அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பிய வேளையிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரொனி கிரெய்க்கு மூச்சுக்குழல் அழற்சி நோய் ஏற்பட்டிருப்பதாக கடந்த மே மாதத்தில் கருதப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை தொடர்ந்தும் மோசமடைந்து வந்ததன் காரணமாக மேலதிக சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ரொனி கிரெய்க், தனது வாழ்வில் பிரச்சினைகளை இதற்கு முன்னர் சந்தித்துள்ளதாகவும், இது இன்னுமொரு பிரச்சினை எனவும் தெரிவித்தார். தானும், தனது மனைவியும் இணைந்து புற்றுநோய்க்கெதிரான போராட்டத்தைத் தொடங்கவுள்ளதாகவும், இதுவரை போராடியதை விடவும் அதிகமான போராட்டத்தை இதற்காக வெளிப்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவில் பிறந்த ரொனி கிரெய்க், இங்கிலாந்து சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றியதோடு, இலங்கையோடு நெருக்கமான தொடர்புகளைப் பேணும் ஒருவராவார். இலங்கையின் சுற்றுலாத்துறையின் தூதுவராகச் செயற்படும் அவர், நேர்முக வர்ணனைகளில் இலங்கையின் இளநீர்களைப் பிரபலப்படுத்துவதன் மூலம் அதிகமாக அறியப்படுபவர்.

58 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 40.43 என்ற சராசரியில், 8 சதங்கள், 20 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 3599 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 58 டெஸ்ட் போட்டிகளில் 141 விக்கெட்டுக்களை 32.20 என்ற சராசரியில் கைப்பற்றியிருந்தார்.

அவர் 22 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் பங்குபற்றியிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .