2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

குழந்தை தெரேசாவின் பெற்றோருக்கு புனிதர் பட்டம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்னை தெரேசாவுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த குழந்தை தெரேசாவின் பெற்றோருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அன்னை தெரேசாவின் முன்மாதிரியாக திகழ்ந்தவர் குழந்தை தெரேசா என்ற புனிதை. பிரான்ஸ் நாட்டில் 1873ஆம் ஆண்டு பிறந்த இவர், பாப்பரசர் 13ஆம் லியோவின் சிறப்பு அனுமதியுடன் 15 வயதிலிருந்து துறவற மடத்தில் இணைந்தார்.

கன்னியாஸ்திரியாக வாழ்ந்தபோது, பிறருக்கு உதவி செய்வதிலும் துன்பத்தில் இருப்போருக்காக பிரார்த்தனை செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். 24 வயது வரை மட்டுமே வாழ்ந்த இவரது பெயரால்,  பல அற்புதங்கள் நிகழ்ந்ததால், 1925ஆம் ஆண்டு இவருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

புனித குழந்தை தெரேசாவின் பெற்றோர் லூயிஸ் மார்ட்டின் - செலி கெரின் ஆகியோராவர். சிறு வயது முதலே எளிமையாக வாழ்ந்த இவர்கள், துறவறம் ஏற்க நினைத்திருந்தனர். எனினும் இல்லற வாழ்வில் இணைந்தனர். 15 ஆண்டுகளில் 7 பெண் குழந்தைகளும் 2 ஆண் குழந்தைகளும் இவர்களுக்கு பிறந்தன. அவற்றில் 4 குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துவிட்டன.

உயிரோடிருந்த தெரேசா உள்ளிட்ட 5 பெண் குழந்தைகளையும் இருவரும் பாசத்தோடு வளர்த்தனர். பிறருக்கு உதவி செய்யவும் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழவும் அவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதன் விளைவாக, 5 பேரும் துறவற மடத்தில் இணைந்து கன்னியாஸ்திரிகளாயினர். அவர்களில் தெரேசா புனிதர் நிலைக்கு உயர்ந்தார்.

5 குழந்தைகளை துறவற பணிக்கு அர்ப்பணித்த மார்ட்டின் - செலி தம்பதியரின் விசுவாச வாழ்வை போற்றும் வகையில், பாப்பரசர் 2ஆம் ஜான் பால் 1994இல், இவர்களை வணக்கத்துக்குரியவர்கள் என்று அறிவித்தார். இவர்களிடம் பிரார்த்தனை செய்த இத்தாலிய சிறுவனுக்கு நுரையீரல் பாதிப்பு குணமானதால், பாப்பரசர் 16ஆம்  பெனடிக்ட், 2008 ஒக்டோபர் 19ஆம் திகதியன்று இவர்களை அருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.

தற்போது, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சிறுமிக்கு மூளைவாதம் குணமடைந்த அற்புதம் உறுதி செய்யப்பட்டிருப்பதால், மார்ட்டின் - செலி தம்பதியருக்கு, பாப்பரசர் பிரான்சிஸ், புனிதர் பட்டம் வழங்கியுள்ளார்.

ஒரு கணவன் - மனைவி, ஒரே நாளில் புனிதர்களாக அறிவிக்கப்படுவது கிறிஸ்தவ வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X