2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஸ்ரீதேவியை உருவத்தில் மட்டுமல்லாமல் மரணத்திலும் ஒத்துப் போன நடிகை

Editorial   / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பார்பதற்கு அச்சு அசல் ஸ்ரீதேவி போலவே இருந்தவர் தான் நடிகை திவ்ய பாரதி. முக தோற்றம் மட்டுமல்லாமல், நடிப்பும், பாவனைகளும் கூடவே ஸ்ரீதேவி போலவே தான் இருந்தது இவருக்கு. ஸ்ரீதேவியின் தங்கை என்றும், ஜூனியர் ஸ்ரீதேவி என்றும் அழைக்கப்பட்ட திவ்ய பாரதிக்கும், ஸ்ரீதேவிக்குமான பல ஒற்றுமைகள் கேட்போரை வியக்க வைக்கிறது.

இளம் வயதிலேயே நடிக்க வந்த திவ்ய பாரதி, மூன்றே வருடத்தில் முன்னணி நாயகிகளுக்கு இணையாக வளர்ந்தார். பெரும் பட்ஜெட் திரைப்படங்களில், பெரிய நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்ற இவர், எதிர்பாராத நேரத்தில், மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்தியாவில் மர்மமான முறையில் இறந்த பிரபலங்களின் பட்டியலில் திவ்ய பாரதியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு, இவரது மரணம் பற்றிய செய்திகளும் வெளிவந்தவண்ணமுள்ளன. இவர்கள் இருவரின் மரணத்தின் நடுவே சில தகவல்கள், விடயங்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

உருவ ஒற்றுமை

90களில் பார்ப்பதற்கு சொந்த அக்கா, தங்கை போல இருந்த ஸ்ரீதேவியும், திவ்ய பாரதியும், போட்டி போட்டு பல திரைப்படங்களில் நடித்தார்கள். இருவரது வாய்ப்புகளும் அடிக்கடி இடம்மாறி போயின. கோல்ஷீட் காரணமாக, இருவரில் யாருடைய திகதிகள், இலகுவில் கிடைக்கிறதோ, அவரை வைத்து படங்கள் தயாரிக்க ஆரம்பித்தனர். காரணம் இவருவரும் ஒரே மாதிரி இருந்தது என்று கூறப்படுகிறது. இதனால், பிஸியாக இருந்த காரணத்தால் ஸ்ரீதேவிக்கு வந்த வாய்ப்புகள் திவ்ய பாரதிக்கும், திவ்ய பாரதிக்கு போக வேண்டிய வாய்ப்புகள் ஸ்ரீதேவிக்கும் மாறி மாறி சென்றுள்ளன.

நாள் ஒற்றுமை

நடிகை ஸ்ரீதேவி பெப்ரவரி 24, இரவு 11.30 மணியளவில் இறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. திவ்ய பாரதியின் பிறந்த நாள் பெப்ரவரி 25 ஆகும். ஒருவருடைய இறப்பு நாளும், மற்றொருவருடைய பிறந்ந நாளும் அடுத்தடுத்து அமைந்துள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது. சரியாக திவ்ய பாரதி இறந்து 25 ஆண்டுகள், கழித்து ஸ்ரீதேவி மரணம் அடைந்துள்ளார்.

போதை

1993ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி எதிர்பாராத விதமாக நடிகை திவ்ய பாரதி குடி போதையில், மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார் என்ற செய்தி வெளியானது.

அதுபோல், ஸ்ரீதேவி, ஆரம்பத்தில் மாரடைப்பினால் உயிரிழந்தார் என்று கூறப்பட்டாலும், பின்னர் வெளியான இறப்பு அறிக்கையில், அவர் குடிபோதையினால் குளியலறையில் இறந்து கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் இருவரின் இறப்புக்கும் போதை ஓர் காரணமாகவும், ஒற்றுமையாகவும் அமைந்துள்ளது. இதுவும் ஒரு மர்மமான சூழலை ஏற்படுத்துகிறது.

திவ்யபாரதியின் தீடீர் இறப்பின் காரணமாக, ஏறத்தாழ பாதிக்கும் மேலான காட்சிகளை அவர் நடித்து முடித்திருந்த லாட்லா என்ற திரைப்படம், மீண்டும் ஸ்ரீதேவியை வைத்து எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஸ்ரீதேவியுடன் அணில் கபூர், ரவீனா டாண்டன் போன்றவர்கள் நடித்திருந்தனர். அணில் கபூர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

ஸ்ரீதேவி போலவே, இந்தி திரையுலகில் நடிக்க வந்த மிக குறுகிய காலக்கட்டத்தில் பெரும் புகழ் அடைந்தார் திவ்ய பாரதி. 1990ஆம் நடிக்க வந்த இவர், 1990-93க்கு இடைப்பட்ட காலத்தில் 13 திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், ஸ்ரீதேவியைப் ​போன்று ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தியிலும் மிக பிஸியான நடிகையாக இருந்தார் திவ்ய பாரதி. அவர் வளர்ந்து வந்த நேரத்தில், ஸ்ரீதேவி இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாகவும், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கி வந்த நடிகையாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருமொழி படங்களிலும் கிட்டத்தட்ட ஸ்ரீதேவிக்கு ஒரு மாற்று நடிகையாக மட்டுமின்றி, போட்டி நடிகையாகவும் வளர துவங்கினார் திவ்ய பாரதி.

திவ்ய பாரதி, ஷோலா அவுர் ஷப்னம் என்ற படத்தின் போது, சஜித் நதியத்வாலா என்பவருடன் ஏற்பட்ட காதலையடுத்து, 1992 மே மாதம் 10ஆம் திகதி அவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு திவ்ய பாரதி முஸ்லிம் மதத்திற்கு மாறினார். தனது பெயரையும் சானா நதியத்வாலா என்று மாற்றிக் கொண்டார்.

நேர ஒற்றுமை

திவ்ய பாரதி, 1993ஆம் ஆண்டு, ஏப்ரல் 5ஆம் திகதி இரவு 11 மணிக்கு மேல் மும்பையில் இருந்த தனது அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து, தடுமாறி கீழே விழுந்து இறந்தார் என்று கூறப்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார்கள். அவரது தலையில் பலத்த காயமும், அதிக இரத்தப்போக்கும் ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

நடிகை ஸ்ரீதேவியின் மரணமும் இரவு 11 மணிக்குப் பிறகு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகம்

திவ்ய பாரதியின் கணவருக்கு நிழலுக தாதாக்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகித்த அதேவேளை, அவரே தற்கொலை செய்துக் கொண்டாரா, அல்லது அவர் மது போதையில் இருக்கும் போது அவரை பின்னாடி இருந்து யாரேனும் தள்ளிவிட்டனரா என்றும் போலீஸ் பல கோணங்களில் விசாரித்தது. ஆனால் போதிய ஆதாரம் கி​டைக்காத காரணத்தால் இவரது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்தவகையில் ஸ்ரீதேவியின் இறப்பிலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளமையால், இவர்கள் இருவர் தொடர்பிலும் உள்ள பல ஒற்றுமைகள் ஆச்சரியமூட்டுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .