2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கோடிலியாவை வரவேற்க விசேட ஏற்பாடு

Janu   / 2023 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

இந்தியாவிலிருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காங்கேசன் துறைமுகத்துக்கு வரும் கோடிலியா உல்லாசப் பயணக் கப்பல் சுற்றுலாவிகளுக்கு வேண்டிய சேவைகளை உரிய முறையில் வழங்க வடக்கு மாகாண ஆளுநரின் விசேட உத்தரவின் பேரில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஜுன் 16ம் திகதி காங்கேசன் துறைமுகம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டபோது முதல் தடவையாக வருகை தந்திருந்த கோடிலியா உல்லாசப் பயணக் கப்பல் இந்த மாதம் 11ம் மற்றும் 18ம் திகதிகளிலும் காங்கேசன் துறைமுகத்துக்கு வந்திருந்தது. எனினும், இந்தக் கப்பலில் வரும் உல்லாசப் பயணிகளை வரவேற்று உபசரிக்க உள்ளூர் மட்டத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. 

இதனையடுத்து, வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினர் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலரையும் நேரில் அழைத்து திங்களன்று (21) விசேட கலந்துரையாடலை நடாத்திய ஆளுநர் அவர்கள், சுற்றுலாப் பயணிகளை வரவேற்று உபசரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கியிருந்தார். 

இதன் தொடர்ச்சியாக, தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவஸ்ரீ தலைமையில் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியக தலைவர் பத்திநாதன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகனன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளரும், சுற்றுலாப் பணியக பணிப்பாளர்சபை உறுப்பினருமான றுஷாங்கன், வலிகாமம் வடக்கு பிரதேசசபை செயலாளர் சுதர்ஜன், வடக்கு மாகாண கைத்தொழில் திணைக்கள பணிப்பாளர் வனஜா ஆகியோர் இணைந்து தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் செவ்வாயன்று(22) நடாத்திய விசேட கலந்துரையாடலின்போது சுற்றுலாப் பயணிகளை வரவேற்று உபசரிப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X