2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 15 பேர் தனிமை

Editorial   / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய குருக்கள், நிர்வாகிகள் மற்றும் திருவிழா உபயக் காரர்கள் என 15 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக சுகாதாரத் துறைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே, சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரைச் சேர்ந்த சிலரால் ஒளிப்படங்களை ஆதாரமாக வைத்து முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து நேற்று (28) திங்கட்கிழமை  இடம்பெற்ற மாகாண சுகாதார கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் மார்கழி வைகுண்ட ஏகாதசி பட்ஷ திருவிழா இடம்பெற்றது. திருவிழாக் காலங்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

தேர்த்திருவிழா, தீர்த்திருவிழாவில் பக்தர்கள் முகக் கவசம் அணியாது பக்தர்கள் நூற்றுக் கணக்கில் கலந்துகொண்டனர் என்று ஒளிப்படங்களை முன்வைத்து சுட்டிக்காட்டியுள்ள காரைநகரைச் சேர்ந்த சிலர், ஈழத்துச் சிதம்பரத்துக்கு ஏன் அனுமதியளிக்க முடியாதுள்ளது என்று முறையிட்டுள்ளனர்.

அதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மாகாண சுகாதாரத் துறை கூட்டத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

சுகாதார மருத்துவ அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையிலேயே குருக்கள், பூசகர்கள், நிர்வாகிகள் மற்றும் தேர் மற்றும் தீர்த்தம் ஆகியவற்றின் திருவிழா உபயக் காரர்கள் என 15 பேர்வரை சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நிர்வாகி மற்றும் பூசகர் ஆலயத்தில் தங்க அனுமதி கோரியிருந்தனர். அதனால் அவர்கள் ஆலயத்தில் தங்கியிருந்து நித்திய பூஜை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அடியவர்கள் ஆலய வெளி வீதியில் வழிபாடுகளில் ஈடுபடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் கீழ் தற்போது ஆலயங்களில் ஒரே நேரத்தில் 50 அடியவர்கள் மட்டுமே வழிபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X