2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சில ஆசிரியர்களை கட்டாய ஓய்வில் அனுப்பும் தீர்மானத்துக்கு கண்டனம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 24 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா, எஸ்.எம்.எம்.றம்ஸான்

சம்மாந்துறைக் கல்வி வலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் சிலரை கற்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் கட்டாய ஓய்வில் அனுப்புவதற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  தீர்மானத்துக்கு இலங்கை கல்வி நிர்வாகச் சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேற்படி சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் புதன்கிழமை (23) விடுத்துள்ள அறிக்கையில், 'சம்மாந்துறைக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் 15 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை கற்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் மருத்துவக் காரணம் காட்டி கட்டாய ஓய்வில் அனுப்புவதற்கு கடந்த வாரம் நடைபெற்ற சம்மாந்துறைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து சம்மாந்துறைக் கல்வி வலயத்தில் கட்டாய ஓய்வில் அனுப்பப்படவுள்ள குறித்த ஆசிரியர்கள் தொடர்பில் களநிலை ஆய்வை மேற்கொள்வதற்காக வலயக் கல்வி அலுவலகத்தால் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது சம்மாந்துறை வலயத்தில் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இத்தீர்மானம் தொடர்பிலும்; அதனோடு இணைந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் இலங்கை கல்வி நிர்வாகச் சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் வன்மையாக கண்டிக்கிறது' என்றார்.

'இதற்காக இனங்காணப்பட்ட ஆசிரியர்கள் எந்த அளவுகோலின் அடிப்படையில் கற்பித்தலுக்கு தகுதியற்றவர்களாகக் கணிக்கப்பட்டார்கள் என்பதையும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டமைக்கான  பின்னணி என்ன என்பதையும் வலயக் கல்விப் பணிப்பாளர் தெளிவுபடுத்த வேண்டும். ஆசிரியர்கள் மீது கடுமையான தீர்மானம் எடுக்கப்படுமாயின், கல்வித்துறையில் கடமையாற்றுகின்ற தகுதியற்றவர்களாகக் கருதப்படும் அதிகாரிகள் மீது எவ்வாறான தீர்மானம் எடுக்கப்படுமென்று அறிய விரும்புகின்றோம்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .