2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சட்டவிரோதமாக ஆக்கிரமிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, இறக்காமம் வில்லுக் குளத்தை அண்டிய பிரதேசங்களை   சட்டவிரோதமாக ஆக்கிரமிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக, அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியளாளர் எம்.ரி. மயூரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று (03) அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய வரட்சியான காலநிலையால் குளத்தின் நீர்மட்டம் நன்றாக வற்றியுள்ளது. இவ்வாறு குளத்தின் நீர் வற்றிய பிரதேசங்களை, குளத்தை அண்டிய வயற்சொந்தக்காரர்களும் குடியிருப்பாளர்களும் எவரிடமும் எவ்விதமான அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாகக் குளத்தை ஆக்கிரமித்து வருவதால் குளத்தின் பரப்பளவு நாளாந்தம் குறைந்து வருகிறது.

இக்குளத்தை நம்பி சுமார் 6 நன்னீர் மீனவர் சங்கங்களைச் சேர்ந்த சுமார் 1,500க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள், இக்குளத்தில் இருந்து நாளாந்தம் பிடிக்கப்படும் மீன்களை விற்று அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்கையை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு இக்குளத்தை அத்துமீறிப்பிடிப்பதால் இவர்களின் வாழ்கையும், இக்குளத்து நீரை நம்பி மேற்கொள்ளப்படும் விவசாயமும் கேள்விக்குறியாகிவிடும்.

இவ்வாறு இறக்காமம் குளத்துக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு சம்மந்தமாக    இறக்காமம் குளத்தை சட்டவிரோதமாக பிடித்தவர்களுக்கு எதிராக 1979ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க அரச காணி சட்டம் அட்டவனை அ.படிவத்தின் மூலம் நீக்குதல் பற்றிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டவிரோதமாக குளத்துக்குரிய காணியைப் பிடித்தவர்கள் குளத்துக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கடந்த ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவித்தலையும் பொருட்படுத்தாது குளத்துக்குரிய காணிகளை ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்சியாக நடைபெற்று வருகின்றது. இதனால், இவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என அவர் தெரிவித்தார்.

மேலும், குளத்தின் பரப்பளவுக் கணக்கிடப்பட்டு, இதற்கான அணைக்கட்டு நிர்மாணிப்பதற்கான செலவு மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும்  அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .