2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘வன்முறைகளை நிறுத்துமாறு, மியான்மாரை இலங்கை அரசாங்கம் வலியுறுத்த வேண்டும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை நிறுத்துமாறு, இலங்கை அரசாங்கம் மியான்மாரை வலியுறுத்த வேண்டும் என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து, மியான்மார் முஸ்லிம்கள் விவகாரத்தில் தலையிடுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

“மனித உரிமை மீறல், அகதிகள்  விவகாரம் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உலகில் பல நிறுவனங்கள் இருந்தும், மியான்மாரில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான கொலைகளை அந்நிறுவனங்கள் இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பது கவலையளிக்கிறது.

மியான்மார் அரசாங்கமும் இராணுவமும் சேர்ந்துதான் அங்குள்ள முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அநியாயத்தைக் கட்டவிழ்த்து விட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும். பௌத்த மக்கள் நல்லவர்களாக இருந்தும், பௌத்த இனவாதம் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டு, இந்த அவலம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரபு – முஸ்லிம் உலகத்தில் மியான்மார் துயரங்களுக்கு எதிராக துருக்கியினுடைய தலைவர் அதுர்கான் விடுத்திருக்கும் காத்திரமான அறிக்கையைத் தவிர, வேறு எந்த அரபு – முஸ்லிம் நாடுகளின் தலைமைகளும் இதனைக் கண்டு கொள்ளவில்லை.

நமக்கு அண்மையில் உள்ள பாகிஸ்தானின் உடன்பிறப்புகளும் மியான்மார் கொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. இவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும்.

இது ஒருபுறமிருக்க, அண்மைக்காலமாக நம் நாட்டு முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாற்று துயரத்திலிருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. ரோஹிஞ்சாவின் இன்றைய நிலைமையைப் போன்று இலங்கையிலும் ஒரு சூழ்நிலையை உருவாக்கமாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதங்களுமில்லை.

இந்த நாட்டின் பௌத்த மக்கள் கருணை உள்ளவர்கள் என்பதால் மத, இன பாகுபாடுகளுக்கு அப்பால் சென்று, மியான்மாரியல் நடைபெறும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கம் மியான்மாரை வலியுறுத்த வேண்டும்.

நமக்கொரு கடமை இருக்கிறது. இந்த நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் – அரபுலக நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்து, அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தூங்கிக் கிடக்கின்ற அவரவர்களது நாட்டுத் தலைமைகளை மியான்மார் விடயத்தில் தட்டியெழுப்ப வேண்டும்.

எது செய்வதாக இருந்தாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் நன்கு தீர்மானித்து ஒரு பொதுச் சபை வழிகாட்டும் அடிப்படையில்தான் நமது நடவடிக்கைகள் அமைய வேண்டும். மாறாக  எடுத்தாற்போல் கண்டனம், போராட்டம் நடத்துகின்றவர்களுக்கு பின்னால் செல்ல வேண்டாம்.

இதற்கு கட்சி வேறுபாடுகளுக்கப்பால் நமது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவசியப்படுகின்ற புத்திஜீவிகளுமாக ஒன்று சேர்ந்து, எடுப்பதற்கு முன்வந்து செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .