2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அல்-பாப் மோதல் வலுக்கிறது: ‘துருக்கிப் படையினர் 14 பேர் கொல்லப்பட்டனர்’

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியினால் ஆதரிக்கப்படும் சிரியப் போராளிகளுக்கும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளுக்குமிடையே வட சிரிய நகரமான அல்-பாப்பினைச் சூழவுள்ள பகுதிகளில் மோதல்கள் நேற்று (21) உக்கிரமடைந்துள்ளன. இதில், துருக்கிப் படையினர் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இஸ்லாமிய ஆயுததாரிகள் 138 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் துருக்கி இராணுவம் தெரிவித்துள்ளது.

மேற்படி மோதலில், துருக்கிப் படைவீரர்கள் 33 பேர் காயமடைந்துள்ள நிலையில், வடக்கு சிரியாவில், ஏறத்தாழ நான்கு மாதங்களாக துருக்கி மேற்கொண்டு வரும் “யுப்ரேட்டஸ் ஷீல்ட்” நடவடிக்கையில், துருக்கிக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாக இது நோக்கப்படுகிறது.

இந்நிலையில், “யுப்ரேட்டஸ் ஷீல்ட் நடவடிக்கையின் கீழ் முற்றுகைக்குள்ளாகியுள்ள அல் பாப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தொடர்வதாக, அறிக்கையொன்றில் துருக்கி இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அல்-பாப்பில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் மீது கடந்த வாரங்களில் தாக்குதல்களைத் தொடுத்துள்ள எதிரணிப் படைகள், அல்-பாப்பின் வைத்தியசாலையை சூழவுள்ள முக்கியமான பகுதியின் பெரும்பாலான இடங்களை எதிரணிப் படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக முன்னர் துருக்கி இராணுவம் தெரிவித்திருந்தது.

சிரியாவில், ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாகத் தொடரும் போரினை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இணக்கத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாக, ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் சந்தித்துக் கொண்ட ரஷ்ய, ஈரானிய, துருக்கி வெளிநாட்டமைச்சர்கள் தெரிவித்தமையைத் தொடர்ந்தே தனது நடவடிக்கையை துருக்கி இராணுவம் அதிகரித்திருந்தது.

இதேவேளை, துருக்கியினால் நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு இலக்குகளில் 67 அழிக்கப்பட்டுள்ளதாக துருக்கி இராணுவம் கூறியுள்ளது.

இந்நிலையில், அல்-பாப்பின் தென்மேற்கு முனைகளில் கடும் மோதல்கள் இடம்பெறுவதாகவும், எதிரணி முன்னேற்றங்கள் சில நிகழ்ந்ததாகவும் தெரிவித்துள்ள மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம், துருக்கியின் விமானத் தாக்குதல்களால், அல் பாப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

மறுபக்கம், இறுதித் தொகுதி போராளிகளும் கிழக்கு அலெப்போவிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட், நேற்று (21) அலெப்போவை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளதாக கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், வெளியேற்றம் இன்னும் நிறைவு பெறவில்லையென ஐக்கிய நாடுகளின் அதிகாரியொருவரும், போராளிகளும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .