2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஜேர்மனியில் ரயிலொன்றில் கோடரித் தாக்குதல்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 19 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு ஜேர்மனியில், கோடரியாலும் கத்தியாலும் நான்கு பேரை ரயிலில் காயப்படுத்திய இளம் ஆப்கானிஸ்தான் அகதியொருவரை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெக்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற தாக்குதலில் மூன்று பேர் கடுமையான காயங்களுக்குள்ளானதாகவும், ஒருவர், சிறு காயங்களால் பாதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி 20 பேர் வரையில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர், 14 பேர் அதிர்ச்சி தொடர்பாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலுக்கான காரணம், இதுவரையில் அறியப்படாத நிலையில், அருகிலுள்ள ஒக்ஸென்ஃபோர்ட் நகரத்தில் வசித்த 17 வயதான ஆப்கானிஸ்தான் அகதியே தாக்குதலாளி என பவேரியா உள்துறை அமைச்சர் ஜோவாச்சிம் ஹமன் தெரிவித்துள்ளார். தவிர, தாக்குதலாளி, சிறுவனாக தனித்தே ஜேர்மனிக்கு பயணித்ததாக தென்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாக்குதலின்போதோ அல்லாஹூ அக்பர் என தாக்குதலாளி கத்தியதாக சம்பவத்தை கண்ணுற்ற சிலர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. ட்ரெயுச்சிலிங்கனுக்கும் வெக்ஸ்பேர்க்குமிடையே பயணித்த ரயிலில், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு 9.15க்கே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

வெக்ஸ்பேர்க்கை ரயில் வந்தடைந்த சிறிது நேரத்திலேயே, கோடரி, கத்தி மூலம் பயணிகள் மீது தாக்குதலாளி தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரயிலை விட்டு ஓடிய தாக்குதலாளியை துரத்திய  அதிகாரிகள், அவரை சுட்டுக் கொன்றதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .