2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நாடுதிரும்பினார் டொனால்ட் ட்ரம்ப்

Editorial   / 2017 மே 28 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டின் ஜனவரியில், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு, ஐ.அமெரிக்க நேரப்படி நேற்று , நாடு திரும்பினார். ஆனால், நாட்டுக்குள் எழுந்துள்ள கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியிலேயே, அவர் நாடுதிரும்பியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, ட்ரம்ப்பின் பிரசாரக் குழுவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் தொடர்புகள் காணப்பட்டனவா என்பது தொடர்பான விசாரணையில், முக்கியமான நபராக, ஜனாதிபதி ட்ரம்ப்பின் மருமகனும் அவரது ஆலோசகருமான ஜரேட் குஷ்னர் காணப்படுகிறார் என்ற செய்தி, ஜனாதிபதி ட்ரம்ப்பின் மீது, உச்சக்கட்டமான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், ஐ.அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதுவர் சேர்ஜெய் கிஸ்லியாக்குடன் தொடர்பை ஏற்படுத்திய குஷ்னர், ரஷ்யாவுக்கும் ஐ.அமெரிக்காவுக்குமிடையில், பின்கதவுத் தொடர்பாடலை ஏற்படுத்துவதற்கு முன்மொழிந்தார் என்று, செய்தி வெளியானது.

ஐ.அமெரிக்காவின் புலனாய்வு நடவடிக்கைகளைத் தாண்டி, தொடர்புகளை ஏற்படுத்தவே, இந்த முயற்சியை அவர் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. அத்தோடு, கண்காணிப்புகளைத் தடுப்பதற்காக, ஐ.அமெரிக்காவிலுள்ள ரஷ்யத் தூதரகத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்கும் அவர் முன்மொழிந்தார் என்று அறிவிக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு, டிசெம்பர் 1 அல்லது 2ஆம் திகதி இடம்பெற்றதோடு, ஜனாதிபதி ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்று 24 நாட்களில் விலக்கப்பட்ட மைக்கல் ஃபிளினும், இதில் கலந்துகொண்டுள்ளார்.

இந்தச் செய்தி உறுதிப்படுத்தப்படுமாயின், ரஷ்யாவுக்கும் ட்ரம்ப் குழுவுக்குமிடையிலான தொடர்புகள் குறித்த கேள்விகளை எழுப்பி நிற்கிறது. குறிப்பாக, சட்டவிரோதமான தொடர்புகள் காணப்பட்டனவா என்ற கேள்வியெழுப்பப்படுகிறது.

இவற்றுக்கு மத்தியிலேயே, 9 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, நாட்டுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் திரும்பியுள்ளார். அவர், அடுத்த சில நாட்களில், ஐயோவாவுக்குச் செல்லவிருந்த நிலையில், அந்தப் பயணம், இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மாறாக, சேதங்களை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில், வெள்ளை மாளிகை ஈடுபட்டுள்ளது. அத்தோடு, ஜனாதிபதியின் சட்டக்குழுவை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் வெளிநாட்டுக்குச் சென்றிருந்த குஷ்னர், சுற்றுப் பயணத்தின் நடுவில், நாட்டுக்குத் திரும்பியிருந்தார். அதன் பின்னர் அவர், பெருமளவில் தன்னை வெளிக்காட்டிக் கொண்டிருக்கவில்லை. ஆனால், தனது சிரேஷ்ட ஆலோசகர் பதவியிலிருந்து விலகவோ அல்லது தனது கடமைகளைக் குறைத்துக் கொள்ளவோ அவர் சிந்திக்கவில்லையெனவும் குறிப்பிடப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .