2024 மே 09, வியாழக்கிழமை

‘மங்குட்’ தாக்கி 30 பேர் பலி

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , மு.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலிப்பைன்ஸைத் தாக்கிய மங்குட் சூறாவளி காரணமாக, குறைந்தது 29 பேர் பலியானதோடு, அச்சூறாவளி இப்போது, சீனாவையும் ஹொங்கொங்கையும் நோக்கி நகர்ந்து வருகிறது.

இவ்வாண்டின் மிகப்பெரிய சூறாவளியாகக் கருதப்படும் மங்குட், கடந்த வெள்ளிக்கிழமை (14), பிலிப்பைன்ஸைத் தாக்கத் தொடங்கியது. மணிக்கு 200 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் வீசிய இச்சூறாவளி, பிலிப்பைன்ஸின் லூஸோன் தீவுப் பகுதியிலுள்ள விவசாய நிலங்களை, வெள்ளக்காடாக மாற்றியது. பல பிரதேசங்களில் மரங்களைச் சாய்த்து வீழ்த்தியதோடு, அதன் விளைவாக, ஒரு டசினுக்கும் மேற்பட்ட மண்சரிவுகளையும் ஏற்படுத்தியது.

சூறாவளி தாக்கிய பகுதியில், சுமார் 5 மில்லியன் பொதுமக்கள் வாழ்ந்துவந்ததோடு, சூறாவளியின் தாக்கத்துக்குப் பின்னராக, தொலைத்தொடர்பு வசதிகளும் மின்சார வசதியும் இல்லாமல் போயுள்ள நிலையில், உண்மையான சேத விவரங்கள் இதுவரை அறியக் கிடைக்கவில்லை.

ஆனால், இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், 105,000க்கும் மேற்பட்ட மக்கள், தமது வீடுகளிலிருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மண்சரிவால் உயிரிழந்தோர், வெள்ளத்தில் மூழ்கிய சிறுமியொருத்தி, உடைந்து வீழ்ந்த சுவரில் சிக்கி உயிரிழந்த பாதுகாப்புக் காவலாளி என, இறந்தோர் காணப்படுகின்றனர். பிலிப்பைன்ஸின் இவ்வாறு உயிரிழந்த 29 பேருக்கு மேலதிகமாக,  தாய்வானில் ஒருவர், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

அதிகளவு சூறாவளிகள் தாக்கும் நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸில், ஆண்டுதோறும் சராசரியான 20 சூறாவளிகள் தாக்குகின்றன. இவற்றின் தாக்கங்களால், நூற்றுக்கணக்கானோர், ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர்.

2013ஆம் ஆண்டு நவம்பரில் தாக்கிய, ஹையன் என்ற உயர் நிலைச் சூறாவளி காரணமாக, 7,350 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமையே, அந்நாட்டின் வரலாற்றில், மிக மோசமான சூறாவளி அழிவாகக் கருதப்படுகிறது.

பிலிப்பைன்ஸில் தற்போது பலவீனமடைந்துள்ள சூறாவளி, சீனாவையும் ஹொங்கொங்கையும் நோக்கிப் பயணிக்கிறது. குறிப்பாக, அதிக சனநெருக்கடி கொண்ட, சீனாவின் தெற்குப் பகுதி நோக்கிப் பயணிக்கும் இச்சூறாவளி, மணிக்கு 175 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதால், அழிவுகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X