2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

முத்தலாக்கைக் குற்றமாக்கும் சட்டத்துக்கு அங்கிகாரம்

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று முறை “தலாக்” எனக் கூறி, பெண்களை விவாகரத்துக்குச் செய்வதற்கு வழிவகுக்கும் முத்தலாக் முறையைக் குற்றமாக்கும் அவசரச் சட்டத்துக்கு, இந்திய மத்திய அமைச்சரவையில், நேற்று (19) அங்கிகாரம் வழங்கப்பட்டது.

முத்தலாக் தொடர்பான சட்டமூலம், மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த அவசர சட்டமூலத்தை, மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.

முத்தலாக் முறை, இந்திய அரசமைப்புக்கு முரணானது என, கடந்தாண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அது தொடர்பான புதிய சட்டத்தை உருவாக்குமாறு, மத்திய அரசாங்கத்துக்குப் பணிப்பரை விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த 28ஆம் திகதி, முத்தலாக் தடைச் சட்டமூலம், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இச்சட்டமூலம், அவசர கதியில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், மக்களவையில் பா.ஜ.கவுக்குப் பெரும்பான்மை உள்ளதால், அச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இச்சட்டத்தின் மூலம், முத்தலாக் நடைமுறையைப் பின்பற்றும் முஸ்லிம் ஆண்களுக்கு, அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்யப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இல்லாததால், சட்டமூலத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இதையடுத்து, சட்டமூலத்தில் சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசாங்கம் முன் வந்தது. எனினும், மாநிலங்களவையில் அத்திருத்தமும் நிறைவேற்றப்படவில்லை. அடுத்தகூட்டத் தொடருக்கு, அச்சட்டமூலம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், சட்டமூலம் நிறைவேறும் வரையில், மாற்று ஏற்பாடாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, முத்தலாக் என்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இதற்கான அங்கிகாரம் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .