2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யேமனில் போர்க் குற்றத்தில் அரபுக் கூட்டணி

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் சவூதி அரேபியா தலைமையிலான அரபுக் கூட்டணி, போர்க் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

'பகலிலும் இரவிலும் வானத்திலிருந்து குண்டுகள் விழும்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையிலேயே இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மே, ஜூன், ஜூலை மாமதங்களில் முன்னெடுக்கப்பட்ட 13 விமானத் தாக்குதல்களை ஆராய்ந்த சர்வதேச மன்னிப்புச் சபை, அதிலிருந்து பெறப்பட்ட முடிவுகளின் பின்னரே தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இராணுவ இலக்குகள் எனத் தெரிவிக்கப்பட்டே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதன் போது 55 சிறுவர்கள், 22 பெண்கள் உள்ளிட்ட 100 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், உயிரிழந்தவர்களில் 12 நாட்களேயான சிசுவொன்றும் உள்ளடங்குவதாகவும் அறிவித்துள்ளது. அத்தோடு, மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலொன்றில் 35 சிறுவர்கள் உள்ளிட்ட 55 பேர் கொல்லப்பட்டிருந்ததாகவும் அது தெரிவிக்கின்றது.

அந்த 13 தாக்குதல்களில் பெரும்பாலானவை,  பொதுமக்களின் இலக்குகளைத் தாக்குவதனூடாகப் பெறப்படக்கூடிய இராணுவ அனுகூலத்துக்காக வேண்டுமென்றோ அல்லது இராணவ இலக்குகளுக்கும் பொதுமக்களின் இலக்குகளுக்குமிடையிலான வித்தியாசத்தை உணராலோ மேற்கொள்ளப்பட்டதாக, அவ்வமைப்புக் குற்றஞ்சாட்டுகிறது. அத்தோடு அவற்றை, 'சட்டரீதியற்றவை" எனவும் அது வர்ணிக்கின்றது.

இவ்வாறான தாக்குதல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தினது மீறல்கள் என்பதோடு, போர்க் குற்றங்களாகுமென, அவ்வமைப்பு மேலும் தெரிவிக்கின்றது.

இந்தத் தாக்குதல்களில் கிளஸ்டர் குண்டுகளும் பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டும் சர்வதேச மன்னிப்புச் சபை, இவையும், தாக்குதலில் பயன்படுத்தப்படும் ஏனைய ஆயுதங்களும் அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டவையாகவோ அல்லது வடிவமைக்கப்பட்டவையாகவோ காணப்படுவதாகத் தெரிவிக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை, இந்தக் கூட்டணிக்கான உதவிகளையும் புலனாய்வு உதவிகளையும் அமெரிக்கா வழங்கிவருவதாகவும் தெரிவிக்கின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .