2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வெனிசுவேலா முழுவதும் 24 மணிநேர முடக்கத்துக்கு அழைப்பு

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் அதிகரித்துவரும் நிலையில், நாளை (20), நாடு தழுவிய முடக்கத்துக்கு, எதிர்க்கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்படுகின்றனர் எனவும் சர்வாதிகாரப் பண்புகளுடன் செயற்படுகின்றனர் எனவும் எதிர்க்கட்சிகளால் குற்றஞ்சாட்டப்படும், ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கும் அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சிகளால் விடுக்கப்பட்ட, முக்கியமான சவாலாக, இது பார்க்கப்படுகிறது.

உணவகங்கள், கடைகள், போக்குவரத்து ஆகியன, முழுமையாக முடக்கப்பட வேண்டுமெனக் கோரியுள்ள எதிர்க்கட்சி, மாற்று அரசாங்கமொன்றை உருவாக்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, தற்போது இருக்கின்றன அரசாங்கத்துக்குச் சமாந்தரமாக, தேசிய இணக்க அரசாங்கமொன்றை உருவாக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், தற்போதுள்ள நீதிபதிகளுக்குப் பதிலாக, புதிய நீதிபதிகளையும் நியமிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள நீதிபதிகள், ஜனாதிபதி மதுரோவுக்கு ஆதரவானவர்கள் என்ற குற்றச்சாட்டுக் காணப்படுகிறது.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட, உத்தியோகபூர்வமற்ற சர்வஜன வாக்கெடுப்பில், 7.6 மில்லியன் மக்கள் வாக்களித்தனர் என, எதிர்க்கட்சி தெரிவித்தது. இந்த வாக்கெடுப்பை, அரசாங்கம் நிராகரித்திருந்ததோடு, சட்டவிரோதமானது என்று அறிவித்தது.

இந்த வாக்கெடுப்பில் வாக்களித்த 7.6 மில்லியன் பேர், இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் பெற்ற 7.7 மில்லியன் வாக்குகளுக்கு அண்மையானதாகும்.

ஆனால், இம்முறை வாக்கெடுப்பில், 2,000 வாக்கெடுப்பு நிலையங்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டன. இது, 2015ஆம் ஆண்டு வாக்கெடுப்பை விட, 7 மடங்கு குறைவானதாகும்.
வெனிசுவேலாவின் பெரும்பான்மையான மக்கள், ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராகவே உள்ளனர். ஆனால், அவர்களின் எதிர்ப்பையும் மீறி, நாட்டின் அரசமைப்பை மீள எழுதுவதற்கான அரசமைப்புச் சபைக்கான நடவடிக்கைகளில், ஜனாதிபதி ஈடுபட்டு வருகிறார். அத்தோடு, 2 வாரகாலப் பகுதியில், இதற்கான வாக்களிப்பு இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .