2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஈரானியப் படைகள் சிரியாவில் இருந்தால் நிதியில்லை’

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவிலிருந்து ஈரானிய ஆதரவுப் படைகளின் முழுமையான வெளியேற்றலை சிரியா உறுதிப்படுத்தா விட்டால், மீள் கட்டுமானத்துக்காக ஒரு தனியான ஐக்கிய அமெரிக்க டொலரையும் ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து சிரியா பெறாதென ஐக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலாளர் மைக் பொம்பயோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கான யூத நிறுவகத்தில் நேற்று உரையாற்றும்போதே குறித்த கருத்தை வெளிப்படுத்திய பொம்பயோ, சிரியாவிலிருந்து ஈரானை வெளியேற்றும் பொறுப்பு சிரியாவில் ஈரான் இருப்பதற்கு காரணமான சிரிய அரசாங்கத்திடம் காணப்படுகின்றது எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஈரான், ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாட் பலமாக இருக்கின்றார் என்பதை ஏற்றுக்கொண்ட பொம்பயோ, தனது முன்னைய நிழலுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், சிரியப் பிரச்சினையில் அமைதியான அரசியல் தீர்மானமொன்று, சிரியாவிலிருந்து அனைத்து ஈரானிய, ஈரானிய ஆதரவுப் படைகளை வெளியேற்றுதலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிரியாவில் ஈரான் இருந்தால் தனது வைரி நாடான இஸ்ரேலுக்கெதிராக புதிய முனையொன்றை ஈரான் திறக்குமென பொம்பயோ எச்சரித்துள்ளார். 

எவ்வாறெனினும், முன்னாள் சோவியத் ஒன்றியத்துக்கு வெளியேயான தனது ஒரே நிரந்தரமான இராணுவத் தளத்தை சிரியாவில் கொண்டிருக்கும் ரஷ்யாவை சிரியாவிலிருந்து வெளியேறுமாறு பொம்பயோ வற்புறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஈரானின் நீண்ட கால விமர்சகரான ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், ஈரானிய எல்லைகளுக்கு வெளியே ஈரானியப் படைகள் இருக்கும் வரைக்கும் சிரியாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் இருக்கும் என கடந்த மாதம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .