2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’ஜெயலலிதாவின் இடத்துக்கு யாருமில்லை’

Editorial   / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் செயலாளராக, சசிகலா நியமிக்கப்பட்டமை செல்லாது என்றும் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி, இனி யாருக்கும் வழங்கப்படமாட்டாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

அ.தி.மு.கவின் பொதுக்குழுக் கூட்டம், நேற்று (12), முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்றது. இதன்போதே, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தத் தீர்மானம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் இதன்போது நிறைவேற்றப்பட்டன.   கூட்டத்தின் ஆரம்பத்தில், பிரிந்திருந்த இரண்டு அணிகள் இணைந்தமையை பாராட்டியும் ஒரே கட்சியாக இணைந்தமை குறித்தும் தெரிவித்தும், தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதன்முதல் தீர்மானமாக, இரட்டை இலைச் சின்னத்தை மீட்கவேண்டும் என்ற தீர்மானத்தை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். பின்னர், அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. 

அ.தி.மு.கவில், முதலமைச்சர் பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செயற்பட்டு வந்த 2 அணிகளும் கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி இணைந்தன.   சசிகலாவை, பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று, இணைப்பு கூட்டத்தின் போத தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, துணை முதலமைச்சராக, ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக்கொண்டார்.  

இந்நிலையில், கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதிக, அ.தி.மு.க நிர்வாகிகள் கூடி, பொதுக்குழுவை விரைவில் நடத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிரகாரம், பொதுக்குழுவை, செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி நடத்துவதற்கு, அறிவிப்பு விடுக்கப்பட்டது.  

இந்தக் கூட்டத்தின் போது, இரட்டை இலை சின்னத்தையும் அ.தி.மு.க என்ற கட்சிப் பெயரையும், தேர்தல் ஆணையகத்தில் இருந்து மீட்பது, ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள், அதே பதவிகளில் தொடர்வார்கள், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மணி மண்டபம் கட்ட ரூ.150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழக அரசாங்கத்துக்கு நன்றி, அ.தி.மு.கவின் நிரந்தர பொதுச்செயலாளர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமே, தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது இரத்து. அவரது நியமனங்கள் ஏதும் செல்லாது, கட்சிக் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் தினகரன் நியமிக்கும் நியமனங்கள் செல்லாது, பொதுச்செயலாளர் வகித்து வந்த அதிகாரம், ஒருங்கிணைப்பாளர் ஓ.பிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

இதன்போது உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-  

“ஓராயிரம் தினகரன்கள் வந்தாலும், அ.தி.மு.க.வை அசைக்க முடியாது” என்று கூறினார்.  

“இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தை தடுத்து நிறுத்தி விடலாம் என்று சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால், நீதிமன்றம், இந்தத் தடையை அகற்றியுள்ளது. இதுவே நமது முதல் வெற்றி. சிலர், நம்மை, அழித்து விடலாம், விரட்டி விடலாம் என்று நினைக்கிறார்கள். யார் நினைத்தாலும் நம்மை அழிக்க முடியாது. 

 “அரசியல் வரலாற்றில் பிரிந்த இயக்கங்கள் ஒன்று சேர்ந்ததாக வரலாறு இல்லை. ஆனால் நாம் ஒன்று சேர்ந்து இருக்கிறோம். ஆண்ட கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை. ஆனால், அ.தி.மு.க. மட்டும்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து, இந்தச் சாதனையை படைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.   

‘பொதுக்குழு  தீர்மானம் செல்லாது’

அ.தி.மு.க பொதுக் குழு தீர்மானம் செல்லாது என்றும் பொதுமக்கள், தொண்டர்களுடன் இணைந்து, இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையைத் தொடங்கிவிட்டேன் என்றும், டி.டி.வி தினகரன் சவால் விடுத்துள்ளார். 

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,  

“கட்சியின் பொதுச் செயலாளர்தான் பொதுக் குழுவை கூட்ட முடியும். அவ்வாறு இல்லை என்றால், துணை பொதுச் செயாலாளரான நான்தான், பொதுக் குழுவை கூட்ட முடியும். இது, இரண்டும் இல்லாத இந்த பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது. 

“இரட்டை இலை முடங்கக் காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வமே, சின்னத்தை மீட்கத் தீர்மானம் போடுகிறார். இந்தத் தீர்மானங்கள் செல்லுபடியாகும் முடிவை உயர் நீதிமன்றம் எடுக்கும். 

“துரோகமும், துரோகமும் இணைந்து ஆட்சி நடத்துவதை, மக்கள் விரும்பவில்லை. நடைபெறுவது, ஜெயலலிதா ஆட்சி அல்ல. தேர்தல் நடத்தால், அவர்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. தேர்தலில் நிற்க, சில அமைச்சர்கள் பயப்படுகிறார்கள். 

“தேர்தல் களத்தில், எங்களுக்கு போட்டி தி.மு.கதான். நாங்கள், தி.மு.கவுடன் கைகோத்துள்ளதாக, சிலர் பொய் பிரசாரம் செய்கிறார்கள். 

“எங்களிடம் 21 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளதால், பெரும்பான்மை இல்லாத இந்த ஆட்சியின் மீது, ஆளுநர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். இல்லை என்றால், அடுத்த நடவடிக்கையில் இறங்குவேன்” என்று அவர் கூறியுள்ளார்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .