2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாட்டுக்கு 70ஆவது பட்ஜெட்; நல்லாட்சியின் கன்னி பட்ஜெட்

Kanagaraj   / 2015 நவம்பர் 20 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா திபான்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சியின் கன்னி, வரவு-செலவுத்திட்டம், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில், இன்று வெள்ளிக்கிழமை (20) பிற்பகல் 2 மணிக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நல்லாட்சிக்கு இது கன்னி, வரவு- செலவுத்திட்டமாக இருந்தாலும், நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் சமர்ப்பிக்கப்படுகின்ற 70 வரவு- செலவுத்திட்டமாகும்.

கன்னி, வரவு-செலவுத்திட்டத்துக்கு அங்கிகாரம் பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்றும் நடத்தப்படும்.

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீண்டகால, மத்தியகால வேலைத்திட்டங்களை முன்வைத்து பட்ஜெட் ஒத்திகையைப் பார்த்தார்.
இந்நிலையிலேயே, அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வரவு- செலவுத்திட்டத்தின் மீது பாரிய எதிர்பார்ப்புகள் இருந்த போதிலும், அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரிக்குறைப்பு அறிவிப்புகள் விடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகத் தென்படுகின்றன என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளும், ஆடம்பரப்பொருட்களுக்கான வரிகளும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருகின்ற 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம், பட்ஜெட் மரபுப் பெட்டியில் வருமா அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் போல கோவையில் வருமா என்பதற்கெல்லாம் இன்று 2 மணிக்கே விடை கிடைக்கும்.

இது இவ்வாறிருக்க, வரவு- செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நிறைவடையும் வரையிலும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில், தங்களுடைய அமைச்சுப்பணிகளை நாடாளுமன்றத்தில் வைத்தே முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக  சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை 2.00க்கு நாடாளுமன்றம் கூடும். அதன் பின்னர், 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம்  சமர்ப்பிக்கப்படும்.
வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் மீதான இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், நாளை 21ஆம் திகதி சனிக்கிழமை முதல் டிசெம்பர் மாதம் 02ஆம் திகதி வரை 09 நாட்களுக்கு நடைபெறும்.

இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசெம்பர் 02ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறும்.
வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் டிசெம்பர் 03ஆம் திகதி வியாழக்கிழமை  முதல்  19ஆம் திகதி சனிக்கிழமை வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர 15 நாட்களுக்கு இடம்பெறும்.

மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு  19ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறும்.
வரவு-செலவுத்திட்டம் நிறைவடையும் வரை நாடாளுமன்ற அமர்வு முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7 மணிவரையும் நடைபெறும்.

டிசெம்பர் 02 மற்றும் 19ஆம் திகதிகளில் சபை ஒத்திவைப்பு வேளையின் பிரேரணை இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, ஆறு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, புதன்கிழமை (18) இரவு விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது தொடர்பில் நேற்று ஆராயப்பட்டது. எனினும், இச்செய்தி அச்சுக்குப்போகும் வரை அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு வெளியாகவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .