2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பேரழிவு

Kogilavani   / 2016 மே 20 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரிக்துள்ளது. இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, 414,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மலையகத்தில் மண்சரிவுகளும், தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளமும் சூழ்கொண்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாகப் பாதிப்படைந்துள்ளது. இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமன்றி, அவர்களின் உறவினர்கள் மற்றும் துயர்பகிரச் செல்வோரும் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

பாரிய அழிவுகளை ஏற்படுத்திய அரநாயக்க, சாமசர மலைச்சரிவில் சடலங்கள் புதையுண்டுள்ளன. அந்த மலையின் ஒருபகுதி சரிந்து, மூன்று கிராமங்களின் மீது விழுந்ததில் புதையுண்டவர்களில் 144 பேர் தொடர்பில், எதுவிதமான தகவல்களும் இல்லை என்றும் 19 பேரின் சடலங்கள் மட்டுமே, நேற்று வியாழக்கிழமை மாலை வரையிலும் மீட்கப்பட்டுள்ளன.

அரநாயக்க, சாமசர மலை சரிந்து வருவதால்,  மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படைவீரர்கள் மற்றும் பொலிஸாரும், பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அரநாயக்கவிலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்த 135 வீடுகள் புதையுண்டுள்ளனவெனவும், அவ்வீடுகளில் வசித்தோரது 19 சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனவெனவும் கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஜகத் மகேந்திர கூறினார்.
குறித்த கிராமங்களில் வசித்த 220 பேர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை என்றும் குறித்த கிராமங்களைச் சேர்ந்தவர்களும் அயல் கிராமங்களைச் சேர்ந்தவர்களுமென சுமார் 1,700பேர், 9 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜகத் மகேந்திர கூறினார்.

அரநாயக்க, போடாபே மலை மற்றும் ஜனபத மலை ஆகியனவும் மணிசரிவுக்கு உள்ளாகும் நிலையில் உள்ளதாகவும் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களைத் தொடர்ந்து அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகளை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட புளத்கொஹுபிட்டிய, களுபஹன, அரந்தர தோட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக, காணாமல் போனவர்களில், மேலும் ஐவரது சடலங்கள், நேற்று (19) மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மலைப்பாங்கான பிரதேசங்களில் வாழ்வோர், அந்த மலையில், இயற்கைக்கு அப்பாலான மாற்றங்கள் தென்பட்டால், அப்பகுதியிலிருந்து விலகி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இரத்தோட்டை, பம்ரபகலவத்தையில் லயன் குடியிருப்பின் மீது, நேற்றுமாலை மரம் முறிந்து விழுந்ததில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென இரத்தோட்டை பிரதேச செயலாளர் ஜீ.பீ.விஜேபண்டார தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள தாழ்நிலப்பிரதேசங்களும் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. பிரதான ஆற்றுகளின் நீர்மட்டம் குறையாமல் உயர்ந்துகொண்டே செல்வதனால், வெள்ளநீர் கிராமங்களுக்குள் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

சில கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. அவை தொடர்பில் துல்லியமாக தகவலைப் பெறமுடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது.

களனி கங்கை பெருக்கெடுத்ததுடன் அம்பதலே தண்ணீர் சுத்திகரிப்பு நிலையமும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. அங்கு, வெள்ளத்தின் மட்டம் இன்னும் இரண்டு அடிக்கு உயருமாயின் நீர் விநியோகம் முற்றுமுழுதாக பாதிக்கும் என்று அம்பதலே நீர்சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கை முகாமையாளர் பியல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம், சூறாவளியாக மாறி, காங்கேசன்துறையிலிருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது என வளிமண்டளவியல் திணைக்களம் கூறுகிறது. 'ரோஅனு' என்று பெயரிடப்பட்டுள்ள மேற்படி சூறாவளி, இலங்கையிலிருந்து தொலைவாகப் பயணித்துக்கொண்டிருக்கின்ற போதிலும், காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிக்குமென திணைக்களம் கூறியது.

அத்துடன், தென்மேற்குப் பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்றும் இது, 100 முதல் 150 மில்லிமீற்றர் வரை மழைபெய்யும் வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் கூறியது. இதேவேளை, சீரற்ற காலநிலையுடன் கூடிய அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, 99 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த நான்கரை இலட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கம்பளை தொலஸ்பாகையில் பேரவில மலைவீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால், அந்த பிரதேசத்தைச் ரேச்ந்த 195 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர், அங்கிருந்து வெளியேறமுடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர் என்று இஹலகோரள பிரதேசசெயலாளர் மங்கள விக்ரமராச்சி தெரிவித்தார்.

சுமார் 5 ஏக்கர் பிரதேசத்திலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது என்றும், கிராமத்தில் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கு மாற்று வீதிகளை வெட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள கர்ப்பிணி தாய்மார்கள் சகலரும், அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று தங்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற விசேட கூட்டத்தின் போது, நிதியொதுக்கீடுகளை பிரச்சினையாக்கிக் கொள்ளவேண்டாம் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரங்களை வழங்குமாறும், எவ்விதமான தாமதங்களையும் மேற்கொள்ளவேண்டாம் என்றும் உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .