2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வித்தியா கொலை வழக்கில் மீண்டும் திருப்பம்?

Princiya Dixci   / 2016 மார்ச் 22 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் 11ஆவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டவரும் கொலைச் சம்பவத்தை நேரில் கண்டவருமான நபர், அரச தரப்பு சாட்சியாக மாறவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

இதற்கான ஏற்பாடுகளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அத்தகவல் தெரிவித்தது.

மேற்படி கொலைச் சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்தச் சந்தேகநபர்கள் 10 பேருக்கு எதிராகவும், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில், தனியாக வழக்கு நடைபெற்று வருகின்றது. 

இந்நிலையில், உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவர், இந்த வழக்கில் 11 ஆவது சந்தேகநபராக  குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால், கடந்த 3ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். இவரை, இவ்வழக்கின் ஏனைய நபர்களுடன் சேர்த்து மன்றில் ஆஜர்படுத்தாமல், குற்றப்புலனாய்வுப் 
பொலிஸார் அவரை, இரகசியமான முறையில் வேறு ஒரு தவணையில் மன்றில் ஆஜர்படுத்தி வந்தனர்.  

இந்நிலையில், வழக்கின் 11ஆவது சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (21),  குற்றப்புலனாய்வுப் பொலிஸார் ஆஜர்படுத்தினர். 

சந்தேகநபரை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏம்.எம்.எம்.றியால் உத்தரவிட்டார். இந்தச் சந்தேகநபர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த 11ஆவது சந்தேகநபரே, கொலை நடைபெறுவதற்கு முன்னைய தினத்தன்று, மற்றைச் சந்தேகநபர்களுக்கு மதுபானம் மற்றும் கஞ்சா ஆகியவற்றைக் கொண்டு சென்று வழங்கினார் என, குற்றப்புலனாய்வு பொலிஸார் கடந்த 4ஆம் திகதியன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஏனைய 10 சந்தேகநபர்களும் எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி, வன்புணர்வுக்குட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவியான வித்தியா கொலை வழக்குத் தொடர்பில், இதுவரையில் 11 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், இந்த வழக்குத் தொடர்பிலான டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை, சான்றுப்பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கை என்பன இதுவரையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .