2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி

Kogilavani   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கோகிலவாணி கனேஷன், 
சுக்ரி

பெண்கள், மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெற்றுவருகின்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  நாடு தழுவிய ரீதியில் விழிப்புணர்வு பேரணிகளும் விழிப்புணர்வு கூட்டங்களும் இன்று இடம்பெற்றன.

 'நூறு கோடி மக்கள் எழுக'  எனும் உலகளாவிய பிரச்சாரத்திட்டத்தின் கீழ் இவ்விழிப்புணர்வு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, புத்தளம், கொழும்பு ஆகிய பிரதேசங்களில்  பெண்ணிய செயற்பாட்டு அமைப்புகள் பல இணைந்து பெண் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.

இந்நிலையில், 'பெண்களுக்கு எதிரான வன்முறைகளற்ற வாழ்வை கொண்டாடுவோம்- நூறுகோடி மக்களின்; எழுச்சி' என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பில் பெண் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு, அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ் ஊர்வலமானது மட்டக்களப்பு திருகோணமலை வீதி- பார் வீதி சந்தியில் இடம்பெற்றது.

மட்டக்களப்பில் மூன்று வெவ்வேறு சந்திகளிலிருந்து ஊர்வலமாக வந்த பெண்கள் திருகோணமலை வீதி- பார் வீதி சந்தியில் ஒன்று கூடி பெண் வன்முறைகளுக்கு எதிரான பாடல்களை இசைத்தாக இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, யாழ்.மாவட்ட பெண்கள் சமாசம் ஏற்பாடுசெய்திருந்த கூட்டம் யாழ். சட்டநாதர் சிவன் கோயிலின்; அருகில் உள்ள திவ்ய ஜீவன மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பது தொடர்பான 10 உறுதிமொழிகள் எடுக்கப்பட்டுள்ளன.

 'பிள்ளை வளர்ப்பிலே ஆண் பெண் பேதங்கள் அகற்றிடுவோம், அடுப்படைக் கல்வியை விடுத்து ஆளுமைக் கல்வியை பெண்ணிற்கும் உரியதாக்குவோம், 'காட்சிப்பொருளே பெண்' என்ற பார்வையை தவிர்த்து மனித உயிரென்று நேசித்திடுவோம், பணப்பொருத்தம் என்பதை தாண்டி மனப்பொருத்தம் என்பதே திருமணத்தின் பொருத்தமாய் இருக்கட்டும், பெண் என்றால் தாழ்ந்தவள் என்ற மனப்பாங்கில் மாற்றத்தை உண்டாக்குவோம், அடக்குமுறை என்று தெரிந்தும் அடங்கியே வாழ்வதை முற்றுமாய் தடுத்திடுவோம், ஆணிற்காய் மட்டுமே பெண் என்றில்லாமல் தனித்தன்மையோடு வாழ்வோம், தவறென்று தெரிந்தால் தட்டிக்கேட்கும் மனப்பாங்கை எம் விடுதலைக்காய் கட்டி எழுப்புவோம், கல்வி எனும் ஒளியினால் தன்னம்பிக்கை எனும் திரியினால் பெண் வன்முறை எனும் இருளினை முயற்சியால் முறியடிப்போம்' ஆகிய உறுதிமொழிகள் இதன்போது எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பெண்கள் சமாசத்தின் தலைவி ஸ்ரீதரன் ஈஸ்வரி தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 'யாழில் இடம்பெற்றுவரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதே இக்கூட்டத்தின்' பிரதான நோக்கம் என்றார்.

இதேவேளை, திருகோணமலை கணினி வாசகர் வட்டம், புலிகுட்டி பஜார் மாதர் கிராம அபிவிருத்தி சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த பெண் விழிப்புணர்வு நிகழ்வு திருகோணமலை புலிகோட்டை பஜார் மைதானத்தில் இடம்பெற்றது.

விழுதுகள் ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் புத்தளம் கிளையினாலும் சூரியன் பெண்கள் கூட்டமைப்பினாலும் புத்தளம் நகர மண்டபத்தில் பெண் விழிப்புணர்வு தொடர்பான கலை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இவ்விழிப்புணர்வு நிகழ்வு, குறித்து விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் பிரதம நிறைவேற்று அலுவலரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான சாந்தி சச்சிதானந்தன் தெரிவிக்கையில்,

'பெண் வன்முறைக்காக குரல் கொடுக்கும் நூறுகோடி மக்களும் இன்று எழவேண்டும். பெண்கள் மீதான வன்முறை என்பது நாகரீகமற்ற சமூகத்தின் வெளிப்பாடு. அதைப்பற்றி பேசி பேசி அழுத்து போய்விட்டது. இனி அதைப்பற்றி பேசவே தேவையில்லாத அளவிற்கு பெண் வன்முறையை ஒழிப்பதற்காக நான் இன்று எழுகிறேன்' என தெரிவித்தார்.

இவ் விழிப்புணர்வு நிகழ்வு இன்று மாலை கொழும்பிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பு: சுக்ரி, ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரி.லோஹித், சிஹரா லத்தீப்







யாழ்ப்பாணம்: சுமித்தி





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .