2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வடக்கில் மீள்குடியேற்றம் 98 சதவீதம் பூர்த்தி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 03 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வட மாகாணத்தில் 95 - 98 சதவீத மக்கள், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு செயளாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களுக்காக இராணுவத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 101 வீடுகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (03) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வீடுகளின் உரிமையாளர்களுக்கு உறுதிப்பத்திரங்களைக் கையளித்தார்.

முல்லைத்தீவு படைத்தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவத்தினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீடுகளுக்கு அரசாங்கத்தினால் ஒரு வீட்டுக்கு மூன்று இலட்சத்து 75ஆயிரம் ரூபா வீதம் செலவிடப்பட்டுள்ளது.

கேப்பாபிளவில் மீள்குடியேறிய மக்களுக்காக இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் உதவியின் கீழ் ஏற்கெனவே 50 வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாகவே 101 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வியாழக்கிழமை (03) கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாதுகாப்பு செயலாளர், குறித்த பிரதேசத்தில் மூன்றாம் கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ள 141 வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
 
இதனையடுத்து மக்கள் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், கேப்பாபிலவில் மீள்குடியேறிய மக்களுக்காக மூன்றாம் கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ள 141 வீடுகளுக்குமான நிதியினை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதுடன் இராணுவத்தின் புரண ஒத்துழைப்புடன் இந்த வீடுகளும் விரைவில் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்படும் என்றார்.
 
அத்துடன், இந்த பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர். இவை தொடர்பில் அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் இக்குறைபாடுகளும் தீர்த்து வைக்கப்படும் என்று கோட்டாபய ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க, முல்லைத்தீவு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கிரமரத்ன, 592ஆவது படைப்பிரிவின் தளபதி கேணல் செனவிரத்ன, முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வெதநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .