2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இரண்டாண்டு நிறைவும் மோடியின் ஆட்சியும்

Thipaan   / 2016 மே 30 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தின், லோக்சபாவில் அறுதிப் பெரும்பான்மையுள்ள அந்த அரசாங்கம், ராஜ்ய சபையில் பெரும்பான்மை இல்லாமலே, இந்த இரண்டு ஆண்டுகளையும் நிறைவு செய்திருக்கிறது. பிரதான கட்சியாக இருக்கும் காங்கிரஸ், எதிர்கட்சியாக வர முடியாத நிலையில், அக்கட்சியின் ஒத்துழைப்பு மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கவில்லை. நில எடுப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை, மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஏன், குடியரசுத் தலைவர் உரையில் திருத்தம் கொண்டு வந்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ராஜ்ய சபையில் நிறைவேற்றவே செய்தன. அப்படியொரு தர்மசங்கடத்தை பா.ஜ.க அரசாங்கம் சந்தித்தது. பொருள் மற்றும் சேவை வரிச் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடியாமல் இன்னமும் தவித்துக் கொண்டிருக்கிறது. இரு அவைகளிலும் தனிப் பெரும்பான்மை இல்லாதது, மத்திய அரசாங்கத்துக்கு இந்த இரு ஆண்டுகளில் சட்டம் இயற்றுதலில் சில சிக்கல்களை உருவாக்கி விட்டதென்பது உண்மை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாண்டு ஆட்சியில், தொழில் வளர்ச்சி, நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, விலை வாசி நிலைமை, நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைவு, அந்நிய முதலீடுகள் 44 சதவீதம் வரை உயர்ந்துள்ளமை போன்ற பல சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடியும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் மார்தட்டிச் சொல்கின்றனர். 'ஊழல் ஒழிப்பு' இரண்டு ஆண்டு காலத்தில் தீர்மானமாக நடைபெற்றுள்ளது  என்றும் 'மோடி தலைமையிலான ஆட்சி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகவில்லை' என்றும் கூறியிருக்கின்றனர். மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களில் கூட 'ஊழலற்ற ஆட்சியை மத்தியில் நடத்துகிறோம். அதே போல் மாநிலத்திலும் ஊழலற்ற ஆட்சிக்கு பா.ஜ.கவுக்கு வாக்களியுங்கள்' என்ற பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்றனர். தமிழகத்திலும் கூட, பா.ஜ.கவினரும் அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவும் தேர்தல் பிரசாரத்தில் இதனையே பேசினர். 2-ஜி அலைக்கற்றை ஊழல், பொதுநலவாய விளையாட்டு ஊழல், நிலக்கரி பேர ஊழல் போன்ற எந்தவொரு ஊழல் புகாரும் மத்திய அரசாங்கத்தில் எழவில்லை என்பது, இவ்வரசாங்கத்தின் இரண்டாண்டு சாதனைகளில் முக்கியமானது என்றே கூற வேண்டும்.

திட்டங்கள் என்று பார்த்தால், மூன்று முக்கிய மக்கள் மயமான திட்டங்களைச் சுட்டிக்காட்டலாம். முதலாவதாக, பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா, அதாவது வங்கிக் கணக்குகள் ஆரம்பிக்கும் திட்டம் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் 50க்கும் மேற்பட்ட திட்டங்களில் இத்திட்டம் மிக முக்கியமானது. ஏனென்றால், சுமார் 21 கோடி புதிய வங்கிக் கணக்குகள் மூலம், 34 ஆயிரம் கோடி ரூபாய் வைப்பை, கடந்த இரு ஆண்டுகளில் பெற முடிந்திருக்கிறது. 'கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வைப்புச் செய்வேன்' என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார் மோடி. அதை சாதிக்க முடியவில்லை என்றாலும் ஆட்சிக்கு வந்தவுடன் கறுப்புப் பணத்தை மீட்க 'சிறப்புப் புலனாய்வுக் குழு' அமைத்தது, கணக்கில் காட்டப்படாத 21 ஆயிரம் கோடி ரூபாயை வெளிக்கொண்டு வந்தமை, 'கறுப்புப் பண மீட்பு' விடயத்தில் அரசாங்கம் நிகழ்த்திய இரண்டாண்டு சாதனை என்று கூறலாம். இரண்டாவதாக 'நேரடி மானியம்' அளிக்கும் திட்டம். 42 அரச திட்டங்கள் மூலம் மக்களுக்குச் சென்றடையும் உதவித் தொகைகள், மானியங்கள் போன்றவற்றை ஆதார் வங்கி கணக்குகளுடன் இணைத்து, நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தியிருப்பது நல்ல முயற்சி. மன்மோகன்சிங்கின் ஆட்சியிலேயே இத்திட்டம் தொடங்கப்பட்டது என்றாலும், 26 கோடிக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை ஆதர் எண்ணுடன் இணைத்து, சாமானிய மக்களுக்கும் அரச மானியம் நேரடியாகச் செல்ல வழி வகுத்தது. மூன்றவதாக, பிரதமர் மோடியே முன்னின்று நடத்திய 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ், இதுவரை 176.8 இலட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

பிரதமரின் தனிப்பட்ட முயற்சியினால் வெற்றி பெற்ற திட்டம், மக்களிடம் குறிப்பாக, ஏழை எளிய மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தேர்தல் பாதையை எடுத்துக் கொண்டால், இந்த இரண்டாண்டுகளும் ஏற்றத் தாழ்வுகள் உள்ள ஆண்டுங்களாகவே பா.ஜ.கவுக்கு அமைந்து விட்டன. இந்தியத் தலைநகரான டெல்லியில், பா.ஜ.கவால் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. அங்கு, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடித்து விட்டார். பீஹாரில் 'மெகா கூட்டணி' அமைத்து, நிதிஷ்குமார் ஆட்சியைப் பிடித்து விட்டார். அங்கும் பா.ஜ.க வெற்றி பெற முடியவில்லை. இதில் குறிப்பாக பீஹாரில் பிரதமர் நரேந்திரமோடி தன் 'கௌரவப் பிரச்சினையாக' எடுத்துக் கொண்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார் என்பதை மறப்பதற்கில்லை.

ஹரியானாவிலும் ஜம்மு மற்றும் காஷ்மீரிலும் வெற்றி பெற்றிருக்கிறது. மஹாராஷ்ட்ராவில் தப்பித்தும் பிழைத்தோம் என்று வெற்றி பெற்றது. தமிழகத்தில் வெற்றி பெறமுடியவில்லை. மேற்குவங்கத்தில், ஏற்கெனவே இருந்த சட்டமன்ற உறுப்பினர்களை இழக்க நேர்ந்து விட்டது. கேரளாவில் மட்டும் ஒரு சட்டமன்ற உறுப்பினரைப் பெற்று புதிய கணக்கை பா.ஜ.க தொடக்கியிருக்கிறது. புதுச்சேரியிலும் வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சியாக இருக்கும் இடங்களில் பெற முடிந்த வெற்றியை, மற்ற மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் பா.ஜ.கவால் சாதிக்க முடியவில்லை. ஆனாலும், தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தோல்விலையைத் தழுவி வருவதும் அந்தக் கட்சிக்குத் தலைமை, ராகுல் காந்தியா அல்லது சோனியா காந்தியா என்று நீடிக்கும் குழப்பமும் பா.ஜ.கவுக்குச் சாதகமான அம்சங்களாக இருக்கின்றன.

ஆனால், பா.ஜ.கவின் வெற்றிக்குப் பாதகமான அம்சங்கள் என்பது, பா.ஜ.கவினராலேயே அடுத்தடுத்து உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, அக்கட்சியிலுள்ள சிலரின் 'வெறுப்புப் பேச்சுகள்' பிரதமர் மோடியின் வளர்ச்சிப் பாதைக்குத் தடைக்கல்லாக மாறி விடுகின்றன. 'இடஒதுக்கீடு வேண்டுமா அல்லது வேண்டாமா' என்று பா.ஜ.க தலைவர்கள் சிலராலேயே எழுப்பப்பட்ட சர்ச்சை, இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரிடம் செல்வாக்குப் பெற்று, பிரதமர் மோடிக்குச் சவாலாக இருக்கிறது. அண்டை நாடுகளுடனான உறவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முன்னேற்றம் கிடைத்தாலும், பாகிஸ்தானுடனான உறவில் இன்னும் எதிர்பார்த்த உறவை கொண்டுவர இயலவில்லை.

அனைத்துக்கும் மேலாக, ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருக்கும் ராஜனை மாற்ற வேண்டும் என்று, சுப்ரமணியம் சுவாமி நடத்தும் யுத்தம், அரசாங்கத்துக்கொரு தலைவலியாக மாறியிருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ராஜன் தேவை என்ற கருத்து, பல தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்களால் முன் வைக்கப்படுகிறது. அதற்கு வலுச் சேர்க்கும் விதத்தில், மத்திய அரசாங்த்தின் நிலைப்பாடு இருக்குமா அல்லது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் மாற்றப்படுவாரா என்ற சர்ச்சை, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

இதேபோல், நீதித்துறையுடன் இன்னும் எதிர்பார்க்கும் அளவுக்கு இணக்கமான சூழ்நிலை மத்திய அரசாங்கத்துக்கு உருவாகவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறது. குறிப்பாக, 'நீதிபதிகளை நியமிக்க தனிச் சட்டம்' மோடி தலைமையிலானஅரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. அச்சட்டத்தை இந்திய உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவித்து விட்டது. அதன் பின்னர், நீதித்துறை நியமன விவகாரத்தில், மத்திய அரசாங்கத்துக்கும் நீதித்துறைக்கும் இணக்கமாக சூழ்நிலை உருவாகவில்லை. சமீபத்தில் பிரதமர் பங்கேற்ற ஒரு கூட்டத்தில், இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், 'நீதிபதிகளை நியமனம் செய்ய நடவடிக்கை எடுங்கள்' என்று கோரிக்கை வைத்து கண் கலங்கியது ஒன்றே, இதற்கு சாட்சியமாக நிற்கிறது.

இவை எல்லாம் ஒருபுறமிருந்தாலும், பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாண்டு ஆட்சி, கடந்த கால காங்கிரஸ் ஆட்சியை விட வித்தியாசமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது நிஜம். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி லோக்சபாவில் பலமான எதிர்கட்சியாக இல்லாதமை, பா.ஜ.கவுக்குப் மிகப்பெரிய பலம். அதைவிட, தனது பத்தாண்டு ஆட்சியில் (2004 முதல் 2014 வரை) இழந்த நம்பகத்தன்மையை மீட்க முடியாமல், காங்கிரஸ் இன்றுவரை தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இதுவும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்துக்குச் சாதகமான சூழல். காங்கிரஸ் கட்சியின் தேய்மானமும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னேற்றமும், அடுத்த மூன்றாண்டுங்களுக்கும் தொடர்ந்தால், 2019இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.கவுக்குப் பிரதான போட்டி ஏதும் இல்லாமலேயே போய் விட வாய்ப்பிருக்கிறது.

அந்த வாய்ப்பை இன்றைய திகதியில் காங்கிரஸோ, மற்ற எதிர்கட்சிகளோ கெடுக்க முடியாது. ஆனால், பா.ஜ.கவுக்குள்ளேயே இருக்கும் சில தலைவர்களின் 'வெறுப்பு பேச்சுகள்' 'வேண்டாத பேட்டிகள்' பா.ஜ.கவுக்கு இருக்கும் பிரகாசமான வாய்ப்பை கெடுத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பிரதமர் நரேந்திரமோடியின் தோளில் இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .