2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐ.தே.கவே பொதுஜன பெரமுனவின் அதிமுக்கிய ஆதரவாளர்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 மார்ச் 11 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துகள், போதியளவில் சமூகத்தில் கலந்துரையாடப்படவில்லை.   

இதற்கு முன்னர், அப்பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட போதும், அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அவை, பல வாரங்களாக ஊடகங்களில் விரிவாக ஆராயப்பட்டன.  

இம்முறை, இலங்கை விடயத்தில் முக்கிய விடயம் ஒன்று, அப்பேரவையில் இடம்பெற்றது. அதாவது, இலங்கை தொடர்பாக, அப்பேரவையில் இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட பிரேரணையொன்றுக்கு, இலங்கை அரசாங்கம் வழங்கிய அனுசரணையை, இலங்கை அரசாங்கமே கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி வாபஸ் பெற்றது.  

இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்ன என்பதை, இம்முறை ஊடகங்கள் விரிவாக ஆராயவில்லை. அதற்குச் சில காரணங்களைக் கூறலாம். புதிய அரசாங்கத்தைப் பற்றிய பயம், ஒரு காரணமாக இருக்கலாம்.   

அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்குள் இடம்பெறும் சண்டை, எப்போதும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டே இருந்தமையும் இருப்பதும் மற்றொரு காரணமாகலாம்.  

அத்தோடு, மனித உரிமைப் பேரவை கூடி, சுமார் ஒரு வாரத்தில், அதாவது மார்ச் இரண்டாம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, நாடாளுமன்றத்தைக் கலைத்தமையும் ஊடகங்களின் கவனத்தை வேறு திசையில் திருப்பியிருக்கலாம்.   

ஜனாதிபதி, திடீரென நாடாளுமன்றத்தைக் கலைக்கவில்லை; அவர், மார்ச் இரண்டாம் திகதி, அதைக் கலைப்பார் என்பது, பல வாரங்களாக எதிர்பார்க்கப்பட்டு, பேசுபொருளாக இருந்தது; அதுவே நடந்தேறியது.  

அத்தோடு, ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி, பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கான வேட்பு மனுக்கள் இம்மாதம் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானியின் மூலமாகவே, ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்தப் பின்னணியில், மனித உரிமைப் பேரவை, பலரது கவனத்தை ஈர்க்கவில்லை.  

ஆனால், எதிர்வரும் பொதுத் தேர்தல் மேடைகளில், அது பேசுபொருளாகலாம். குறிப்பாக, தமிழ் அரசியல் கட்சிகளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் அதை அரசியலாக்கலாம்.   

பொதுஜன பெரமுன, அத்தோடு, ஐ.தே.கவின் உட்கட்சிப் பூசலையும், தமது அரசியலுக்காகப் பாவிக்கலாம். நாமும், இம்முறை அதையே ஆராயப் போகிறோம்.   

கடந்த காலத்தில், குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒரு முறையாவது, நாம் ஐ.தே.கவின் இந்த உட்கட்சிப் பூசலைப் பற்றி எழுத வேண்டிய நிலைக்கு, அது தொடர்ந்தும் முக்கியத்துவம் பெற்ற விடயமாக இருந்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.  

முறையாகப் பார்த்தல், ஐ.தே.க இம் முறைத் தேர்தல் களத்தில், தைரியத்தை இழக்கத் தேவையில்லை. ஏனெனில், அக்கட்சி 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, வீழ்ந்த அதள பாதாளத்திலிருந்து, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, சற்று மீளெழுந்து இருந்தது.   

அதாவது, ஜனாதிபதித் தேர்தலின் போது, அக்கட்சி 2018ஆம் ஆண்டை விட, இரண்டு மில்லியன் வாக்குகளை அதிகமாகப் பெற்றது. அதை வாக்காளருக்கு எடுத்துக் காட்டி, அக்கட்சி தமது ஆதரவாளர்களைத் தட்டி எழுப்பியிருக்கலாம். அதை விட்டுவிட்டு, அக்கட்சியின் தலைவர்கள், பதவிப் போட்டியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.  

தேர்தல்களின் போது, ஒரு கட்சியின் ஐக்கியம் மிகவும் முக்கியமானதாகும். பதவிக்கு வருவது ஒரு புறமிருக்க, குறைந்த பட்சம் கேவலமான முறையில் தோல்வி அடைவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், ஐக்கியமே முக்கிய காரணியாகத் தேவைப்படுகிறது.   

ஆனால், இதை ஐ.தே.க தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இது, அவர்கள் தமது கட்சி, அதன் ஆதரவாளர்கள் விடயத்திலான தமது கடமையைப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.  

உண்மையிலேயே, இப்போது ஐ.தே.க இரண்டாக பிளவுபட்டுவிட்டது. தற்போது, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஐ.தே.க என்ற கட்சியும் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) என்ற கட்சியும் இயங்கி வருகின்றன.   

இரு கட்சிகளும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட, அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளாகும். போதாக்குறைக்கு, இரு கட்சிகளும் தற்போது இரண்டு வேட்புமனுக் குழுக்களையும் நியமித்து, வேட்பாளர்களைத் தெரிவு செய்து வருகிறார்கள்.  

இந்த உட்கட்சிப் பூசல், கடந்த சில மாதங்களாக ஐ.தே.க ஆதரவாளர்களை மாறி மாறிக் கலக்கமடையவும் ஆறுதல் அடையவும் செய்து கொண்டே வந்துள்ளது.   

கடந்த நவம்பர் மாதம், ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த உடன், தேர்தலுக்கு முன்னர் நிலவிய தலைமைத்துவச் சண்டை மீண்டும் ஆரம்பித்தது; ஆதரவாளர்கள் கலக்கமடைந்தனர்.  பின்னர், அதற்குத் தீர்வாகக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவைப் பொதுத் தேர்தலுக்காகக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணியின் தலைவராக ஏற்றுக் கொண்டார்.   

சஜித்தே கூட்டணியின் வேட்புமனுக் குழுவின் தலைவர் எனவும் பிரதமர் வேட்பாளர் எனவும் சஜித்துக்கு கூட்டணியின் பொதுச் செயலாளரை நியமித்துக் கொள்ள அதிகாரம் இருக்கிறது என்றும் ஐ.தே.க செயற்குழு மூலம், ரணில் அறிவித்தார். சஜித்தும் இணங்கினார்; ஆதரவாளர்கள் ஆறுதல் அடைந்தனர்.  

பின்னர், கூட்டணியின் செயலாளரை சஜித் நியமித்தார். ஆனால், அந்நியமனத்தையும் சஜித் தலைமையிலான வேட்புமனுக் குழுவால் ஐ.தே.க சார்பில் தெரிவு செய்யப்படும் வேட்பாளர்களினது பெயர்களையும் ஐ.தே.க செயற்குழு அங்கிகரிக்க வேண்டும் என, ரணில் விக்கிரமசிங்க செயற்குழு மூலம் அறிவித்தார்.   

அதாவது, சஜித்தை மீண்டும் ஐ.தே.கவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, ரணில் முயற்சித்தார். இதனால் சற்றுப் பதற்ற நிலை ஏற்பட்டது; ஆதரவாளர்கள் மீண்டும் கலக்கமடைந்தனர்.  

ஓரிரு நாள்களில், ஒருவரும் எதிர்பாராத வகையில் சஜித், இதற்கு இணக்கம் தெரிவித்தார். ஆதரவாளர்கள் மனதில், ஒருவித மயக்க நிலை ஏற்பட்டாலும், அவர்கள் ஆறுதல் அடைந்தனர்.   

ஆனால், இம்முறை சஜித் குண்டொன்றைத் தூக்கிப் போட்டார். அவரது தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய, பதிவு செய்யப்பட்ட கட்சியொன்று இருப்பது தெரிய வந்தது. மீண்டும், ஐ.தே.க பிளவுபடும் என, கட்சியின் ஆதரவாளர்கள் கலக்கமடைந்தனர்.  

சஜித்தின் கட்சியை அங்கிகரிக்க வேண்டாம் என, ஐ.தே.க தலைவர்கள் தேர்தல் ஆணையகத்தைக் கேட்டுக் கொண்டனர். எனவே, இரு சாராரும் முட்டி மோதப் போவதைப் போன்ற ஒரு நிலைமை காணப்பட்டது. ஆனால், மீண்டும் சுமுக நிலை ஏற்பட்டது. சஜித்தின் கட்சியை, ஐ.தே.க தலைமையிலான கூட்டணியாக, ஐ.தே.க தலைவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதன் கீழ் இரு சாராரும், தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று ஆதரவாளர்கள் ஆறுதல் அடைந்தார்கள்.   

எனினும், அந்த நிம்மதி ஓரிரு நாள்களே நீடித்தது. கூட்டணி, ஐ.தே.கவின் சின்னமான யானைச் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிட வேண்டும் என, ஐ.தே.க தலைவர்கள் நிபந்தனை விதித்தனர். அதை, சஜித் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தது. மீண்டும் சண்டை தலைதூக்கியது; ஆதரவாளர்கள் குழப்பமடைந்தனர்.  

மீண்டும் வியாழக்கிழமை (05) முன்னாள் அமைச்சரும் ரணிலின் முன்னாள் நெருங்கிய நண்பருமான மலிக் சமரவிக்கிரம, இரு சாராரையும் சமாதானப்படுத்த முன்வந்தார். ரணிலும் அதற்கு இணக்கம் தெரிவித்ததாகத் தெரிய வந்தது. எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர்.   

அத்தோடு, ஐ.தே.க அந்தச் சமாதான முயற்சியைப் புறக்கணித்து, தாம் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதாகத் தேர்தல் ஆணையகத்துக்கு அறிவித்தது. இரு சாராரும் வெவ்வேறு வேட்புமனுக் குழுக்களைக் கூட்டி, வேட்பாளர்களைத் தெரிவு செய்ய ஆரம்பித்தனர்; மீண்டும் பதற்றமும் கலக்கமும் ஏற்பட்டன.  

இந்தச் செயற்பாட்டுத் தொடரைப் பார்க்கும் போது, சஜித்துக்கு அடிக்கடி எதிர்ப்பார்ப்புகளைக் கொடுத்தும் அவற்றைக் கெடுத்தும், அவரது பயண வேகத்தைக் குறைத்தும் இறுதியில் அவரைக் கைவிட்டுவிட, ஐ.தே.க தலைமை நடவடிக்கை எடுத்தது என்றே தெளிவாகிறது.   

ஆனால், சஜித் தமக்கென கட்சியொன்றை வைத்திருப்பதாலும் அவருக்குக் கடந்த நாடாளுமன்றத்தினதும் மாகாண சபைகளினதும் தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றங்களினதும் ஐ.தே.க உறுப்பினர்களின் பெரும்பாலானவர்களும் கட்சியின் ஆதரவாளர்களில் பெரும்பாலானவர்களும் ஆதரவு தெரிவிப்பதாலும் அவரும் தனி வழி போகத் தயாராகவே இருக்கிறார். எனவே, பிளவு உறுதியாகிவிட்டது; இது பொதுஜன பெரமுனவுக்கே சாதகமாகிறது.  

எந்தக் கொள்கை பிரச்சினையும் இல்லாமல் பிரிந்தது ஐ.தே.க

ஐக்கிய தேசிய கட்சியின் பிளவுக்கு காரணம் யார்? ரணில் விக்கிரமசிங்கவா, சஜித் பிரேமதாஸவா?   

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையை ஏற்காது, தமக்கே தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும் எனப் போராட்டத்தை ஆரம்பித்த சஜித்தே காரணம் என ஒரு சாரார் வாதிடலாம்.  

அதேவேளை, 2001ஆம் ஆண்டு முதல், தமது தலைமைக்கு எதிராகக் கட்சிக்குள் எழுந்த போராட்டங்களுக்குப் பொருத்தமான தீர்வைக் காணாது, கூட்டுத் தலைமை, தலைமைத்துவ சபை, அரசியல் குழு போன்ற போலித் தீர்வுகளால் போராட்டக்காரர்களை ஏமாற்ற முயன்ற ரணிலே காரணம் என, மற்றொரு சாரார் வாதிடலாம்.  

இப்போது இரு சாராரும் பிரிந்தே, ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போகிறார்கள். இத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், சுயாதீனக் குழுக்கள் தமது தேர்தல் சின்னம் பற்றிய இறுதி முடிவை, கடந்த திங்கட்கிழமைக்கு முதல், தேர்தல் ஆணையகத்துக்கு அறிவிக்க வேண்டியிருந்தது. அதற்குள் இரு சாராரும், சின்னம் விடயத்தில் ஓர் இணக்கத்துக்கு வர முடியாமல் போயிற்று.  

ஐ.தே.க யானைச் சின்னத்தில் போட்டியிடுவதாகத் தேர்தல் செயலகத்துக்கு, ஏற்கெனவே அறிவித்து இருந்தது. சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி, முன்னர் ‘எமது தேசிய முன்னணி’ என்ற பெயரிலேயே தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதன் பெயரை மட்டுமே சஜித் மாற்றினார்.   

எனவே, அதன் தொலைபேசி சின்னம் தான், ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் கீழ், ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடுவதாக அதன் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, கடந்த திங்கட்கிழமையே தேர்தல் ஆணையகத்துக்கு அறிவித்து விட்டார்.  

2004ஆம் ஆண்டு, கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து விலகியதை அடுத்து, அவ்வமைப்பின் இரு குழுக்களும் எதிர்நோக்கியதைப் போன்றதோர் நிலைமையை, இப்போது ஐ.தே.கவின் இரு குழுக்களும் எதிர்நோக்கியிருக்கின்றன. அதாவது, எவர் எந்தக் குழுவில் உண்மையிலேயே இருக்கிறார் என்ற தெளிவில்லாத நிலைமை உருவாகியிருக்கிறது.  

சிலவேளை, ஒருவர் உண்மையிலேயே ரணில் தரப்பில் இருப்பதோடு, சஜித் தரப்பின் வேட்புமனுப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டு இருக்கலாம். அவர் இறுதி நேரம் வரை, அப்பத்திரத்தில் கையொப்பமிடாது தாமதப்படுத்தி, வேட்பு மனுப்பத்திரத்தை இரத்துச் செய்விக்க முயலலாம். அல்லது, போலிக் கையொப்பமொன்றை வைத்துவிட்டு, சட்டப் பிரச்சினையொன்றை எழுப்பி, பிரச்சினை ஏற்படுத்தலாம்; சஜித்தின் ஆட்களும் இதையே செய்யலாம்.  

1994ஆம் ஆண்டு, அது போன்றதோர் சம்பவம் இடம்பெற்றது. அப்போது கெஹெலிய ரம்புக்வெல்ல, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருந்தார். அவ்வாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்காக, அவரது பெயர் ஸ்ரீ ல.சு.க வேட்புமனுப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டு இருந்தது.   

அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதி நாளன்று, காலை 11.30 வரையிலும் வேட்பு மனுப்பத்திரத்தில் கையொப்பமிடவில்லை. அன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர், வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேண்டியும் இருந்தது. அவர் இருக்கும் இடத்தையும் எவராலும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. அக்காலத்தில், அலைபேசிகள் நாட்டில் பாவனையில் இருக்கவும் இல்லை.  

இறுதியில் சந்தேகம் கொண்ட ஸ்ரீ ல.சு.க தலைவர்களில் ஒருவரான அநுருத்த ரத்வத்தே, புதிதாக வேட்புமனுப் பத்திரமொன்றைத் தயாரித்து, நண்பகல் 12 மணிக்கு முன்னர், வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.   

அவ்வாறு செய்திருக்காவிட்டால், ஐ.தே.க கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்களையும் வென்று இருக்கும். காமினி திஸாநாயக்கவின் ஆலோசனையின் பேரில் கெஹெலிய, ஐ.தே.கவில் இணைந்தே, இவ்வாறு செய்திருக்கிறார் என்பது பின்னர் தெரிய வந்தது.  

சம்பவங்கள் நடைபெற்ற விதத்தைப் பார்க்கும் போது, ஐ.தே.க தலைவர்களில் சிலர், மஹிந்தவுடன் இரகசியத் ஒப்பந்தம் (டீல்) செய்து கொண்டு இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு, உண்மையா என்ற சந்தேகமும் இப்போது எழுகிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .