2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சம்பந்தருக்கு ஜெயலலிதா சொன்ன செய்தி என்ன?

Administrator   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- தெய்வீகன் 

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடைய மரணம், தமிழ் பேசும் மக்கள் அனைவரின் மத்தியிலும் பாரிய தாக்கமொன்றைச் செலுத்தியிருக்கிறது. ‘ஒரு மாநில முதல்வரின் மரணம். அவ்வளவுதானே’என்று சாதாரண சம்பவமாகக் கடந்து செல்ல முடியாத வண்ணம் ஜெயலலிதாவின் மரணம், குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் மத்தியில் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.   

ஜெயலலிதாவின் திருவுருவப் படத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், விளக்கேற்றி வணக்கம் செலுத்தியது முதல், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியுடன் ஜெயலலிதாவின் படத்துக்கு வணக்கம் செலுத்தப்படும் புலம்பெயர்ந்த நாட்டு நிகழ்வுகள் வரை, பல செய்திகள் ஊடகங்களில் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவாகி வருகின்றன.   

ஜெயலலிதா என்பவர் ஓர் அரசியல் பிரமுகராக, பலம்வாய்ந்த அண்டை நாடொன்றின் பலம்மிக்க தலைவராகப் பதவி வகித்திருந்தும்கூட, ஈழத்தமிழர்களது அரசியல் வாழ்வில் அவர் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது யாவரும் அறிந்த விடயம்.   

மாறாக, அவரது வாழ்நாளில் பெரும்பகுதியை ஈழத்தமிழர்களுக்கான விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவராகவும் தமிழ்மக்களுக்கு எதிரான போரும் அதன் விளைவுகளும்கூட ‘சம்பிரதாயபூர்வமானவை’என்று நம்பிக்கை கொண்டவராகவும் தனது கொள்கையை முன்னிறுத்திக் கொண்டிருந்தார்.   
அவரது கடைசிக் காலகட்டங்களில் விடுதலைப் புலிகள் இல்லாத தமிழ்மக்களுக்கு மெல்லிய ஆதரவைக் காண்பிக்கும் முகமாகச் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், அந்த நடவடிக்கைகளைக்கூடத் தமிழகத்தில் செயற்பட்ட ஈழ ஆதரவுக் கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றை வலுவிழக்க செய்வதற்கும் அவற்றுகான ஆதரவுத் தளங்களாகச் செயற்பட்டவற்றைத் தனது பக்கம் நோக்கித் திசை திருப்புவதற்கான வியூகமாகவும் முன்னெடுத்திருந்தாரே தவிர, இதயசுத்தியுடன் ஈழத்தமிழர்களின் விடிவுக்கான வழியொன்றை ஏற்படுத்த வேண்டும் என்றோ, அல்லது அதற்கான தனது பலத்தைச் சுயமதிப்பீடு செய்து கொண்டோ களத்தில் இறங்கவில்லை.   

அவ்வாறு அவர் உணர்ந்திருப்பாரேயானால், ஈழத்தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையிலான காரியங்கள் பலவற்றுக்கு எண்ணி எண்ணி எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம்.  
ஆனால், அவற்றையெல்லாம் அவர் வேண்டுமென்றே நிறைவேற்றாமலிருந்தார். அல்லது, அதனை நிறைவேற்றுவதன் மூலம் தனக்கும் தனது கட்சிக்கும் தனது இருப்புக்கும் ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அந்தச் செயல்களை நோக்கி நகர்வதைத் தவிர்த்திருந்தார்.   

சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான குத்துவெட்டுக்களைப் போதுமானளவு சந்தித்து, அவற்றில் வெற்றிபெற்று, சளைத்துப்போன ஜெயலலிதா, ஒரு காலகட்டத்தில் தனது பார்வையை டில்லியை நோக்கித் திருப்புகிறார்.  

அந்த உயரமான புள்ளியை நோக்கித் தனது அடுத்த கட்டப் பாய்ச்சலை நிகழ்த்துவதற்கு தயாராகிறார். ஜெயலலிதாவின் அந்த நோக்கத்துக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து, அவரது தகுதியை மெச்சி ஆசீர்வாதமும் அளிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பாதையில் பயணிக்கின்றபோது ஈழத்தமிழர் விவகாரம் உட்பட, டில்லியை சங்கடத்துக்கு உள்ளாக்கும் எந்த விடயத்தையும் மிகக் கவனமாகவே கையாளுவதற்கு தீர்மானித்துக் கொள்கிறார்.  சிலவேளைகளில், களநிலைவரங்கள் எல்லை மீறிப்போகின்றபோது, இலேசான நெகிழ்ச்சிப் போக்குகளைக் கடைப்பிடித்திருக்கிறார்.  இது, ஈழத்தமிழர் விவகாரத்தில் மட்டுமல்ல, மாநில - தேசிய ரீதியில் காணப்பட்ட பல்வேறு விடயங்களிலும் அவர், இதுபோன்ற பட்டும் படாத நிலைப்பாட்டை மிகச்சாதுரியமாகக் காண்பித்திருக்கிறார்.   

ஆனால், ஒரு விடயத்தில் மாத்திரம் தெரிந்தே, தனது வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய தவறொன்றை இழைத்த வண்ணமிருந்தார். அதனை ஒருபோதும் அவர் திருத்த முயற்சித்தது கிடையாது. அவ்வாறு திருத்திக்கொள்ள முயற்சித்தால், அது தனது அரசியல் தற்கொலையாகிவிடும் என்ற பயமும் சந்தேகமும் அவரிடமிருந்ததே அதற்குக் காரணமாக இருக்கலாம்.   

அதுதான், இரண்டாம்நிலை தலைமைத்துவம். அல்லது அவருக்குப் பின்னரான தலைமைத்துவத் தெரிவு என்ற விடயம்.   
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னால், மூன்று தசாப்த காலமாகத் தனது கடுமையான முயற்சியினால் கட்டியெழுப்பிய கட்சியும் அந்த கட்சிக்கான ஆதரவும் தன்னுடனேயே மறைந்து கொள்ளவேண்டும். மீறித் தப்பிப் பிழைத்துக் கொண்டால்கூட, தனக்குரிய புகழாக இருந்து விட்டுப் போகட்டும் என்ற மனக்கணக்கோடுதான் அவரது அரசியல் வாழ்க்கை அமைந்திருந்தது.   
அரசியலில் அவர் யாரையும் நம்பவில்லை. சசிகலா என்ற பாத்திரம் இடையில் வந்து இணைந்து கொண்டாலும்கூட அவரைக்கூடத் தனது இரண்டாம்நிலைத் தலைமைத்துவமாக அவர் என்றைக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்தது கிடையாது. ஓ. பன்னீர்ச்செல்வத்தின் தெரிவு என்பது வெறுமனே, வெளியூர் போகும்போது வீட்டைப் பார்த்துக் கொள்ளுமாறு சாவியை கொடுத்து விட்டுப்போகும் வீட்டுப்பாதுகாவலன் போன்ற பதவியே தவிர, வீட்டுக்காரனுக்குரிய பதவி அல்ல அது.   
ஆக மொத்தம், இந்த மரணம் எதிர்பாராதது என்று கூறினாலும் ஜெயலலிதா இன்னும் சில காலம் உயிருடன் இருந்தாலும்கூட, கட்சிக்கென்று ஓர் இரண்டாம் நிலைத் தலைமைத்துவத்தை அவர் நிச்சயம் அறிவித்திருக்க மாட்டார். அவரது கடந்த கால அரசியல் பயணம் அவ்வாறான காட்சிகளைத்தான் காண்பித்திருக்கிறது.   

அவரது மறைவுடன் அ.தி.மு.க சுக்கு நூறாக உடையும் என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்த ஒன்று. அவரைத்தவிர அவ்வாறான உடைவை வேறு யாராலும் சீர் செய்ய முடியாது என்பதும் அவருக்கு நன்றாகத் தெரிந்த ஒன்று.   
“செய்வீர்களா...செய்வீர்களா” என்று அவர் ஒவ்வொரு தடவை தேர்தலில் சென்று வாக்கு கேட்கும்போதெல்லாம், வாக்களித்த மக்களின் ஆதரவு, ஜெயலலிதா என்ற இரும்புச் சீமாட்டியை நோக்கியதாகவே இருந்தது. ‘அ.தி.மு.க என்றால் ஜெயலலிதா; ஜெயலலிதா என்றால் அ.தி.மு.க’ என்ற நிலை அப்படியே இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தார். அதைத்தாண்டி எதையும் எவரும் சிந்திக்க அவர் அனுமதித்ததில்லை.   

தான் இவ்வளவு காலமும் உழைத்துச் சம்பாதித்த பெருங்கனவை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் முழுமையாக நம்பினார். அதனை மூலதனமாகக் கொண்டுதான் தனது மக்கள் பணியை முன்னெடுத்தார்.   
இந்த ஓட்டுமொத்தப் பிடிமானம் சந்தித்துக் கொண்டிருக்கும் சரிவுகள் அல்லது அழிவுகளைத்தான், இன்று தமிழக ஊடகங்கள் நேரலை செய்து கொண்டிருக்கின்றன.   

எம்.ஜி.ஆரின் மறைவின் போதும் இப்படியான ஒரு குழப்பம் காணப்பட்டிருந்ததுதான். ஆனால், சாடை மாடையாக அவர் உயிருடன் இருந்தபோதே காண்பித்திருந்த அடுத்த கட்டத் தெரிவுகள் மக்களுக்கு மெல்லிய தெளிவைக் கொடுத்திருந்தன. அந்தத் தெளிவுதான், அவரது மறைவின் பின்னர், மூத்த அரசியல் தலைவர்கள், ஏன் அவரது மனைவியை விடவும் ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய அரசியல் அங்கிகாரத்தை வழங்கியிருந்தது.   

ஆனால், இன்று நிலைமை அப்படியல்ல; சசிகலா என்பவரை ஜெயலலிதா தனது நெருக்கமானவர் என்று வெளிக்காண்பித்த சம்பவங்கள் அனைத்தும் இன்னமும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் துர் நிகழ்வுகள்தானே ஒழிய வேறொன்றுமில்லை.   

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின்போது உடனிருந்தவராகவும் தான் செய்த அரசியல் அட்டூழியங்களுக்கு துணையிருந்தவராவும்தான் ஜெயலலிதா, சசிகலாவின் நட்பு, மக்கள் மனதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தெரிந்து செய்தாரோ, தெரியமால் செய்தாரோ அதுதான் யதார்த்தம். அதைத்தாண்டி, மக்களை வழி நடத்தும் பெரும் தலைவியாக எல்லாம் சசிகலாவை ஜெயலலிதா கை காட்டவும் இல்லை; சசிகலாவும் அவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தியதும் இல்லை.   

சரி!   இதுவரை இந்தப் பத்தியை வாசித்துக் கொண்டுவரும்போது நிச்சயமாக உங்கள் மனக்கண்ணில் ஒரு நிகழ்ச்சி மௌனமாக உங்களைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை உணர்ந்திருப்பீர்கள்.   

ஆம்!   2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அழிவும் இவ்வாறான ஒரு பேரதிர்ச்சியைத்தான் தமிழ் மக்களுக்கு அளித்தது. அதன் விளைவுகளை இன்றுவரை தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதொன்றும் புதிய செய்தி அல்ல.   

ஆனால், இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை, அதே கசப்பான - கடினமான - அனுபவம் இன்னுமொரு தடவை இடம்பெற வேண்டுமா?   இல்லை என்று பதிலளிப்பதற்குத்தான் எல்லோருக்கும் விருப்பம். ஆனால், களநிலை அப்படியில்லை என்பதைத் தவிர வேறெதனைக் கூறமுடியும்.   

தாயகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அது நான்கு கட்சிகளின் கூட்டணியாகப் பரிணமித்துத் தேர்தலில் போட்டியிட்டு, தமிழர் தாயகத்தின் ஏகோபித்த ஆணையுடன் வெற்றி பெற்றாலும்,   
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இன்று எதிர்க்கட்சி தலைவர்.  

 ஆக, தலைவர் சம்பந்தன் அவர்கள் எப்போது கூட்டமைப்பின் தலைவராகப் பேசுகிறார்? எப்போது எதிர்க்கட்சித் தலைவராகப் பேசுகிறார் என்ற சந்தேகம் வாக்களித்த மக்கள் முதற்கொண்டு எல்லோருக்கும் உண்டு.   

அநேக தருணங்களில் சம்பந்தரின் பேச்சுக்கள் மதத் தலைவர்களின் பேச்சுக்கள் போல, அல்லது ஓர் உளநல மருத்துவர்களின் செய்தி போல காணப்படும். அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பேசுகிறார் என்று நம்ப வேண்டியிருக்கிறது. “ஒற்றையாட்சிக்குள் தீர்வு காணமுடியாது” என்று மேசையில் அடித்துக் கூறுகிறார் என்றால், ‘ஆம், ஐயா கூட்டமைப்பின் தலைவராகக் கூடு தாவிவிட்டார்’ என்று நம்பவேண்டியிருக்கிறது.   

இவரது இந்த அர்த்தநாதீஸ்வர அரசியல் காட்சி இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தமிழ் மக்களின் மத்தியில் அருள் பாலித்துக் கொண்டிருக்கப் போகிறது என்ற முகச்சுளிப்பு மக்கள் மத்தியில் மெல்ல மெல்ல முளை விட ஆரம்பித்து விட்டது.   
அதற்காக, சம்பந்தருக்கு மாற்றாக, ஆரோக்கியமான தலைமைத்துவத்தை, தற்போதுள்ள தமிழ்த் தலைவர்கள் மத்தியில் வேறொருவர் வழங்குவார் என்று இங்கு கூறவரவில்லை. ஆனால், கூட்டமைப்பு தற்போது தனது இரண்டாம்நிலைத் தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்வதற்கு கீறுகின்ற கோடு, இறுதிவரை நீண்டு செல்லுமா? அல்லது அந்தக் கோடு சம்பந்தர் நினைப்பது போன்ற சித்திரத்தை வரையுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.   

இதனைத்தான் சம்பந்தன் இன்று ஆழமாக உணரவேண்டியிருக்கிறது. ஜெயலலிதா போல், அல்லாது சற்று ஓர் அடி முன்னே நின்று, தனக்கொரு தளபதியை உருவாக்கும் வல்லமையுடன் சம்பந்தன் அவர்கள் பகீரதபிரயத்தனங்களை மேற்கொண்டாலும், அதற்கான களநிலையைப் பூரணமாக ஏற்படுத்திக் கொடுப்பவராக சம்பந்தனும் செயற்படுவதாகத் தெரியவில்லை. அவருக்கு அடுத்ததாக தளபதிகளாக வரத்துடிப்பவர்களுக்கும் அதற்கான முயற்சியை மேற்கொள்பவர்களாகத் தெரியவில்லை.   

விடுதலைத் தாகத்துடன் பல்லாயிரக்கணக்கான போராளிகளையும் மக்களையும் இழந்த இனத்தின் விடிவுக்காக பாடுபடுகின்ற மக்கள் பிரதிநிதிகளாகத் தங்களை உணர்ந்து கொள்ளாமல், கூட்டமைப்பைக் கிட்டத்தட்ட தங்களுக்கான விளம்பரக் கம்பனி போல பயன்படுத்துகின்ற கூட்டம் ஒரு பக்கமிருக்க, இன்னொரு தரப்பு எவ்வளவுதான் முயற்சி செய்தும் மக்கள் மத்தியில் தங்களுக்கான ஆதரவை வளர்த்துக் கொள்ளும் சூத்திரம் தெரியாதவர்களாகவும் அந்த ஆதரவு நிலையை வளர்த்துக் கொள்வதற்கு மக்களுடன் வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ள முடியாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.   

ஆக, சம்பந்தனும் தனக்கு பின்னராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான ஈழத்தமிழர்கள் போலவும், ஜெயலலிதாவுக்குப் பின்னரான அ.தி.மு.க போலவும் அநாதைகளாகக் கைவிடப்படுவதைத்தான் தீர்க்கமாக விரும்புகிறாரா? அவ்வாறான ஓர் எண்ணமிருப்பின், இதிலிருக்கக்கூடிய விசித்திரமான உண்மையை அவர் முதலில் தெரிந்து கொள்ளுதல் நல்லது.  

எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் அப்பால் பிரபாகரன் அவர்களும் ஜெயலலிதாவும் தாங்கள் சார்ந்த மக்களுக்கு மிகப்பெரிய அடையாளங்களைக் கொடுத்து விட்டுத்தான் சென்றிருக்கிறார்கள். தங்களால் கட்டியெழுப்பப்பட்ட ஆதரவுத் தளத்தை சரியாக நிறுவன மயப்படுத்தவில்லையே தவிர, அவர்கள் மக்களின் இதயங்களோடு பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.   

ஆனால், கூட்டமைப்புச் செய்ததாகக் கூறும் சாதனைகளை கூட்டமைப்பு நம்புமளவுக்கு மக்கள் இன்னமும் நம்புவதற்கு ஆரம்பிக்கவுமில்லை; சம்பந்தரது இதயம் இன்னமும் தமிழ்மக்களுடன் பேசத்தொடங்கவுமில்லை.   
இந்த நிலையில், இலங்கைத் தமிழர்களது அரசியலின் அடுத்த கட்டத்தைக் கையகப்படுத்துவதற்கு வியூகம் வகுக்கும் ‘சசிகலாக்களை’ சம்பந்தர் உணர்ந்து கொள்வாரா?   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .