2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நல்லாட்சி மீதான விமர்சனங்களுக்கான நேரம்

Thipaan   / 2016 மார்ச் 24 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

நல்லாட்சி என்ற கோஷத்தை முன்வைத்து, அப்போதைய சுகாதார அமைச்சரான மைத்திரிபால சிறிசேன, தனது கட்சியின் தலைவரும் அப்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கெதிராக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தபோது, மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்புக் காணப்பட்டிருக்கவில்லை. மாறாக, மற்றொரு தேர்தலில் தோல்வியடைவதிலிருந்து, ரணில் விக்கிரமசிங்க தன்னைக் காத்துக் கொண்டார் என்றே கருதப்பட்டது.

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது மக்களுக்குக் காணப்பட்ட விமர்சனம், மைத்திரிபால சிறிசேனவுக்கான வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவு, புதிதாக வாக்களிக்கத் தொடங்கிய இளைஞர்களைக் கவர்ந்தமை ஆகியவற்றினால், மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதியாக முடிந்தது. அதைத் தொடர்ந்து, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கமும் அமைந்தது. அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தலிலும் கூட, மைத்திரிபால சிறிசேனவின் மறைமுக ஆதரவைப் பெற்றிருந்த ஐக்கிய தேசிய முன்னணி, வெற்றிபெற்றிருந்தது.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றமை தொடக்கம், இந்த அரசாங்கத்தின் நல்லாட்சி என்ற கொள்கைப் பிரசாரம், மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இந்த அரசாங்கத்தைக் கூட, நல்லாட்சி அரசாங்கம் என்றே அனைவரும் அழைத்து வந்தனர்.

ஆரம்பத்தில், மக்கள் நேசத் திட்டங்களை நடைமுறைப்படுத்திய இவ்வரசாங்கம், பொருட்களின் விலைகளைக் குறைத்தும் ஊழல் செய்ததாகக் கருதப்பட்ட முன்னைய ஆட்சியாளர்களில் சிலரைக் கைது செய்யும், மக்களின் வரவேற்பையும் நம்பிக்கையையும் பெற்றுக் கொண்டது. அவ்வரசாங்கம் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் போதெல்லாம், 'புதிய அரசாங்கம், அவர்களுக்கு நேரம் வழங்க வேண்டும்', 'முன்னைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளைத் திருத்தவே நேரம் போதாது' என்று தெரிவிக்கப்பட்டு, விமர்சனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அவற்றில் நியாயம் இருக்கவும் தான் செய்தது. புதிதாகப் பதவியேற்று சில மாதங்களிலேயே, உடனடி முடிவுகளை எதிர்பார்க்குமளவுக்கு, அரசாங்கத்திலுள்ளவர்கள் ஒன்றும் மந்திரவாதிகள் அல்லர். மாற்றங்களை ஏற்படுத்துவதொன்றும் அவ்வளவு இலகுவானதன்று. அத்தோடு, முன்னைய அரசாங்கத்தின் ஆதரவாளர்கள், இன்னமும் பலமாகக் காணப்பட்டிருந்த நிலையில், அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களைப் பயன்படுத்தி, சில மாதங்களிலேயே அரசாங்கத்துக்கெதிரான அலையொன்றை ஏற்படுத்தும் வாய்ப்பும் இருந்தது.

அரசாங்கத்தின் மீதான உச்சக்கட்ட விமர்சனங்களை நிறுத்தி வைத்திருந்தாலும் அல்லது குறைவாக வெளிப்படுத்தியிருந்தாலும், எந்தளவுக்குப் பொறுத்திருப்பது அல்லது எவ்வளவு காலத்துக்குப் பொறுத்திருப்பதென்பது, முக்கியமான முடிவாகும்.

அரசாங்கம் பதவியேற்று, இவ்வாண்டு ஜனவரி 9ஆம் திகதியுடன் ஓராண்டு பூர்த்தியடைந்திருந்தது. அதன் பின்னர், ஓரளவு விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி நெருக்கடியைத் தொடர்ந்து, வரி விதிப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். அதன் விளைவாக, பல்வேறு வரிகள் அதிகரிக்கப்பட்டாலும், கோதுமை மாவின் வரி அதிகரிக்கப்பட்டமை, உடனடியாகவே மக்களைத் தாக்கியிருந்தது. கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாணின் விலையும் அதிகரித்தது. வற் வரி அதிகரிப்பு, மூலதன ஈட்டு வரி மீள் அறிமுகம் போன்றன, சாதாரண மக்களால் புரிந்து கொள்ளப்படமுடியாத ஒன்று. ஆனால், நாளாந்த உணவின் வரி அதிகரிப்பென்பது, அம்மக்களை நேரடியாகத் தாக்கும் ஒன்றாகும்.

இந்த வரி அதிகரிப்புத் தொடர்பாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில், முன்னைய அரசாங்கம் மீதும் முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதும் விமர்சனங்களை முன்வைத்து, அவர்களாலேயே இந்நிலை ஏற்பட்டது எனக் குறிப்பிட்டார். இது, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னாள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஞாபகப்படுத்தியது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நாட்டின் இடம்பெறும் அத்தனை தவறான விடயங்களையும் விடுதலைப் புலிகளின் மீது குற்றஞ்சுமத்தும் பழக்கம் காணப்பட்டது. போர் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர், புலிகளின் மீளெழுச்சி மீதும் வெளிநாட்டிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீதும் வெளிநாட்டுச் சூழ்ச்சிகளின் மீதும் சுமத்திக் கொண்டிருந்தது. அந்த அரசாங்கம் தோல்வியடைந்த பின்னர், வெளிநாட்டுச் சக்திகளின் மீதும் மேற்கத்தேய சூழ்ச்சி மீதுமே, அத்தரப்பு, குற்றங்களைச் சுமத்திக் கொண்டிருந்தது.

மேற்குறிப்பிடப்பட்ட காரணங்கள் மூலம், அவ்வரசாங்கத்துக்கு விடுதலைப் புலிகளினால் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டவில்லை என்றோ அல்லது வெளிநாட்டிலுள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள், அவ்வரசாங்கத்துக்குச் சவாலாக இருக்கவில்லை என்றோ அல்லது ஜனவரி 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் மேற்கத்தேய சக்திகளின் பங்களிப்புச் சிறிதளவு கூட இருக்கவில்லை என்பதோ அர்த்தம் கிடையாது. ஆனால், அனைத்துப் பிரச்சினைகளையும் மேற்குறிப்பிடப்பட்ட காரணிகள் மீது சுமத்த முடியாது.

அதேபோல் தான், முன்னைய அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவம் மீதான விமர்சனமென்பது தவறென்பதாக ஆகிவிடாது. ஆனால், நாட்டின் தற்போதைய நிதி நிலைமைக்கு, அது மட்டுந்தான் காரணம் என்றவாறு, குற்றத்தை ஒரு தரப்பிடம் மாத்திரம் தள்ளிவிடும் நிலைமையும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

ஏனெனில், கடந்தாண்டு மிகவும் அதிகம் பேசப்பட்ட மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரமென்பது, முன்னைய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று கிடையாது. மாறாக, ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருங்கியவரான மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனாலும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவாலும் ஏற்படுத்தப்பட்ட சிக்கலே அது. நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத்திட்டம், நாடாளுமன்றத்தில் வைத்து சில வாரங்களிலும் பின்னர் தற்போதும் மாற்றியமைக்கப்பட வேண்டி ஏற்பட்டமைக்கும், மஹிந்த

ராஜபக்ஷவைக் காரணமாகச் சொல்லிவிட்டுத் தப்பிக்க முடியாது. மாறாக, தற்போதைய அரசாங்கத்தின் தவறுகளும் காரணமாக அமைந்தன என்பதே உண்மை.

இந்நிலையில் தான், புதிய அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களென்பவை அவசியமாகின்றன. விமர்சனங்கௌன்றால், அரசாங்கத்தை முழுவதுமாக எதிர்ப்பது என்ற அர்த்தப்படாது, அரசாங்கத்தின் தவறுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்ட வேண்டியதே அவசியமாகிறது.

ஏனென்றால், 'முன்னைய அரசாங்கத்தை விட இது எவ்வளவு சிறந்தது', 'முன்னைய அரசாங்கக் காலத்தில் விமர்சனங்களை முன்வைக்காது இருந்தீர்கள், இப்போது மாத்திரம் எதற்காக உடனடியாகக் கூச்சலிடுகிறீர்கள்' என, விமர்சனங்கள் மீது முன்வைக்கப்படும் பதில்கள், தவறானவை. முன்னைய அரசாங்கத்தை விட ஓரளவு சிறப்பாக இருப்பதற்காக இவ்வரசாங்கம் தெரிவுசெய்யப்படவில்லை. முன்னைய ஜனாதிபதியை விட ஓரளவு சிறந்த ஜனாதிபதியாக இருப்பதற்காக, இந்த ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டிருக்கவில்லை. மாறாக, முன்னர் காணப்பட்ட அரசியல் கலாசாரத்தை முழுவதுமாக மாற்றி, அரசியல் புரட்சியொன்றை மேற்கொள்ளவே, இந்தத் தெரிவுகள் இடம்பெற்றன. ஆகவே, முன்னைய அரசாங்கத்துடனும் ஜனாதிபதியுடனும் ஒப்பிடும் போது, என்ன காரணத்துக்காக மக்கள் இவர்களைத் தெரிந்தார்கள் என்பதன் அர்த்தமே இல்லாமற்போகிறது.

எனவே தான், அண்மையில் இடம்பெற்ற றோயல் கல்லூரிக்கும் சென். தோமஸ் கல்லூரிக்குமிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வின் மேடைக்கு, அழையா விருந்தாளியாக ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேன சென்றமையும், தஹாம் சிறிசேனவுக்கும் அவரது நண்பர்களுக்குமாக இங்கிலாந்து விசா கோரப்பட்டதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுத் தலையிட்டது என்ற செய்தியும், அரச நிகழ்வுகளில் ஜனாதிபதியின் மகளான சத்துரிக்கா சிறிசேனவின் வருகை போன்றவனவும், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசமின் எச்.ஐ.வி தொடர்பான கருத்துகளும், அதிகரிக்கப்படும் வரிகளும், போதுமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அப்போது தான், இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும், என்ன காரணத்துக்காகத் தெரிவுசெய்யப்பட்டார்களோ, அந்தக் காரணத்தை அடைய முடியும்  என்பது உண்மை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .