2024 மே 09, வியாழக்கிழமை

நிலம் விழுங்கும் பூதம்!

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 22 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

•    மப்றூக்

உன் உம்மா – உம்மா, என் உம்மா சும்மாவா? என்று நம்மவர்கள் பேச்சு வழக்கில் கேட்பதுண்டு! ஒரு நீதியினை ஒருவர் தனக்கு ஒருவாறாகவும், அடுத்தவருக்கு வேறாகவும் பயன்படுத்தும் போது, பாதிக்கப்படுபவர் மேற்கண்ட கேள்வியினைக் கேட்பார்!

சட்டத்தின் முன் யாவரும் சமம் என்கிறது சட்டம்! ஒரு சட்டம் - இரண்டு தரப்பாருக்கு இரண்டு விதமாகப் பிரயோகிக்கப்படுவதில்லை. அவ்வாறு பிரயோகிக்கப்பட்டால் அது சட்டமில்லை!

சரி... இப்போது கட்டுரையின் பிரதான கதைக்கு வருவோம்!

அஷ்ரப்நகர் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். இது முஸ்லிம் மக்களை நூறுவீதம் கொண்ட ஒரு கிராமமாகும். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில்-01 என்கிற கிராமசேவகர் பிரிவுக்குள் இந்தப் பகுதி வருகிறது. அஷ்ரப்நகர் என்பது – மு.காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர், அவரின் ஞாபகமாக இக் கிராமத்துக்குச் சூட்டப்பட்ட பெயராகும். இதன் நிஜப் பெயர் ஆலிம்சேனை. இப்போதும் - ஆலிம்சேனை என்றுதான் கணிசமான மக்கள் இந்த இடத்தை அழைக்கின்றார்கள். அந்தப் பெயர்தான் அவர்களுக்குத் தெரியும்!

அஷ்ரப்நகர் - சர்ச்சைக்குரிய தீகவாபியின் எல்லைக் கிராமமாகும். அதனால், அஷ்ரப்நகரையும் சர்ச்சைகள் தொற்றிக் கொண்டே வருகின்றன.

மேற்படி அஷ்ரப்நகர் - காடு சார்ந்த பிரதேசமாகும். நீண்ட வரலாற்றினைக் கொண்ட இக்கிராமத்தில் 1950களில் முஸ்லிம் மக்கள் குடியிருந்ததாக கூறுகின்றார் ஐ.எல்.அலியார் என்பவர். இவர் அஷ்ரப் நகர் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவராகக் கடமையாற்றுகின்றார்.

'1952ஆம் ஆண்டுகளில் நாங்கள் இங்கு இருந்தோம். அதற்கு முன்னர் எங்கள் வாப்பா, வாப்பாவின் வாப்பா என்று இருந்திருக்கிறார்கள். இது எங்கள் பரம்பரை நிலம்' என்று அலியார் மேலும் கூறுகின்றார்.

இவ்வாறானதொரு கிராமத்திலுள்ள 31 பொதுமக்களின் 66 ஏக்கள் பரப்பரவுள்ள காணிகளின் அனுமதிப் பத்திரங்களை அண்மையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர ரத்துச் செய்துள்ளதோடு, அந்த மக்கள் அனைவரையும் குறித்த காணிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்கிற உத்தரவொன்றினையும் பிறப்பித்துள்ளார்.

இதற்கான காரணம்; மேற்படி 31 பேரும் தமது காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்களை 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கவில்லை என்பதாகும்.

அரசாங்க அதிபர் கன்னங்கர, இந்த முடிவினை எடுப்பதற்கு பின்னணிக் கிளைக் கதையொன்று உள்ளது. அது என்ன என்று இப்போது பார்ப்போம்.

அஷ்ரப் நகர், காடு சார்ந்த பிரதேரம் என்று கூறியிருந்தோமல்லா. ஆதனால், இங்கு யானைகளின் அச்சுறுத்தல் மிகவும் கடுமையாகும். அடிக்கடி கிராமத்துக்குள் நுழையும் யானைகள், இங்குள்ள குடியிருப்புக்கள் மற்றும் பயிர்களையெல்லாம் சேதமாக்கி விட்டுச் செல்லும். சிலவேளைகளில் அகப்படும் ஆட்களையும் இந்த யானைகள் தாக்கியுள்ளதாக அஷ்ரப்நகர் வாசிகள் கூறுகின்றார்கள். இதனால் - இந்த மக்களுக்கு யானைகளிடமிருந்து பாதுகாப்பு தேவையாக இருந்தது.  

'இதை சாட்டாக வைத்துக்கொண்டு வனவளத் திணைக்களத்தினர் வந்தார்கள். தாங்கள் யானைப் பாதுகாப்பு வேலி அமைக்கவுள்ளதாகச் சொன்னார்கள். நாங்களும் சந்தோஷப்பட்டோம். உண்மையாக, வேலியினை அமைப்பதாயின் கிராமத்தின் எல்லையில் அல்லவா அமைக்க வேண்டும். ஆனால், இவர்கள் எங்கள் காணிகளின் ஊடாக வேலியை அமைப்பதற்கு முயற்சித்தார்கள். அதை நாங்கள் எதிர்த்தோம். அது குறித்து உரியவர்களிடம் முறைப்பாடு செய்தோம்' என்கிறார் சர்ச்சைக்குரிய 66 ஏக்கர் காணிகளின் சொந்தக்காரர்களில் ஒருவரான அ.கமர்தீன் என்பவர்.

1970களில் கமர்தீன் - தன் தந்தையாருடன் இப்பிரதேசத்தில் இருந்த காடுகளை வெட்டி காணியாக்கியிருக்கின்றார். இவ்வாறு அவர்கள் காடு வெட்டியெடுத்த காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை அரசாங்கம் 1980ஆம் ஆண்டு உரிய நபர்களுக்கு வழங்கியுள்ளது.

வனவளத் திணைக்களத்தினர் பொதுமக்களின் காணிகளுடாக - யானை வேலி அமைப்பதற்கு எதிர்ப்புக் கிளம்பின. இவ்விவகாரத்தை சில முஸ்லிம் அரசியல்வாதிகள்; மேலிடத்துக்கும் கொண்டு சென்றனர். எனவே, இவ்விடயத்தில் தலையிட்டு பிரச்சினைக்கு சுமூகமானதொரு தீர்வினைக் காணுமாறு அறுவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்!

அஷ்ரப்நகர் பகுதிக்கு சில மாதங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வந்தார். அவர் மூலம் தமக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்குமென பொதுமக்கள் ஆவலுடன் கூடினார்கள். ஆனால், அரசாங்க அதிபர் அந்தப் பிரச்சினையைத் தலைகீழாகக் கையிலெடுத்தார்.

அதாவது, நீங்கள் குடியிருக்கும் காணிகள் உங்களுக்குரியவைதானா என்பதை நீங்கள் முதலில் நிரூபிக்க வேண்டும். எனவே, உங்கள் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரினூடாக எனக்கு நீங்கள் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு 14 நாட்கள் உங்களுக்கு அவகாசம் தருகின்றேன் என்று கூறிவிட்டு கிளம்பினார் அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர!

மக்கள் திகைத்துப் போனார்கள். ஆனாலும், கெடுவாக வழங்கப்பட்ட காலத்துக்குள் தமது காணிகளுக்கான அனுதிப்பத்திரத்தின் பிரதிகளை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் சமர்ப்பித்தனர். அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் அவற்றை – அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்தார்!

இந்தப் பின்னணியில்தான், மேற்படி அனுமதிப்பத்திரங்கள் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்றும், அதனால் அவற்றினை வலுவிழந்ததாகக் கருதி ரத்துச் செய்வதோடு, குறித்த காணிகளில் குடியிருப்பவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறும் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளருக்கு – அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் 01.12.2010 எனும் திகதியிட்ட கடிதமொன்றின் மூலமாக உத்தரவிட்டுள்ளார்.

இங்கு இன்னுமொரு பிரச்சினை ஆரம்பமாகிறது.

அதாவது, இந்த விடயத்தில் அரசாங்க அதிபர் தனக்கு இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தியிருப்பதாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரான எம்.ஏ.அன்சில் கூறுகின்றார். பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டதன் பிறகு - இவ்வாறான காணி அனுமதிப் பத்திரங்களை ரத்துச் செய்வதற்கான அதிகாரம் - பிரதேச செயலாளர் அல்லது காணி ஆணையாருக்கு மட்டுமே உள்ளதாகவும் தவிசாளர் அன்சில் சுட்டிக் காட்டுகின்றார்.

இதுதவிர இன்னுமொரு விவகாரமும் உள்ளது. அஷ்ரப்நகர் மக்கள் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்களின் காணிகளுக்கான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்காமல் இருப்பது போல், தீகவாபியிலுள்ள சிங்கள மக்களில் 184 பேர் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமது காணிகளின் அனுமதியினைப் புதுப்பிக்காமல் இருக்கின்றனர். அப்படியென்றால், அஷ்ரப்நகர் மக்களின் காணி அனுமதியை ரத்துச் செய்த சமகாலத்தில் தீகவாபியிலுள்ள குறித்த 184 சிங்கள மக்களின் காணி அனுமதிப்பத்திரங்களையும் அரசாங்க அதிபர் ரத்துச் செய்திருக்க வேண்டுமல்லவா? அப்படியென்றால், உன் உம்மா – உம்மா, என் உம்மா சும்மாவா? என்று அஷ்ரப்நகர் மக்கள் கேட்கின்றார்கள்.

'இதன்படி பார்க்கும்போது, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இவ்விடயத்தில் தனது இனவாத முகத்தினைக் காட்டியிருக்கின்றார். அவர் இந்த விடயத்தில் நேர்மையுடன் செயற்படவில்லை. இதைத் தவிர வேறொன்றையும் இது விடயத்தில் என்னால் கூற முடியாது' என்று அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் அன்சில் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்திக் கொண்டார்.  

அஷ்ரப்நகர் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியாகும். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் நிலங்கள் இவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாவதும் பறிக்கப்படுவதும் இதுவொன்றும் முதல் முறையல்ல! பொன்னன்வெளி, பள்ளக்காடு, ஆள்சுட்டான்வெளி, கரங்கோவட்டை என்று முஸ்லிம்களின் நிலங்களை பேரினப் பூதங்கள் விழுங்கி ஏப்பம்விட்ட நிலையில்தான் இப்போது, அஷ்ரப்நகர் பலி கேட்கப்பட்டிருக்கிறது.

தமது காணிகளுக்குரிய அனுமதிப்பத்திரங்களை அஷ்ரப்நகர் மக்கள் புதுப்பிக்காதமை அவர்களின் குற்றமில்லையா? பிறகெப்படி அரசாங்க அதிபரை நீங்கள் பிழை சொல்லலாம் என்று யாரேனும் எண்ணக் கூடும். அதனால், மேற்படி காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்களை ஏன் அந்த மக்கள் புதுப்பிக்கவில்லை என்பதையும் இங்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

கடந்த கால யுத்த சூழ்நிலையில் அஷ்ரப்நகர் மக்கள் அங்கிருந்து பல தடவை இடம்பெயர்ந்தனர். மேலும் 1990ஆம் ஆண்டில் 13 முஸ்லிம்களை இப்பிரதேசத்தில் இனந்தெரியாதவர்கள் சுட்டுக் கொன்றிருந்தனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமது காணி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பது பற்றி எவ்வாறு ஒருவரால் யோசிக்க முடியும்?!

எனவே, அஷ்ரப்நகர் மக்கள் தமது காணிகளின் அனுமதியினைப் புதுப்பிக்காமைக்குரிய நியாயமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றினை அப்படியே வைத்துவிட்டு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் இப்படி நடந்து கொள்வது அநீதியிலும் அநீதி என்பது அந்த மக்களின் கருத்தாகும்.

ஒரு பாரிய மழை பெய்தாலே – மக்களால் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்பதற்காக நாட்டிலுள்ள சில சட்டங்களும், அரசாங்கக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்ற போது, பயங்கரவாதமும் யுத்த சூழ்நிலையும் நிலவிய காலப்பகுதியொன்றில் தமது காணிகளின் அனுமதிப் பத்திரங்களை சிலர் புதுப்பிக்கவில்லை என்பதை ஒரு காரணம் எனத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு - அரசாங்க அதிபர் இப்படிக் காவடியாடுவது நியாயமேயில்லை என்கின்றார் முஸ்லிம் அரசியல்வாதியொருவர்!

இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹசன் அலி – காணி ஆணையாளருக்குக் கடிதமொன்றை எழுதியிருப்பதும் இங்கு கவனத்துக்குரியதொரு விடயமாகும். அந்தக் கடிதத்தில் - காணி அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்படாமைக்கான நியாயங்களை விளக்கியிருப்பதோடு, குறித்த காணிகளின் அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான புதிய காலக்கெடுவொன்றினை வழங்குமாறும் ஹசன் அலி கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரேயொரு மாவட்டம் அம்பாறை மட்டும்தான். ஏற்கனவே அந்தப் பெரும்பான்மையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் - முஸ்லிம்களிடமிருக்கும் நிலங்களும் இப்படியே பறிபோகுமானால், கடைசியில் முஸ்லிம்களுக்கென்று ஒரு 'கச்சைத்துண்டு' கூட மிஞ்சப் போவதில்லை!

எனவே, இந்த விவகாரத்தை அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டு – மக்கள் 'சும்மா' இருந்து விடக்கூடாது! பொது அமைப்புக்களும் - மக்களும் இவ்விடயம் தொடர்பில்  களத்தில் இறங்க வேண்டும் என்கிறனர் சமூக அக்கறையாளர்கள்.

யானைகளிடமிருந்து நமது நிலங்களை பிறகு காப்பாற்றிக் கொள்ளலாம். முதலில் பூதங்களிடமிருந்து காத்துக் கொள்வோம்!!


You May Also Like

  Comments - 0

  • bis Wednesday, 22 December 2010 07:20 PM

    இவர்கள் கற்றுக் கொண்ட பாடங்களுக்கு ஆணைக் குழு அமைத்தும் முப்பது வருட யுத்தத்தில் எதையும் கற்று கொண்டதாக தெரியவில்லை. பரிதாபம்! ஒருபக்கம் அம்பாறையில் பேரினவாதிகளிடம் நிலம் இழப்பு, மறு புறம் மட்டக்களப்பில் சிறுபான்மை பேரினவாதிகளிடம் இழப்பு. யாரும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை!

    Reply : 0       0

    Mohamed Razmi Wednesday, 22 December 2010 08:11 PM

    பேரினவாதிகளிடம் சோரம் போன அரசியல் தரகு மாமாக்களை தலைவர்கள் என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் சிறுபான்மை மக்கள் பாவம்! பரிதாபம்! அமரர் செல்வநாயகத்தின் வார்த்தைகள் நிதர்சனம் ஆகின்றன "ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்"

    Reply : 0       0

    X UVA Wednesday, 22 December 2010 09:10 PM

    Hey GA onka appan veettu kaniya avanka ketka illa. karanka vattayila irukuravenka eppa kaniya puthuppichchanka?. aniyayama makkala innoru poarattaththukku thoondathe.appadi ethum nadantha neengathan mulukkaranamum. ampara makkalla vaalka tharththa uyarthuraththukku ennavavathu pannunga,

    Reply : 0       0

    sham Wednesday, 22 December 2010 09:24 PM

    இதில் மக்கள் தான் மிகக்கூடிய கவனம் செலுத்த வேண்டும். இனியும், காலம் இடம் தராது. அரசியல் வாதிகள் எமக்காக தான் , இருந்தும் முழுவதுமாக அவர்களை நம்பி இருக்கலாமா.. நமக்கு ஒரு பிரச்சினை வரும் போது மறு விசயத்தையே மறந்து பொய் விடுவோம்.. அப்படி இருக்கும் போது எப்படிங்க அவர்களை மட்டும் நம்பி இருக்கலாம் ....இது சம்பந்ததப்பட்டவர்கள் மிக கவனம் கொள்வதோடு..அரசியல் வாதிகளையும் அடிக்கடி ஜாபகம் செய்ய வேண்டும். . அது சம்பந்தமான ஏனைய நடவடிக்கைகலிலும் கவனம் செலுத்தத் வேண்டும். இது சம்பந்தமாக வழிகாட்ட பொது அமைப்புகள்.

    Reply : 0       0

    sham Wednesday, 22 December 2010 09:44 PM

    எல்லாரும் ஒன்றுபட்டு எம்முடைய பிரச்சினையை முடிக்க பார்க்க வேண்டும். நம்முடைய பிரச்சினைய பிறகு பார்க்கலாம். இப்படியான சந்தர்ப்பத்தில நாம பிரிஞ்சி நிண்டம் என்றால் எதிரிக்கு....எனக்கு அந்த பழமொழி ஞாபகம் வருது இல்லங்க.. aanaa ungaluku thirinjirukumndu nenaikan...

    Reply : 0       0

    ajan Wednesday, 22 December 2010 11:10 PM

    @dis. சொன்னது உண்மை, எதையும் இவர்கள் கற்று கொள்ள போவது இல்லை. அந்த அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் அவர்கள் விருப்படி, நிம்மதியா எப்போது வாழ விடும் இந்த பேரினவாதம். எல்லோரையும் ஏமற்ற இந்த குழு எல்லாம். ஏதும் நடக்க போவது இல்லை .. தமிழர், இஸ்லாமியர் இருவரும் தான் ஏதும் இல்லாமல் நிகிரிறாக்கள் இப்போது
    போகிற போக்கு ஏன்டா ஆசியாவின் அதிசியம் இல்லை , அசிங்கமாக தான் இலங்கை இருக்கும் போலும்.

    Reply : 0       0

    m.a.m.fowz Thursday, 23 December 2010 12:30 AM

    வாழ்துக்கள் மப்றூக நானா உங்கள் சேவை தொடர்க........?

    Reply : 0       0

    rasmi mohamed addalaichenai Thursday, 23 December 2010 04:26 AM

    இப்படியும் ஒரு கும்பல் பாவம் வெக்கம் வெக்கம்

    Reply : 0       0

    ruthra Friday, 24 December 2010 10:21 PM

    இன்னும் எத்தனை பேரின் வயிற்றில் அடிக்க காத்திருக்கின்றார்கள் இந்த இன வெறியர்கள்? அப்பாவி வயிற்றில் அடித்து ஊன் சதை வளர்க்கும் ஈன பிறவிகளை அழிக்க, வரவேண்டும் இன்னுமொரு சுனாமி.

    Reply : 0       0

    Doc - KSA Friday, 24 December 2010 11:22 PM

    I think, we must handle this matter diplomatically rather then on humanitarian back round. If those community couldn't pay any land taxes, first we must finout the solution. Violence never gives any solutions. Let us approach in deferent way find solution for this issue.

    Reply : 0       0

    rinas mhm Sunday, 26 December 2010 10:49 PM

    நமது அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் காட்டும் ஆக்ரோஷத்தை ஏன் இது போன்ற விடயங்களில் காட்டக்கூடாது? இதுவல்லவா அடிப்படை அரசியல் பிரச்சினை? நில ஆக்கிரமிப்பு மிகக்கொடியது, மப்ரூக் சொன்னது போல கச்சை துன்டொன்றேனும் மிஞ்சினால் ஆச்சரியமே! கண்ணெதிரே, உதாரணம் உண்டு. களவான பின், ஆயுதம் கொண்டு சீரழியவும் முடியாது; நாடோடி வாழ்வும் சரிப்பட்டு வராது. ஊரில் உள்ளவங்களே உணர்ந்து கொள்ளுங்க!!! றினாஸ் - தோஹா கத்தார்

    Reply : 0       0

    Saboor Adem Tuesday, 04 January 2011 05:53 PM

    முஸ்லிம் அரசியல் வாதிகளின் பிழையான அணுகுமுறைகள் ஆபத்தான எதிர்விளைவுளை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடக்கூடாது.
    கடந்த காலத்தில் முஸ்லிங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது, அநீதிகள், கலவரங்கள் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொரிதாகக் கவ...னம் செலுத்தவில்லை. அவர்களது மௌனம் தொடர்ந்தும் நீடித்திருந்ததது. காரணம் இவர்கள் பல பிரிவுகளாகியமைதான். இவை ஒரு கட்டுக்கோப்பான சமூகமாகச் செயற்பட முடியாத நமது பலவீனத்தின் வெளிப்பாடுகளாகும்.

    இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்வது தொடர்பாக நாம் நின்று நிதானித்துச் செயற்பட வேண்டும். வரலாற்றில் மிக இக்கட்டான ஒரு தருணத்தை அடைந்திருக்கின்றோம். எமது ஒவ்வொரு அசைவுகள் குறித்தும் மிகுந்த முன்னெச்செரிக்கையோடு சிந்தித்து நடக்க வேண்டியது நமது கடமையாகும்.
    எமது முஸ்லிம் தலைவர்கள் சந்தர்ப்பவாத அரசியலை கைவிட்டு, தனிப்பட்ட பகைமையை மறந்து, மக்களுக்காக ஒன்றுகூட முன்வர வேண்டும்.

    Reply : 0       0

    Firows Friday, 11 February 2011 11:37 PM

    விதியின் வழிக்கு எதிராக நாம் வலி செய்வோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X