2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மெஜாரிட்டி முதலமைச்சர் அமைச்சரவையை கலைக்க முடியுமா?

Kogilavani   / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் சட்டப் பிரச்சினை!


பிரதமர் நரேந்திரமோடியை பீஹார் மாநில முதலமைச்சர் மஞ்சி திடீரென்று சென்று சந்தித்தார். பிரதமர்  மோடிக்கும், மாஞ்சி சார்ந்திருக்கும் ஐக்கிய ஜனதா தளக் கட்சிக்கும் எலியும் பூனையும் போல் போட்டி இருந்தாலும், இந்த இருவரின் சந்திப்பு பீஹார் அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக களத்துக்கு வந்த மோடிக்கும் அப்போது பீஹார் முதலமைச்சராக இருந்த ஐக்கிய ஜனதா தளக் கட்சி தலைவர் நிதிஷ் குமாருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது.


மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு நிதிஷ் போக மாட்டார். நிதிஷை வெறுப்பேற்றும் வகையில் பீஹார் மாநிலததுக்கு அவர் இல்லாமலேயே வந்து பொதுக்கூட்டம் பேசி விட்டுச் சென்றார் நரேந்திரமோடி. அந்த சமயத்தில் மோடி பேசிய கூட்டத்தில் வெடிகுண்டுகள் வெடிக்க பீஹாரில் பெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒருவழியாக அது சமாளிக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சினைகள் ஏதுமின்றி நடந்து முடிந்தது.


நாடாளுமன்ற வெற்றிக்குப் பிறகு, பிரதமர் நரேந்திரமோடியை எதிர்கொள்ளத் தயங்கிய பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தன் பதவியை வேறு ஒருவருக்கு விட்டுக் கொடுக்க முன் வந்தார். அப்படித்தான் ஐக்கிய ஜனதா தளத்தில் இருக்கும் தலித் தலைவர் மஞ்சி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இப்படி 'பொம்மை' முதல்வர்கள் என்று கட்சிகள் ஒருவரை தேர்வு செய்து இடைக்காலத்துக்கு முதலமைச்சராக வைப்பது ஒன்றும் இந்தியாவில் புதிதல்ல. இதே பீஹார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் தன் மனைவி ராப்ரி தேவியை முதல்வராக நியமித்தார். அதேபோல் இப்போது முதலமைச்சராக வந்த மஞ்சி முதலில் பொம்மை போல் தெரிந்தாலும் பிறகு தானும் நிஜ முதல்வர் என்று தன் அதிகாரத்தை நிலை நிறுத்தத் தொடங்கினார்.


மஞ்சி முதல்வராக இருந்த நேரத்தில் நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் அனைவரும் சேர்ந்து 'லாலுயாதவ்- சரத்யாதவ்- முலாயம் சிங் யாதவ்' ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து 'ஜனதா பரிவார்' என்ற புதிய அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்கள். அதன்படி இந்த தலைவர்கள் எல்லாம் அடிக்கடி சந்தித்துப் பேசினார்கள். இந்த ஜனதா பரிவாரில் முன்னாள் பிரதமர் தேவகவுடா கூட சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் உள்ள மாயாவதியை அழைத்தார்கள். அவர் இந்த அமைப்புக்கு வர மறுத்து விட்டார். பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியே இந்த 'ஜனதா பரிவார்' அமைப்பை ஏற்படுத்தும் முயற்சி. இது பா.ஜ.க.வுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.


இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பா.ஜ.க.வின் பீஹார் மாநிலத் தலைவர் சுசில் மோடி, 'மஞ்சி தலைமையிலான அரசை எப்போது வேண்டுமானாலும் எங்களால் கவிழ்க்க முடியும். ஆனால் அப்படி நாங்கள் செய்யமாட்டோம்' என்று வெளிப்படையாகவே பேசினார். இந்தப் பேசசுக்கு பிறகு மஞ்சிக்கும், அவர் சார்ந்த கட்சிக்கும் இடையில் குழப்பம் மேலும் அதிகமாகியது.


இந்நிலையில் மஞ்சியை நீக்கி விட்டு மீண்டும் நிதிஷ் குமாரை பீஹார் முதலமைச்சராக்க அவர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்தார்கள். அதற்கான கூட்டம் நடக்கும் வேளையில் மஞ்சி திடீரென்று 'அமைச்சரவையைக் கலைக்கிறேன்' என்று பீஹார் கவர்னருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் ஐக்கிய ஜனதா தளமோ மெஜாரிட்டியாக நிதிஷ்குமார் பக்கமாக நின்றது. அக்கட்சியின் 113 எம்.எல்.ஏ.க்களில் 97 பேர் அக்கூட்டததுக்கு ஆஜராகி நிதிஷ்குமார் மீது நம்பிக்கை தெரிவித்தார்கள். அதனால் 'நான் முதலமைச்சராக பதவியேற்று ஆளுநரிடம் கோரிக்கை வைப்பேன்' என்று நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில்தான் பீஹார் முதலமைச்சர் மஞ்சி பிரதமர் நரேந்திரமோடியை 40 நிமிடங்கள் சந்தித்துப் பேசியுள்ளார்.


இந்தச் சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த மஞ்சி, 'நான் இராஜினாமா செய்யப் போவதில்லை. சட்டமன்றத்தில் என் மெஜாரிட்டியை நிரூபிப்பேன்' என்று கூறியிருக்கிறார். பீஹார் சட்டமன்றத்தில் மொத்தம் 243 எம்.எல்.ஏ.க்கள். அதில் பத்து இடங்கள் காலியாக உள்ளன. ஆகவே இருக்கின்ற 233 எம்.எல்.ஏக்களில் 117 பேர் இருந்தால் ஆட்சியில் தொடரலாம்.

முதல்வராக பொறுப்பேற்க விரும்பும் நிதிஷ் குமாருக்கு சொந்தக் கட்சியில் 97 பேர் இருக்கிறார்கள். காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவ், கம்யூனிஸ்டுகள் சார்பில் 30 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். மொத்தம் 127 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு நிதிஷ்குமாருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளத்துக்குள் மஞ்சிக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏ.க்களும் கடைசி நிமிடத்தில் நிதிஷ் குமாருடன் கைகோர்த்தால் நிதிஷ்குமாரின் ஆதரவு 140 ஆகிவிடும்.


அதேநேரத்தில் மஞ்சிக்கு பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.க்கள் 87 பேர் ஆதரவு வழங்கினால் கூட நூறு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக்கு மேல் அவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை. இந்த சூழ்நிலையில் மஞ்சி நான் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கத் தயார் என்று கூறியிருப்பதில் அர்த்தம் இருக்கிறது. அவர் மீது நம்பிக்கைத் தீர்மானம் சட்டசபையில் வந்து அதில் தோற்கடிக்கப்பட்டால் 'ஒரு தலித்தை தோற்கடித்து விட்டார்கள்' என்று கூறி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தலித் வாக்காளர்களை ஒட்டுமொத்தமாக நிதிஷ்குமார் அணிக்கு எதிராகத் திருப்பி விட முடியும் என்று நம்புகிறார். அதை மனதில் வைத்துத்தான் அவர் போட்டியிடப் போகிறேன் என்கிறார்.


இந்நிலையில் பீஹார் முதலமைச்சராக தொடரப் போவது மஞ்சியா அல்லது புதிய முதல்வராக வரப் போவது நிதிஷ்குமாரா என்பது பீஹார் சட்டமன்ற உறுப்பினர்களின் கையில் இருக்கிறது. இது ஒரு புறமிருக்க 'அமைச்சரவையை கலையுங்கள்' என்ற முதலமைச்சர் மஞ்சியின் பரிந்துரை செல்லுமா என்பது பற்றியும் மாநில ஆளுநர் முடிவு செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறார். ஏனென்றால் மெஜாரிட்டியாக இருக்கும் முதலமைச்சர் 'அமைச்சரவையைக் கலையுங்கள்' என்று பரிந்துரைத்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். அதேநேரத்தில் அமைச்சரவையில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு அங்கே மெஜாரிட்டி அமைச்சர்கள் 'அமைச்சரவையைக் கலைக்கக் கூடாது' என்று எதிர்த்துள்ளார்கள். இதனால் முதலமைச்சரின் பரிந்துரைக்கு என்ன செல்வாக்கு உண்டு என்பதை மாநில ஆளுநர்தான் (கவர்னர்) முடிவு செய்ய வேண்டும்.


பொதுவாக முதலமைச்சரே கூட அமைச்சரவைதான் என்ற கருத்து ஒரு தரப்பிலிருந்து முன் வைக்கப்படுகிறது. அதேபோல் சட்டமன்றத்தில்  தோற்கடிக்கப்படாத முதலமைச்சர் கொடுக்கும் பரிந்துரைகள் ஆளுநரை கட்டுப்படுத்தும் என்றே கடந்த காலத்தில் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் மஞ்சியின் அமைச்சரவைக் கலைப்பு பரிந்துரையை கவர்னர் ஏற்றுக் கொண்டு விட்டால், பீஹார் மாநிலம் தேர்தலை சந்திப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

'ஆட்சியை கலைப்பது கடைசி ஆயுதமாகத்தான் பயன்படுத்த வேண்டும்' என்று பல தீர்ப்புகளில் கவர்னர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளார்கள். இதை கணக்கில் எடுத்துக் கொண்டு கவர்னர் செயல்பட்டால், முதலில் மஞ்சியை தன் மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிடுவார். ஏனென்றால் அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார். இந்த நிலையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் நிதிஷ்குமார் பக்கம் இருந்தாலும், சட்டமன்றத்தில் யார் வாக்கெடுப்பில் தோற்கிறார்கள் அல்லது வெற்றி பெறுகிறார்கள் என்பதை வைத்துத்தான் கவர்னர் முடிவு எடுக்க முடியும்.


அதனால் பீஹாரில் இன்று உருவாகியுள்ள சூழ்நிலையில் முதலில் மஞ்சியை மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடுவார். அதில் அவர் தோற்றால் பிறகுதான் நிதிஷ்குமாரை ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் கவர்னர். அப்போது பொறுப்பேற்கும் நிதிஷ்குமார் தன் மெஜாரிட்டியை சட்டசபையில் நிரூபிக்க அவகாசம் கொடுப்பார். எஸ்.ஆர்.பொம்மை வழக்கு உள்ளிட்ட பல்வேறு மாநில ஆட்சிக் கலைப்பு வழக்கில், 'பலத்தை நிரூபிப்பதற்கு சரியான இடம் சட்டமன்றமே தவிர, ஆளுனர் அலுவலகமோ அல்லது வேறு இடமோ அல்ல' என்று இந்திய உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

 

அவற்றை பீஹார் மாநில கவர்னரும் மீறுவார் என்று தோன்றவில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமாக 'மெஜாரிட்டி உள்ள முதல்வர் ஆட்சிக் கலைப்பை பரிந்துரைக்கலாமா' என்ற கேள்விக்கும் ஒரு முன்னுதாரணம் மிக்க முடிவை அவர் எடுப்பார் என்றே தோன்றுகிறது.


இதெல்லாம் ஒரு புறமிருக்க லாலு பிரசாத் யாதவ், முலயாம் சிங் யாதவ், சரத்யாதவ் ஆகியோர் இணைந்து 'ஜனதா பரிவார்' அமைக்கும் முயற்சிக்கு முதல் முட்டுக்கட்டை பீஹாரில் விழுந்துள்ளது. இனி நிதிஷ் குமார் ஆட்சியை அமைத்த பிறகுதான் 'ஜனதா பரிவார்' அமைக்கும் முயற்சி மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும். ஆனால் 'லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம்' ஆகிய மூன்று கட்சிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட்டு சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடியின் பா.ஜ.க.வை பீஹாரில் தோற்கடித்தார்கள். அதேபோல் வருகின்ற பீஹார் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்பது அவர்கள் யுக்தி. அதற்கு மஞ்சி முதலமைச்சராக இருப்பது சரிப்பட்டு வராது என்று நினைத்துத்தான் நிதிஷ்குமாரை களத்தில் இறக்குகிறார்கள். பீஹார் ஆட்சி மாற்றம், அங்கு நடக்கும் 'ஜனதா பரிவார்' அமைக்கும் முயற்சிகள் எல்லாம் அகில இந்திய அரசியலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு வலுவான எதிரணியை உருவாக்க அமைக்கப்படும் அடித்தளம். அது எப்படிப் போகிறது என்பது எதிர்கட்சிகள் மத்தியில் ஏற்படும் ஒற்றுமையில்தான் இருக்கிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .