2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஹிரோஷிமா: அப்துல் கலாமும் அணுகுண்டும்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ

எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமே மனித இருப்பின் அடிப்படை. நாளை என ஒன்றின் நிச்சயமின்மையின் நிரந்தரத்தை உணர்த்தும் வாழ்க்கை எப்படி இருக்கும்?

ஜப்பானிய நகரமான

ஹிரோஷிமா மீது அமெரிக்க அணுகுண்டு வீச்சின் 70ஆவது ஆண்டுநிறைவு கடந்த வாரம் நினைவுகூரப்பட்டது. உலகுக்கு அணுகுண்டின் பயங்கரத்தை உணர்த்திய நிகழ்வு அது. இரண்டாம் உலகப் போர் நிறைவை எட்டிக்கொண்டிருந்த காலப்பகுதியில் 1945 ஓகஸ்ட் 6ஆம் திகதி ஹிரோஷிமாவிலும் 9ஆம் திகதி நாகசாகியிலும் அமெரிக்கா, அணுகுண்டை வீசியது. இப்போது 'அணு' சக்தி பல்வேறு தேவைகட்குப் பயன்படுகிறது. ஆனால், அணுகுண்டு வீச்சின் விளைவுகளின் தீவிரத்தை 70 ஆண்டுகள் கழிந்தும் மனிதகுலம் சரிவர உணரவில்லை.

ஹிரோஷிமா மீதும் நாகசாகி மீதும் வீசிய அணுகுண்டுகள் 250,000 பேரைப் பலியெடுத்தன. அதன் துணைவிளைவுகளாற் கடந்த எழுபதாண்டுகளில் மேலும் பல்லாயிரமானோர் ஜப்பானில் பலியாகியுள்ளார்கள். அதி பாரிய உயிர்க் கொலையைச் சில நிமிடங்களில் நிகழ்த்தலாம் என உணர்த்திய நிகழ்வு அது. ஹிரோஷிமாவில் வீசிய அணுகுண்டு சிலநிமிடங்களில் முழுநகரத்தையும் சாம்பராக்கி 150,000 மக்களின் உயிரைக் குடித்ததை அறிந்த பின்னும், மூன்று நாட்கள் கழித்து, அமொரிக்கா நாகசாகியில் மேலுமொரு அணுகுண்டை வீசியது.

உலகில் ஜனநாயகத்தின் காவற்காரனாகவும் மனித உரிமைகளைக் காக்கும் போர்வீரனாகவும் தன்னைச் சித்திரிக்கும் அமெரிக்காவே உலகின் மிகப்பெரிய இனப் படுகொலையைச் செய்தது என்பதை மறந்துவிடுகிறோம். இதுவரை எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்காவின் இக் கொடுஞ்செயலுக்காக மன்னிப்புக் கோரவில்லை. எழுபது ஆண்டுகளில் உலகம் மிகவும் மாறிவிட்டது. ஆனால், நியாயத்தின் அளவுகோல்கள் மாறவில்லை. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் ஒருவேளை நியாயத்தின் அளவுகோல்கள் வேறுபட்டுத் தெரியலாம்.

இவ்வளவு பெரியதொரு அர்த்தத்தை இப் பூவுலகு கண்டு இவ்வளவு காலங் கடந்தும் அணுகுண்டு இல்லாத உலகில் நாம் வாழவில்லை என்பது இன்னும் அச்சுறுத்தக்கூடிய செய்திதான். உலகில் அணுகுண்டை வைத்திருக்கக் கூடிய எட்டு நாடுகள் உள்ளன. உலகில் இப்போது 20,000 அளவில் அணுகுண்டுகள் உள்ளன.

ஹிரோஷிமாவில் வீசியதை விட அவை பலமடங்கு வீரியமானவை. எனவே தான், மூன்றாம் உலகப் போர் மூண்டால் என்ன நடக்கும் என அல்பேட் ஐன்ஸ்ற்றைனிடம் கேட்டபோது அர் 'மூன்றாம் உலகப் போரில் என்ன நடக்கும் என எனக்குத் தெரியாது. ஆனால், மூன்றாம் உலகப் போரொன்று நடந்தால் நான்காம் உலகப் பேர் நடக்கவே மாட்டாது' எனப் பதிலளித்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பலகாலம் பின்பு 1970இல் அணுவாயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தபோது ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளும் அணுவாயுதங்களைக் கொண்டிருந்தன. அடுத்து இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைத் தயாரித்தன. அவற்றை விட, வடகொரியா அணுவாயுதப் பரிசோதனைகளை மேற்கொண்டதாலும் ஒத்துழைக்க மறுத்ததாலும் அதன் மீது ஐ.நா.வின் பல்வேறு தடைகள் இன்னமும் நடைமுறையிலுள்ளன. ஆனால், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேல் இதுவரை சர்வதேச அணுசக்தி ஆணையகத்தின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. கண்காணிப்பாளர்களை அனுமதிக்கவில்லை.

அதைவிட, நிறவெறி ஆட்சிக்குக் கீழிருந்த தென்னாபிரிக்கா 1970கள் தொட்டு அணுவாயுதங்களைத் தயாரித்து வந்ததை மேற்குலகு கண்டுங்காணாதிருந்தது. 1988இல் அங்கோலாவில் தென்னாபிரிக்கா தனது ஆக்கிரமிப்புப் போரிற் தோற்ற பின்னணியில் தென்னாபிரிக்கா தன்னிடம்  அணுவாயுதங்கள் இருப்பதை ஏற்று அவற்றைக் கைவிடுவதாக அறிவித்தது.

இவ்விடத்து, ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்று பொய் சொல்லி ஈராக் மீது அமெரிக்கா  போர்தொடுத்ததை நினைவுறுத்தல் தகும். பேரழிவு ஆயுதங்கள் ஈராக் மீதான போருக்குச் சாட்டாகப் பயன்பட்டபோதும் இதுவரை பேரழிவு ஆயுதம் ஒன்றையேனும் ஈராக்கிலிருந்து எடுக்க அமெரிக்காவுக்கு முடியவில்லை. இருந்தாலல்லவா அகப்படும்.

இன்று மத்திய கிழக்கின் அமைதிக்குப் பாரிய அச்சுறுத்தலாயிருப்பன இஸ்ரேலும் அது கொண்டுள்ள அணுவாயுதங்களுமே. இந் நிலையில் அணுவாயுதங்கள் அற்ற உலகின் சாத்தியத்தைப் பேசவேண்டியிருக்கிறது.

கடந்த சில தசாப்தங்களில் 'அணு' வானது இன்னொரு வகையில் மனித குலத்துக்கு ஆபத்தாக மாறி வந்துள்ளது. அணு உலைகள் மூலமான மின்சார உற்பத்தி பல தீய விளைவுகளைத் தந்துள்ளது. அறியப்பட்ட முதலாவது அணுவுலை விபத்து 1957இல் பிரித்தானியாவிலும் அடுத்தவை 1961இலும் 1979இலும் அமெரிக்காவிலும் நிகழ்ந்தன. இவற்றினும் பாரிய விபத்து 1986இல் சோவியத் யூனியனின் செர்னோபில் அணு உலையில் நிகழ்ந்தது. நேரடியாகவும் நீண்டகால கதிரியக்கத்தாலும் இதுவரை 4,000 பேரளவில் இறந்துள்ளனர்.

2011இல் ஜப்பானில் நிலநடுக்கமும் அதன் தொடரான சுனாமியும் ஃபுகுஷிமா அணு உலையில் பாரிய விபத்துக்குக் காரணமாகிப் பெரும் அழிவை விளைத்தன. ஃபுகுஷிமா அணு உலை விபத்து, உலகளாவிய முறையில், அணு உலைகளை மூடுமாறு கோரும் மக்கள் இயக்கங்களுக்கு வழிவகுத்தது. இப் பின்னணியிற், தமிழகத்தின்; திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் எனும் இடத்தில் அமைந்த அணுஉலைகளை மூட வேண்டி அப்பகுதி மக்கள் நடத்திய போராட்டமும் கவனம் பெறுகிறது.

அண்மையில் மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி 'அணு விஞ்ஞானி' அப்துல் கலாம் பற்றிய அஞ்சலிகளும் புகழுரைகளும் ஊடகங்களை நிறைத்து, அவர்பற்றிய ஒரு விஸ்வ விம்பத்தை உருவாக்கியுள்ள சூழலில்,

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய எழுபதாம் ஆண்டு நினைவுகூரல் அமைவது தற்செயலானதே. 1998இல் இந்திய அணுகுண்டுப் பரிசோதனைகளை மேற்கொண்ட விஞ்ஞானிகளில் முக்கியமான ஒருவர் என்ற வகையிலேயே அப்துல் கலாம் முதலிற் கவனம் பெற்றார்.

பொக்ரானில், இந்தியா அணுகுண்டுப் பரிசோதனைகளை மேற்கொண்டபோது இந்தியப் பிரதமர் வாஜ்பேயின் 'பிரதான அறிவியல் ஆலோசகர்' ஆகவும் அத் திட்டத்தின் பிரதான ஒழுங்கமைப்பினராகவும் அப்துல் கலாம் இருந்தார். அவரோடு பிரதான ஒழுங்கமைப்பாளராக இருந்த மற்றவர் இராஜகோபாலன் சிதம்பரம். இருவரும் தமிழர்களாயினும் ஊடகங்களின் கவனம் அப்துல் கலாமை நோக்கியே இருந்தது. பொக்ரான் அணுகுண்டுப் பரிசோதனையின் வெற்றி அப்துல் கலாமின் வெற்றியாகச் சித்திரிக்கப்பட்டது. பிரதமர் வாஜ்பேயுடனான நெருக்கம் அதற்கு மேலும் துணைசேர்த்தது.

பொக்ரான் அணுப் பரிசோதனை இடத்துக்கும் பரிசோதனைக்கும் பொறுப்பாயிருந்த விஞ்ஞானி

கே.சந்தானம், அணுப் பரிசோதனை வெற்றிகரமான முடிவைத் தரவில்லை என்றும் அது தோல்வியடைந்த ஒரு சோதனை என்றும் அரசின் வேண்டுகோளுக்கிணங்க அப்துல் கலாம் அப் பரிசோதனை வெற்றிகரமானதென்று தவறான அறிக்கையை உருவாக்கினார் என்றுங் குற்றஞ்சாட்டினார். அப்போது ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்துக்கு இந்தியா வல்லரசாகிறது என்ற பிம்பத்தைக் கட்டமைக்கும் தேவை இருந்தது. அதற்கு ஓர் அணுகுண்டுப் பரிசோதனை தேவையாயிற்று. அதற்காகப் பிடித்த 'ஆள்' தான் அப்துல் கலாம். நமக்கு வழங்கப்பட்ட கதை மிகச் சுருக்கமானது. எளிமையான ஒரு விஞ்ஞானி எவ்வாறு அதிகார மையத்துக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் சேவையாற்றும் தொண்டூழியரானார் என்பதுதான் அக் கதை.

கூடங்குளம் அணு உலைகளுக்கெதிராக அப்பகுதி மக்கள் 2011ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டம் நடைபெறுகையில் அணு உலைகளைப் பார்வையிட வந்த அணு விஞ்ஞானி அப்துல் கலாம் கூடங்குளம் மின் நிலையத்துக்குள் இரவு 1.30க்கு நுழைந்து அதிகாலை 4 மணிவரை ஆய்வு நடத்திக், 'கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது' என்று 40 பக்க அறிக்கையை உடனடியாக வெளியிட்டார்.

சில நாட்களின் பின், கலாமின் அறிக்கை, ரஷ்ய அணு சக்தி நிறுவனமொன்றின் இணையத்தளத்தில் ஒரு கம்பெனி விளம்பரமாக வெளிவந்த விவரங்களைக் களவாடித் தயாரிக்கப்பட்டது எனப் பலர் நிறுவினார்கள். விஞ்ஞானியாகத் தனது நேர்மையை இன்னொரு முறை அவர் காவுகொடுத்த நிகழ்வு அது.

தங்கள் வாழ்வுரிமைக்காகவும் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் மிகச் சாதாரண மக்கள் இரவு-பகலாகப் போராடுகையில் 'அணு உலைகள் பாதுகாப்பானவை. சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றால் அணு உலைகள் பாதிக்கப்படா' என நீட்டோலை வாசித்தவர் கலாம். அணு உலைகளில் விபத்துக்கள் நடந்தால் மட்டுமே பாதிப்புக்கள் ஏற்படும் என்றில்லை. அணு உலையின் அன்றாட இயக்கத்தின் போது ஏற்படும் கதிரியக்கக் கழிவுகள் உயிரினங்களிற் புற்று நோய் உட்பட்ட பல அபாயங்களை விளைக்கின்றன.

அணு குண்டாயினும் பிற அணுவாயுதங்களாயினும் அணுஉலைகளாயினும் அவை யாருக்காக உருவாகின்றன, யாருக்காக இயங்குகின்றன என்பது நாம் கேட்கவேண்டிய கேள்வியாகிறது. நிச்சயமாக அவை மக்களுக்கானவையல்ல. நிச்சயமாக அவை இதை வாசிக்கும் உங்களுக்கோ எழுதும் எனக்கானதல்ல. மொத்தத்தில் அவை அப்துல் கலாம் யாருக்காகச் செயற்பட்டார் என்ற கேள்விக்கான பதிலைத் தருகின்றன.

அப்துல் கலாமை எதற்காகப் பலருங் கொண்டாடுகிறார்களோ, அதற்காகவே என்னால் அவரைக் கொண்டாட இயலவில்லை. மனித இனத்தையே அழிக்கும் ஆற்றலையுடைய அணு குண்டைச் செய்யும் ஆற்றலை உருவாக்கியமையோ அணு ஆயுதங்களை உற்பத்திசெய்யும் திறனை வளர்த்ததையோ போற்றக்கூடிய சாதனையாகக் கருத இயலவில்லை. உலகுக்கு வெடிமருந்தைத் தந்த அல்பிரட் நோபல் இறந்ததை அறிவித்த ஒரு பத்திரிகை அச் செய்திக்கு வழங்கிய தலைப்பு: 'ஒரு சாவு வியாபாரியின் சாவு'.

நம் உலகின் வயது 454 கோடி ஆண்டுகள். அது மதியப் பொழுதொன்றில் முற்றாக அழிந்து விடலாம். அணு சார்ந்த குண்டுகளோ ஆயுதங்களோ உலைகளோ நரகத்துக்கான குறுக்குவழியைத் தான் எமக்குக் காட்டுகின்றன. நாமெல்லோரும் வாழ்க்கை பற்றிய கனவுகளில் இருக்கிறோம். எமது கற்பனைகள் ஒழிந்துவிட்டன. அதற்குப் பங்களித்ததற்காகவா அப்துல் கலாமை நாம் கொண்டாட வேண்டும்?

இப்போது தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதியை வேண்டி நிற்பது ஹிரோஷிமா - நாகசாகி மக்கள் மட்டுமல்ல. உலகில் உள்ள அனைவருமே. அணு ஆயுதங்களையும் அணு உலைகளையும் முற்றாக ஒழிக்காதவரை நீதியோ அமைதியோ சாத்தியமல்ல. அவ்வகையில் அணுகுண்டுகளைத் தயாரித்தவர்கள் எல்லாம் மனிதகுலத்தின் எதிரிகள் தான். ஹிரோஷிமா - நாகசாகியில் நடந்த பேரவலத்தைப் பார்த்தபிறகும் அதைத் தொடர்ந்து தயாரிக்கும் செயலை என்னவென்று சொல்வது. யாரைக் கொண்டாடுவது என்பது பற்றி நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .