2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எண்ணெய் ஊற்றும் இனவாத அரசியல்

Johnsan Bastiampillai   / 2020 நவம்பர் 17 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா  

சமூகங்கள் சார்ந்த எந்தவொரு பிரச்சினைக்கும், பொதுவாகவே நிரந்தரமான தீர்வு காண்பதை விடுத்து, மய்யப் பிரச்சினைக்குச் சம்பந்தமில்லாத விடயங்களுடன் முடிச்சுப்போட்டு, பூதாகரமாக்கி, காலத்தைக் கடத்துகின்ற போக்குகளையே, இலங்கையின் அரசியல் சூழலில் கண்டு வருகின்றோம்.   

குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களின் இன, மத ரீதியான அபிலாஷைகள், கோரிக்கைகள் என்று வருகின்ற போது, எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி, அதில் யாகம் வளர்க்கின்ற வேலையைத்தான், பெருந்தேசிய அரசியல்வாதிகள் சிலரும் அவர்களை ஆட்டுவிக்கின்ற இனவாத சக்திகளும் மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒன்றாக, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் (ஜனாஸா) எரிப்பு விவகாரமும் உருவாகி இருக்கின்றது.  

இவ்வாறாக, எத்தனையோ விவகாரங்களுக்கு ஆண்டாண்டு காலமாக நிரந்தரத் தீர்வு காணப்படாமல், இழுத்தடிக்கப்பட்டு கொண்டிருப்பதையோ, ஒருதலைப்பட்சமான தீர்வுகள் திணிக்கப்படுவதையோ வரலாற்றில் காண முடியும்.  

 பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை விடுத்து, ‘பிச்சைக்காரனின் புண்ணை’ப் போல, அவ்விவகாரத்தைக் கொதிநிலையில் வைத்திருந்து அரசியல் செய்யவே, பிற்போக்கு அரசியல்வாதிகள் விரும்புகின்றனர்.   

தமிழ் மக்கள், 50 வருடங்களுக்கு மேலாக, இனப் பிரச்சினைக்கான தீர்வொன்றை வேண்டி நிற்கின்றனர். தமிழ் ஆயுதக் குழுக்களால் சில படுகொலைகள், மனிதாபிமானத்துக்குப் புறம்பான காரியங்கள் மேற்கொள்ளப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், ஒருதூய போராட்டம், வேறு வடிவங்களை எடுத்தது என்பதையும் மறுப்பதற்கில்லை.   

ஆயினும், விடுதலைப் புலிகளோ வேறு ஆயுதம் தரித்த இயக்கங்களோ செய்த தவறுகளுக்காக, தமிழ் மக்களின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமற்றவை என்று புறமொதுக்கிவிட முடியாது. அந்தவகையில், சாத்தியமானதும் ஆகக் குறைந்தபட்சமானதுமான தீர்வு ஒன்றைத்தானும் அரசாங்கங்கள், தமிழ் மக்களுக்கு வழங்கி ஆறுதலடையச் செய்யவில்லை.   

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் கூட, முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், மாகாண சபை முறைமையே இல்லாதொழிக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம், இப்போது மேலோங்கியுள்ளது.   

முப்பது, நாற்பது வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் முஸ்லிம்கள், தமிழர்களின் காணிப் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் இரண்டு இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை, இன்று அச்சமூகம் உரிமை கொண்டாட முடியாத நிலையுள்ளது.   

அதிலும் குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை. இது ஒருபுறமிருக்க, தொல்பொருள்கள், வனவளம், வனஜீவராசிகள் என்ற பெயரால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் கணிசமான காணிகள், உரிமைசார் பிணக்குகளுக்குள் சிக்கியுள்ளன.   

இவை எதற்கும் தீர்வு காணப்படவில்லை. தமிழர்கள், சில ஏக்கர் காணிகளையாவது தமது போராட்டங்களின் ஊடாக மீட்டுக் கொண்டுள்ளனர் என்று வைத்துக் கொண்டாலும், முஸ்லிம் சமூகத்தின் காணிப் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கே ஆளில்லை. 

அரசியல் தலைமைகள், அது பற்றி விவரமாக அறியமாட்டார்கள் என்றே தெரிகின்றது. இந்த இலட்சணத்தில், காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிட்டுவதற்கான அறிகுறிகள் தென்படவே இல்லை.   

இதேவேளை, கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக, சிறுபான்மை மக்களை நசுக்குவதற்கு முனைகின்ற இனவாதத்துக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. நல்லிணக்கமும் ஒருமைப்பாடும் பற்றிப் பேசிப் பேசியே, இன உறவுகள் விரிசல் அடைவதற்கான அரசியல் சூழலே கட்டமைக்கப்படுகின்றது. 

இதனால், இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மை அடைவது மட்டுமன்றி, பேரினவாத சக்திகள் முஸ்லிம்களையும் தமிழர்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே பிரயத்தனப்படுகின்றன.   

நாட்டில் இடம்பெறுகின்ற அநேக பிரச்சினைகளுக்கு, இனவாத சக்திகளின் செயற்பாடுகளே காரணம் என்ற நிலையிலும், அச்சக்திகளைப் பின்னணியில் பக்கபலமாக வைத்துக் கொண்டே, இன்றுவரை ஆட்சியாளர்கள் தமது அரசியலைச் செய்து வருகின்றனர்.   

ஒரே சமயத்தில், இரு சிறுபான்மைச் சமூகங்களையும் பகைமை பாராட்டாமல், ஒரு கட்டத்தில், ஒரு சிறுபான்மை சமூகத்தை இணைத்துக் கொண்டு, மற்றைய சமூகத்துக்கு எதிரான திட்டங்கள் மிகச் சூட்சுமமாக முன்னகர்த்தப்படுகின்றன.   

அளுத்கம, திகண, அம்பாறை போன்ற இடங்களில் இடம்பெற்று கலவரங்களிலும் 2019 ஏப்ரலில் வடமேல் மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளாலும் முஸ்லிம்கள் தெளிவாகவே இலக்குவைத்துத் தாக்கப்பட்டனர்; சொத்துகள் அழிக்கப்பட்டன. 

அரசியல் பக்கபலம் கொண்ட இனவாதிகளே இவற்றைச் செய்தார்கள், என்பது பட்டவர்த்தனமாகக் காணப்பட்ட போதும், இரண்டு அரசாங்கங்களும் இனவாதிகளைத் தண்டிப்பதற்குப் பயந்தனர் என்பதே நிதர்சனமாகும்.   

இந்தப் பின்புலத்தில், இனவாத சக்திகளைக் கட்டுப்படுத்தாத காரணத்தால், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், சிறுபான்மைச் சமூகங்களுக்கு உள்ளும் அதற்கொப்பான ‘வாதங்கள்’ சிறியளவில் தலைதூக்குவதற்கான களநிலைமைகள் உருவாகலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், இனவாதத்தை மய்யமாகக் கொண்ட பிரச்சினைகளுக்கு, உண்மைக்கு உண்மையாகத் தீர்வு காணும் பாங்கிலான அரசாங்கங்களின் முயற்சிகள், ‘ஏட்டுச் சுரக்காய்’ போலவே இருக்கின்றன.   

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், காட்டுமிராண்டித்தனமானவை என்பதும் எந்த அடிப்படையிலும் ஒரு விவாதத்துக்குக் கூட, ஏற்றுக் கொள்ள முடியாதவை என்பதுமே பொதுவான நிலைப்பாடாகும். இதில், முஸ்லிம்களுக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. 

தமது சொந்தத் திட்டத்துக்காகவோ, யாருடைய நிகழ்ச்சி நிரலுக்காகவோ அப்பாவிச் சகோதர மக்களை உயிர்ப்பலி எடுத்த சஹ்ரான் கும்பலை, முஸ்லிம் சமூகம் தம்மைச் சார்ந்தவர்களாகப் பார்க்கவும் இல்லை.   

பயங்கரவாதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் முஸ்லிம்களோடு முடிச்சுப் போடும் வழக்கம், உலகெங்கும் இருந்தாலும் கூட, நிஜத்தில் இதற்கும் மதங்களுக்கும் இடையில், எவ்வித தொடர்பும் இல்லை. பயங்கரவாதிகள் எந்த அடையாளத்தை முன்னிறுத்தினாலும், அவர்கள் எந்த மதத்தையும் சரியாகப் பின்பற்றாதவர்கள் என்பதே உண்மையாகும். இதை, இலங்கை முஸ்லிம் சமூகம், தெளிவாக வெளிப்படுத்தி விட்டது.   

இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது, முஸ்லிம்களைப் போல வேடம்தரித்த நபர்கள் என்றாலும், அதற்குப் பின்னால், பலமான மறைகரம் ஒன்று இருந்ததை உலகறியும். அத்துடன், இதுபற்றி அரச உயர்மட்டமும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் முன்கூட்டியே அறிந்திருந்தும், இவ்விடயம் அலட்சியப்படுத்தப்பட்டு உள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.   

இருப்பினும், இன்னும் விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றமையால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்து இயக்கிய உண்மைச் சூத்திரதாரிகள் யார் எனக் கண்டறிந்து, இவ்விவகாரத்துக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. 

மாறாக, இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எது நடந்தாலும், அதை இந்தப் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளோடு முடிச்சுப் போடுகின்ற, கீழ்த்தரமான அரசியல், இனவாதச் செயற்பாடுகளே முன்கையெடுத்துள்ளன.   

இவ்வாறே, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை, இனவாத சக்திகளும் கடும்போக்கு அரசியல்வாதிகளும், தமது அரசியலுக்காக இன்று கையிலெடுத்துள்ளனர். எனவே, ஜனாஸாவை எரிக்கும் பிரச்சினைக்கு,  தீர்வு காணப்படாதா என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது.   

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றால் கணிசமான முஸ்லிம்கள் மரணமாகியுள்ளனர். பொதுவாகவே, சமய அனுஷ்டான விடயத்தில், சற்றுக் கூடுதல் கவனம் எடுப்பவர்களான முஸ்லிம்கள், குறிப்பிட்ட உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியைக் கோரி வருகின்றனர். 

ஒருவேளை, உலக சுகாதார ஸ்தாபனமானது ‘எரிக்கவே வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாலோ ஏனைய உலக நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்த ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டிருந்தாலோ, இவ்வாறான ஒரு வேண்டுகோளை முஸ்லிம்கள் முன்வைத்திருக்க முடியாது.   

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அமைச்சரவையில் இவ்விடயம் பேசப்பட்டதாகவும் நிபுணத்துவ குழுவின் முடிவின்படி, ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இப்பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.   

ஆனால், இதுபற்றிய தகவல்கள் வெளியாகிய சில மணித்தியாலங்களுக்குள், சொல்லி வைத்தாற்போல், ‘குட்டை’ குழப்பப்பட்டு உள்ளது. அரசாங்கத்தின் மனமாற்றம் பற்றி, ஆளுந்தரப்பு அரசியல்வாதிகள் வெளியில் சொல்கின்றார்கள்; முஸ்லிம் சமூகத்தின் பக்குவமற்ற சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள், அதைக் கொண்டாடுகின்றார்; சர்ச்சைக்குரிய முஸ்லிம் அமைப்பொன்று நன்றி தெரிவிக்கின்றது. அதன்பிறகு, இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது.   

இது ஒரு சமூகத்தின் கோரிக்கையாகும். சுகாதார விஞ்ஞான அடிப்படையில், அதை ஏற்றுக் கொள்ள முடியுமா, இல்லையா என்று தீர்க்கமான முடிவை, அதிகாரிகள் எடுக்க வேண்டும். ஆனால், இங்கு என்ன நடக்கின்றது?   

இக்கோரிக்கை அடிப்படைவாதமாகப் பார்க்கப்படுகின்றது. இதற்குச் செவிசாய்த்தால், ஆட்சியே மாற்றப்படும் என்ற தோரணையில் பிக்குகள் எச்சரிக்கின்றனர். ஆகவேதான், இனவாத சக்திகள், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதால், மேற்குறிப்பிட்ட விவகாரங்கள் போலவே, இப்பிரச்சினைக்கும் சுமூகத் தீர்வு கிட்டாதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.   

ஆனால், ஜனாஸா எரிப்பு தொடக்கம், இனப் பிரச்சினைக்கான தீர்வு வரை, அனைத்து விதமான மக்களின் பிரச்சினைகளையும், இனவாதிகளின் கைகளில் கொடுக்காமல், காலக்கெதியில் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பிருக்கின்றது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .