2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாப்பரசர்: ஆண்டகையின் அரசியல்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:02 - 1     - {{hitsCtrl.values.hits}}

அரசியலில் மதமும், மதத்தில் அரசியலும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்தவை. இவ்விரண்டுக்கும் இடையிலான உறவு, உலக வரலாற்றின் திசைவழியில் தவிர்க்கவொண்ணாச் செல்வாக்குச் செலுத்தியது. 

சிலுவைப் போர்களில் தொடங்கி, புனிதப் போர்கள் வரை, இலட்சக்கணக்கானோரைக் காவு கொண்ட பெருமையும் இவ்விரண்டுக்கும் இடையிலான உறவுக்குண்டு. 

இன்றும், அரசியலில் மதத்தின் செல்வாக்கு இருக்கிறது. அது ‘நாகரிகமடைந்த’ ஜனநாயக நாடுகள் தொட்டு, ‘நாகரிகமடையாத’ மூன்றாமுலக நாடுகள் வரை அனைத்துக்கும் பொருந்தும்.   

கடந்த மாதம் 30 ஆம் திகதி, வெனிசுவேலாவில் நடைபெற்ற அரசமைப்புச் சபைக்கான தேர்தலில், ஹியுகோ சாவேஸின் ஆதரவாளர்கள் வெற்றிபெற்று அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளனர். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக, வெனிசுவேலாவில் ஓர் ஆட்சிமாற்றமொன்றை நிகழ்த்துவதற்கான, நீண்ட முயற்சியின் இன்னொரு அத்தியாயம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால், இது என்றென்றைக்குமானதல்ல; வெனிசுவேலாவில் ஆட்சி மாற்றத்துக்கான முயற்சிகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டன.

 ஆனால், சாவேஸின் மக்கள் ஆதரவும் அவரது கொள்கைகள், சாதாரண அடித்தட்டு வெனிசுவேலர்களுக்குப் பெற்றுத்தந்த உரிமைகளும் சதிப்புரட்சிகளைச் சாத்தியமற்றதாக்கி விட்டன. 

சாவேஸின் எதிர்பாராத மரணம், ஆட்சிமாற்றத்துக்கான புதிய உத்வேகத்தை வழங்கியது. பொருளாதாரத் தடைகள், எதிர்க்கட்சிகளுக்கான அமெரிக்காவினதும் மேற்குலகினதும் நேரடியான ஆதரவு என்பன ஆட்சிமாற்றத்தை நோக்கிய திசையில் நகர்த்தின. இந்நிலையிலேயே, அண்மையில் நடைபெற்ற தேர்தலை நோக்க வேண்டியுள்ளது.   

மேற்குலக ஊடகங்கள், கட்டுகிற கதைகள் வெனிசுவேலாவைப் பற்றிய மிகவும் தவறான சித்திரத்தைத் தருகின்றன. அதுவே, உண்மை போன்றதொரு பிம்பமும் உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்பின்னணியிலேயே வெனிசுவேலாவில் நடப்பவற்றை நோக்க வேண்டியுள்ளது. எட்டு மில்லியன் வெனிசுவேலர்கள், இத்தேர்தலில் வாக்களித்துள்ளனர். தேர்தலில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில் களமிறங்கிய எதிர்க்கட்சிகள், தோல்வியை அடுத்து, தேர்தல்கள் செல்லுபடியாகாது என அறிவித்ததுதான் வேடிக்கை. 

இந்தத்தேர்தல் முடிவுகளை, மேற்குலக நாடுகள் கண்டித்துள்ளதோடு, ஏற்க மறுத்துள்ளன. ஆனால், தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள், தேர்தல்கள் முறைகேடுகள் அற்ற முறையில், நேர்மையாக நடைபெற்றதாக அறிவித்துள்ளன.   

இன்று உலக நாடுகள், சர்வதேச அலுவல்களில் எவ்வாறு பிரிந்து நிற்கின்றன என்பதற்கு, இத்தேர்தல் முடிவுகள் தொடர்பான நாடுகளின் அறிக்கைகள் நல்லதொரு எடுத்துக்காட்டு. 

இதில், தேர்தல் முடிவுகளை வரவேற்ற நாடுகள் ரஷ்யா, சீனா, கியூபா, பொலிவியா, நிகரகுவா, ஈக்குவடோர் மற்றும் சிரியா. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், இத்தேர்தல்கள் குறித்து, அறிக்கையொன்றை வெளியிட்ட பாப்பரசர் பிரான்ஸில், இத்தேர்தல் முடிவுகள் செல்லுபடியற்றவை என்றும் அரசியலமைப்புச் சபையைக் கலைக்கும்படியும் வேண்டிக் கொண்டார். 

அத்துடன், வெனிசுலோ அரசு, மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் சொன்னார்.   
மக்களால் தெரியப்பட்ட அரசியலமைப்புச் சபையை, பாப்பரசர் ஏன் கலைக்கக் கோருகிறார்? வெனிசுவேலாவில் மட்டும் ஏன் மனித உரிமைகளை மதிக்கக் கோருகிறார்? தேர்தல் முடிவுகள் செல்லுபடியற்றவை என எவ்வாறு ஒரு மதத் தலைவர் அறிவிக்க முடியும்? இவை பதில்களை வேண்டி நிற்கும் வினாக்கள். 

பாப்பரசர்களின் அரசியலின் வரலாறு மிக நீண்டது. அதிகாரவர்க்கத்துடனும் அடக்குமுறை ஆட்சிகளுடனும் கூடிக்குலாவியதே அதன் வரலாறு. இக்கதை கொஞ்சம் நீண்டது.   

கத்தோலிக்க திருச்சபையின் தோற்றமும் அத்தோடு கூடிய, கிறிஸ்தவத்தின் மத நிறுவனமாக்கலும் அரசியலுடன் பின்னிப் பிணைந்ததாகவே அமைந்தன. 

உரோம சாம்ராஜ்ஜியத்தால் ஒடுக்கப்பட்ட அடிமைகளின் விடுதலைக் குரலாக, முகிழ்ந்தெழுந்த இயேசுவின் மரணத்துக்கு, ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பின், அவரது அடியார்கள் செய்த முக்கியமான காரியம், அதே உரோம சாம்ராஜ்ஜியத்தின் ஒடுக்குமுறைக் கருவியாக கிறிஸ்தவத்தை மாற்றியதுதான். 

எளிய மக்களுக்காக, இயேசு மரித்ததன் அடையாளமாக விளங்கிய சிலுவை, கொன்ஸ்டாண்டினின் தலைமையிலான உரோமப் பேரரசு இராணுவத்தின், அதிகாரபூர்வமான இலட்சினையாக மாறுவதற்குத் தேவைப்பட்டது, வெறும் முன்னூறு ஆண்டுகள் மட்டும்தான்.  

அன்று முதல், கடந்த ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளாக, கிறித்தவம் ஒரு மத நிறுவனம் எனும் முறையில், மனித குலத்துக்கு எதிராகச் செய்த செயல்களை, வரிசையாகப் பட்டியலிட்டால், அதன் நீளம் பூமியிலிருந்து பரமண்டலத்தையும் கடந்து செல்லும். 

கிறிஸ்தவ ஆசியுடன், மேற்குல அரசுகளால் வேட்டையாடப்பட்ட, வேறு நம்பிக்கை கொண்ட மக்கள் கூட்டமும் கொய்தெறியப்பட்ட அறிவுத் துறையினர் மற்றும் அறிவியல் அறிஞர்களின் தலைகளையும் எண்ணி மாளாது. 

இத்தனை நூற்றாண்டுகளாக, கத்தோலிக்க மதத்தின் தலைமைப் பீடத்தை, வரிசையாக அலங்கரித்து வந்த பாப்பரசர்களின் அரசியல் சதி ஆலோசனைகள், அந்தப்புர அசிங்கங்கள், கள்ளத் தொடர்பு கொலைகள் எனத் தகிடுதத்தங்கள் ஏராளம்.    

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் வரியே கீழ்க்கண்டவாறுதான் தொடங்குகிறது; ‘ஐரோப்பாவை ஆட்டுகிறது ஒரு பூதம்; கம்யூனிசம் எனும் பூதம். பாப்பரசரும் ஜார் மன்னனும் ஜேர்மன் உளவாளிகளுமாய் பழைய ஐரோப்பாவின் சக்திகளனைத்தும் இந்தப் பூதத்தை ஓட்டுவதற்காகப் புனிதக்கூட்டு சேர்ந்திருக்கின்றன’ 
கார்ள் மார்க்ஸும் எங்கெல்ஸும் அன்றைய பாப்பரசர் ஒன்பதாம் பயஸ் கடைப்பிடித்த, வெறிகொண்ட சோசலிச எதிர்ப்பை, அறிக்கையில் இவ்வாறு பதிவு செய்தனர். 

ஆனால், அதன் பின்னர் வந்த போப்பாண்டவர்கள் அனைவருமே, தமது நடத்தையின் மூலம், அறிக்கையின் முதல் வாக்கியத்தை, தீர்க்கதரிசனம்மிக்க பிரகடனமாக்கிவிட்டனர்.  

இதை நோக்க, வரலாற்றில் நீண்டகாலம், போக வேண்டியதில்லை. இரண்டாம் உலகப் போருக்கு முன்னைய காலப்பகுதியில், ஹிட்லரின் எழுச்சியின் போது, அப்போதைய பாப்பரசராக இருந்த, திருத்தந்தை 12 ஆவது பயஸ் நேரடியாகவே ஹிட்லருக்கு உதவினார். 

இதை ‘ஹிட்லருடன், போப் 12ஆவது பயஸின் அந்தரங்க வரலாறு’ எனும் நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்நூலை எழுதிய ஜோன் கார்ன்வெல், கம்யூனிஸ்ட் அல்ல; விசுவாசமுள்ள கத்தோலிக்கக் கிறித்தவர். 12 ஆவது பயஸின் அருமைபெருமைகளை உலகுக்குக் காட்ட, புத்தகமொன்றை எழுதப் புறப்பட்ட இவர், இதற்கான தரவுகளைத் திரட்டுவதற்காக, வத்திக்கானின் ஆவணக் காப்பகத்தைப் பார்வையிட அனுமதிகோரிய போது, நிர்வாகம் தயக்கமின்றி இவருக்கு அனுமதி வழங்கியது.

இவரது முந்தைய நூல்கள் எதுவும், திருச்சபைக்கு எதிரானதாக இல்லை என்பதே இதற்குக் காரணம்.   

‘வத்திக்கனின் ஆவணங்களைப் படிக்கப் படிக்க, நான் தார்மீக ரீதியாகவே நிலை குலைந்து போனேன். இவற்றையெல்லாம் வெளிக் கொண்டு வருவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் கார்ன்வெல். 
ஐரோப்பா முழுவதும், இலட்சக் கணக்கான யூத மக்கள், நாஜிகளால் படுகொலை செய்யப்பட்டபோது, அப்போதைய போப்பாண்டவரான 12ஆவது பயஸ், வாய்திறந்து, ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆனால், ஏன் பேசவில்லை என்ற கேள்விக்கான விடையை இந்நூல் தருகிறது.   

இதேவேளை, பாப்பரசர்களின் வரலாற்றில் மிகவும் குறைந்த காலம் பாப்பரசராக இருந்தவர் பாப்பரசர் முதலாவது ஜோன் போல். 34 நாட்கள் மட்டும் பாப்பரசராக இருந்த இவர், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

இக்காரணங்களில் முதன்மையானது, வத்திக்கான் வங்கியில் நடந்த ஊழல்களை இவர் அறிந்திருந்தது. இரண்டாவது, இவர் ஏனைய பாப்பரசர்களில் இருந்து வேறுபட்டவராக இருந்தமை. 

குறிப்பாக, இவரது மரணத்துக்கு முன், இவர் செய்த கடைசிக்காரியம், உரோமில் 
நவநாஜிகள் கம்யூனிசப் பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கியதை வன்மையாகக் கண்டித்தது. 

இது ஏன் ஒரு கொடுஞ்செயல் என்பதை, இவருக்குப் பின் பாப்பரசராகப் பதவியேற்ற இரண்டாவது ஜோன் போல் செய்த காரியங்களைப் பார்த்தால் தெரியும்.   
கத்தோலிக்கத் திருச்சபையின் வரலாற்றில், முதலாவது இத்தாலியர் அல்லாத பாப்பரசராக, போலந்தைச் சேர்ந்த இரண்டாவது ஜோன் போல் தெரியப்பட்டார். 

இதை, வத்திக்கானின் மிகப்பெரிய மேதமைமிக்க செயல் என்று மேற்குலகின் குறிப்பாக அமெரிக்காவின் செய்தி ஊடகங்கள் போற்றின. 

கிழக்கு ஐரோப்பாவில், நிறுவப்பட்டிருந்த ‘கம்யூனிச ஆட்சி’களைக் கலைப்பதில் புதிய பாப்பரசர் சிறப்பாகப் பங்காற்றுவார் என்று அப்போதே செய்தி ஊடகங்கள் மதிப்பீடுகளை எழுதின. 

சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக, அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனுடன், 
நெருக்கமான கூட்டணி அமைத்துக் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜோன் போல், மேற்கு ஐரோப்பாவில், அணு ஆயுதங்களைக் குவிப்பதை ஆதரித்து ஆசி வழங்கினார். 

இறுதியில் கம்யூனிசத்தை வீழ்த்துவதற்கு ரீகனுடன் சேர்ந்து வேலை செய்தார்’ என்று வத்திக்கானுக்கான அமெரிக்கத் தூதர் ஜிம் நிக்சன் வெளிப்படையாகவே கூறினார்.   

தென் அமெரிக்காவில் கியூபப் புரட்சியின் எதிரொலியாகவும் வியட்நாம் - லாவோஸ், கம்போடியாவில், அமெரிக்கா அடைந்த படுதோல்வி மற்றும் தேசிய விடுதலைப் புரட்சியின் வெற்றி காரணமாகவும், பல்வேறு நாடுகளில் அமெரிக்க ஆதரவு இராணுவ-பாசிச சர்வாதிகாரிகளுக்கு எதிரான எழுச்சிகள் வெடித்தன. 

தென் அமெரிக்காவின் பல நாடுகளிலும் உழைக்கும் மக்கள், போராட்டங்களில் குதித்தனர். கத்தோலிக்கத் தொழிலாளிகள், விவசாயிகளோடு, திருச்சபையின் கீழ்நிலைப் பாதிரியார்களும் பிஷப்புகளும் கூட, இந்த எழுச்சியில் பங்கேற்றனர். கத்தோலிக்க மதச் செல்வாக்கில் இருந்து, விலகிச் செல்லும் உழைக்கும் மக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு மதச்சீர்திருத்தம் அவசியமாயிருந்தது. ஐரோப்பாவில் நடந்த புரட்டஸ்தாந்து மதப்பிரிவுடனான புரட்சிகளுக்குப் பிறகு, தென் அமெரிக்காவில் கத்தோலிக்க மதம் கண்ட இந்த எழுச்சியின் விளைவுதான் ‘விடுதலை இறையியல்’ என்ற கோட்பாடாகத் தோற்றம் பெற்றது.  

இதை, முதலாளித்துவத்துக்கும் தனிச்சொத்துக்கும் எதிரானதாகக் கண்ட அமெரிக்க ஜனாதிபதி ரீகனுடைய சகாக்கள், 1980இல் மாநாடு ஒன்றைக் கூட்டி, பின்வரும் அறிக்கையை வெளியிட்டனர். ‘விடுதலை இறையியலுக்கு எதிர் வினையாற்றுவதாக மட்டும், அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கை இருந்துவிடக் கூடாது. அதனுடன் மோதுவதைத் தொடங்கி விட வேண்டும். தனியார் சொத்துடைமைக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் எதிரான அரசியல் ஆயுதமாக, திருச்சபையை மாக்ஸிஸ்ட்- லெனினிஸ்ட் சக்திகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கிறிஸ்தவத்தைவிட, அதிக அளவில் கம்யூனிசக் கருத்துகளால் கத்தோலிக்க மத சமூகத்துக்குள் அவர்கள் ஊடுருவுகிறார்கள்.’  

இம்மாநாட்டுக்குப் பிறகு, உடனடியாகவே விடுதலை இறையியலுக்கு எதிராக, ஜனாதிபதி  ரீகன், பாப்பரசர் இரண்டாம் ஜோன் போலுடன் கூட்டணி அமைத்துக் கொண்டார்.

பாப்பரசர், பழைமைவாதக் கத்தோலிக்க கோட்பாடுகளாலும் வத்திக்கானின் மத அதிகாரத்தாலும் விடுதலை இறையியலோடு சண்டையிட்டார் என்றால், ரீகன் நிர்வாகம், அதன் இலத்தீன் அமெரிக்கக் கூட்டாளிகளுடன் சேர்ந்து, விடுதலை இறையியலாளர்களைப் படுகொலை செய்தனர்.  

பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் - ரீகன் கூட்டணியின் சதியால் பழிவாங்கப்பட்டவர்களில் முக்கியமானவர், எல்-சால்வடோர் நாட்டு பேராயர் ஒஸ்கார் ரொமேரோ. 

இவர் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்த போதே, அந்நாட்டு வலதுசாரி, மதவெறிக் கும்பலினால் படுகொலை செய்யப்பட்டார். கொல்லப்பட் ரொமேரோவை புனிதத் துறவி என்று எல்-சால்வடோர் நாட்டு மக்கள் போற்றும் அதே சமயம், அடுத்த 50 ஆண்டுகளுக்கு அவரைப் புனிதராக அறிவிக்கும் பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு, பாப்பரசர் இரண்டாவது ஜோன் போல் தடை விதித்தார்.  

கத்தோலிக்க மதகுருக்கள், முற்போக்கு அரசியலில் ஈடுபடுவதைக் கடுமையாக எதிர்த்த இப்பாப்பரசர், கிறிஸ்தவ ஜனநாயக் கட்சிகள் மூலம், ஐரோப்பாவின் பல நாடுகளின் மீது, அரசியல் தலையீடு செய்தார். 

அக்கட்சிகளுக்கு ஏகாதிபத்தியங்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவிகளைப் பெற்றுத் தந்தார். இரகசிய பாசிசக் குழுக்கள் மூலமாகவும் பல நாடுகளில் அரசியல் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்வதற்கு ஆசி வழங்கினார். 

லெபனானின் ‘பிளங்கிஸ் கட்சி’ அத்தகையவைகளில் ஒன்றாகும். கத்தோலிக்க  கட்சியான இதன் கொரில்லாக் குழுக்களுக்கு, ஐரோப்பாவில் பயிற்சியளிப்பதற்கு வத்திக்கான் உதவி புரிந்தது.  

ஆர்ஜென்டினாவில், 1976 ஆம் ஆண்டு நிகழ்ந்த, ஆட்சிக்கவிழ்ப்பின்போது, இராணுவ சர்வாதிகாரிகளுடன் இராணுவ வீரர்களும் கலந்தாலோசனைகளில் பங்கு பெற்றிருந்தனர். இராணுவ ஆட்சியை எதிர்த்த கத்தோலிக்க மதகுருக்கள் உட்படப் பல போராளிகள் இரகசிய சித்திரவதைகளுக்கு ஆளாயினர்; பலர் கொலையுண்டனர். 

இந்தப் பாசிசக் கொடுங்கோலாட்சியைப் பகிரங்கமாகவே கத்தோலிக்கத் திருச்சபை ஆதரித்தது. இதனுடன் தொடர்புடையவர், இப்போதைய பாப்பரசர் பிரான்ஸிஸ். 

1980 இல் ஆர்ஜென்டினாவுக்குப் பயணம் செய்த பாப்பரசர், மனித உரிமை அமைப்பினரைச் சந்திக்க மறுத்ததோடு, “நம்பிக்கை வையுங்கள்; அமைதி, பொறுமையோடு காத்திருங்கள்” என்று தன்னைக் காண வந்த, காணாமல் போனோரின் தாய்மார்களிடம் உபதேசித்தார்.  
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பழைய நாஜி அதிகாரிகள் பலரும் தென் அமெரிக்காவில் தஞ்சம் அடைவதற்கு, அங்குள்ள கத்தோலிக்கத் தொடர்புகளை சி.ஐ.ஏ பயன்படுத்திக் கொண்டது. 

அமெரிக்க நிர்வாகத்தில் கத்தோலிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கு நிர்ப்பந்தித்தது. அமெரிக்காவின் அந்நிய உதவிகள் அனைத்தும் கத்தோலிக்க அமைப்புகள் மூலமாக, ஒழுங்குபடுத்தும்படி பார்த்துக் கொண்டது.   

இராணுவ, பாசிச சர்வாதிகாரிகளின் மனித உரிமைமீறல்களுக்கு உடந்தையாக இருந்து, ஆசி வழங்கிய பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல், ‘கம்யூனிச ஆட்சி’ என்று, தான் கருதிய நாடுகளில், மனித உரிமை மீறல்கள் குறித்துப் பெருங்கூச்சல் போட்டார். 

போலந்தில், ஆயராக இருந்தபோதே, பல இரகசியக் கூட்டங்கள் நடத்தி, ஆட்சிக் கவிழ்ப்புக்கான பிரச்சாரங்கள் நடத்தியிருந்தார். 

போலந்தில் ஆட்சிக் கவிழ்ப்புப் போராட்டங்களுக்குத் தலைமையேற்ற லே வலேசாவுடன் கத்தோலிக்க திருச்சபை கூட்டணி அமைத்துக் கொண்டது. இவரது இயக்கத்துக்கு 50 மில்லியன் டொலர்களை, வத்திக்கான் வங்கி நன்கொடையாக வழங்கியது. 

இன்று பொதுவில், மதங்கள் அரசியலில் அடைந்துள்ள செல்வாக்கும் அவற்றின், மக்கள் விரோத நடவடிக்கைகளும் கவனிப்பை வேண்டி நிற்கின்றன. 

ஒருபுறம் அடக்குமுறை ஆட்சிகளுக்கான ஆசீர்வாதமாகவும் இன்னொருபுறம் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கான செயலரங்காகவும் இவை செயற்படுகின்றன. இதில், கத்தோலிக்கத் திருச்சபையும் விதிவிலக்கல்ல; பாப்பரசரும் விலக்கல்ல. 

இன்று மேற்குலகில் மக்கள் மத்தியில் இறைநம்பிக்கை அருகி வருகிறது. இது கத்தோலிக்கத் திருச்சபையின் மிகப்பெரிய நெருக்கடியாகும். 

ஒருவேளை, இவ்வாண்டுக்கான நோபல் பரிசு பாப்பரசருக்கு வழங்கப்படவும் கூடும். காலத்தின் கோலம் இதுதான்.


You May Also Like

  Comments - 1

  • DJ Friday, 11 August 2017 03:24 AM

    "கடந்த மாதம் 30 ஆம் திகதி, வெனிசுவேலாவில் நடைபெற்ற அரசமைப்புச் சபைக்கான தேர்தலில், ஹியுகோ சாவேஸின் ஆதரவாளர்கள் வெற்றிபெற்று அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளனர்" ஹியுகோ செத்தே 4 வருடங்கள் ஆகிவிட்டன, ஆவியா ஆட்சி செய்கிறாரோ ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .