2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘ஈ.பி.எப் முகவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது’

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷெஹான் சாமிக்க சில்வா

ஊழியர் சேமலாப நிதியம் (ஈ.பி.எப்) பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக, அதன் முகவர்களுக்கு, பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திடம் இருந்து, பணம் வழங்கப்பட்டது என, பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பிரதம முகவர் நுவான் சல்கடொ, நேற்று (12) வெளிப்படுத்தினார். பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், நேற்றுச் சாட்சியமளிக்கும் போதே, அவர் இதனை வெளிப்படுத்தினார்.

இதில், “சார்லி” என்று புனைபெயரிடப்பட்ட ஈ.பி.எப் முகவர், 2015ஆம் ஆண்டு மார்ச் வரை, 97 மில்லியன் ரூபாயை, பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றார் என அவர் குறிப்பிட்டார். நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேனவின் பணிப்புரையின் பேரில், “டாங்கோ”, “கார்” என புனைபெயரிடப்பட்ட ஏனைய முகவர்களுக்கும் பணம் வழங்கப்பட்டது.

இந்த முகவர்களுக்குப் பணம் வழங்குவது தொடர்பான ஆவணமொன்றை, தான் பராமரித்து வந்தாரெனக் குறிப்பிட்ட நுவான் சல்கடொ, பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் குழு நிறுவனங்கள் மூலமே, இப்பணம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

இந்த ஆவணத்தின்படி, ஜூலை 17, 2014 முதல் மார்ச் 10, 2015 வரையிலான காலப்பகுதியில், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தால், பல பணப்பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆவணம், சாட்சியின் பிரணமாகப் பத்திரமாக, சட்டமா அதிபர் திணைக்களத்தால், ஆணைக்குழுவிடம் ஒக்டோபர் 3, 2017இல் சமர்ப்பிக்கப்பட்டது.

குறுக்கு விசாரணைகளின் போது, தகவல் வழங்குபவர்கள் மாறிவந்த போதிலும், சார்லி என்ற குறியீட்டுப் பெயர் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வந்தது என வெளிப்படுத்தப்பட்டது. செப்டெம்பர் 2015வரை, உதயசீலன் என்பவரும், அதன் பின்னர் சமன் குமார என்பவருமே, சார்லி என்று அழைக்கப்பட்டனரா எனக் கேட்கப்பட்ட போது, “ஆம்” என, நுவான் பதிலளித்தார்.

அந்த ஆவணத்தில், “வொல்வெரீன்” என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் யாரெனக் கேட்கப்பட்ட போது, தேசிய சேமிப்பு வங்கியின் பிரதம தொடர்பாடல் பொறுப்பில் இருந்தவர் எனவும், அக்காலத்தில் நவீன் அநுருத்த என்பவரே இருந்தாரெனவும், நுவான் பதிலளித்தார்.

இந்த ஆவணத்தின்படி, இறுதியாக இற்றைப்படுத்தப்பட்ட பணம் செலுத்துகை, மார்ச், 2015இல் இடம்பெற்றது. இது, சர்ச்சைக்குரிய பிணைமுறி ஏலம் நடைபெற்ற பெப்ரவரி 27, 2015க்குப் பின்னராகும். இறுதியாக, சார்லி என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டவருக்கே, பணம் செலுத்தப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .