2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மாவீரர் நினைவேந்தலுக்கு அதிரடி உத்தரவுகள்

Editorial   / 2020 நவம்பர் 24 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவம்பர் 27ஆம் திகதியன்று மாவீர் நாள் நினைவேந்தலை நினைவுகூர்வதற்கு அனுமதியளிக்குமாறும், நினைவு கூர்வதற்கு தடைவிதிக்குமாறு ​கோரியும் வடக்கில், நீதிமன்றங்களில் சிலவற்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் அந்தந்த நீதிமன்றங்களில் அதிரடியான உத்தரவுகள் சில பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மன்னாரில்…

மன்னார் மாவட்டத்தில், மாவீரர் தினத்தை நினைவு கூர்வதற்கு விதித்த தடை உத்தரவை, மன்னார் நீதிமன்றம் நேற்று (23) நீடித்துள்ளது.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வீ.எஸ்.சிவகரன் உள்ளிட்ட பலருக்கு, தடை உத்தரவு பிறக்கப்பட்டிருந்தது.  இத்தடை உத்தரவுக்கு எதிராக, நகர்த்தல் பத்திரமொன்று நேற்று (23) தாக்கல் செய்யப்பட்டது. நகர்த்தல் பத்திரம், மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த  ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், “குறித்த உத்தரவை வழங்க  நீதவான் நீதிமன்றத்துக்கு, சட்டத்திலே நியாயதிக்கம் கொடுக்கப்படவில்லை” என்றார்.  

எனினும், பொலிஸார் ஊடாக ஏற்கெனவே வழங்கப்பட்ட உத்தரவுகளை நீடிப்பதாகவும் நீதவான் அறிவித்தார்.

பருத்தித்துறையில்...

பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பொலிஸாரால் மீளப்பெறப்பட்டன. நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரையிலான நிகழ்வுகளுக்கே தடை உத்தரவு கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி ஆகிய 3 பொலிஸ் நிலைய அதிகாரிகளால் தனித் தனியே தாக்கல் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

முழங்காவிலில்…

கிளிநொச்சி - முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர் நாள் நிகழ்வு நடத்துவதற்கு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், நேற்று (23) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பூநகரி பிரதேச சபையின் சமத்துவ கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஞானம் ரதிகரன், அந்தக் கட்சியின் முழங்காவில் பிரதேச அமைப்பாளர் குவேந்திரன் ஆகியோரின் பெயர்களில், கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் இந்தத் தடை உத்தரவு  பெறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில்…

மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 41 பேருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக்கு எதிராக, நேற்று (23) நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினரால், ,ந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில்…

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் தடை உத்தரவு தொடர்பான நகர்த்தல் பிரேரணை தொடர்பான வழக்கு விசாரணை, இன்று (24) வரை ஒத்திவைத்து, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சின்னப்பு சிவபாலசுப்ரமணியம், நேற்று (23) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எஸ்.றொசேரியன் லெம்பேட், எம்.றொசாந்த், மு.தமிழ்ச்செல்வன், விஜயரத்தினம் சரவணன், சண்முகம் தவசீலன், எஸ்.என். நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன், மு. தமிழ்ச்செல்வன்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .