2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது

Niroshini   / 2016 மார்ச் 23 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை மாவட்டத்தில் அடையாளங் காணப்படுகின்ற காச நோயாளர்களின் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இதிலும் பிரதேச ரீதியாக  அவதானிக்கும் போது கிண்ணியா பகுதியில் இருந்துதான் அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டிருக்கிறர்கள். இதன் மூலம் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கிண்ணியா பிரதேசத்தில்  அதிகம் இருப்பதை உறுப்படுத்துகிறது என திருகோணமலை பொது வைத்தியசாலையின் காச நோய்த் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் ரீ.சுரேஸ் குமார் தெரிவித்தார்.

சர்வதேச காச நோய் தினத்தை முன்னிட்டு தமிழ் மிரர் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

2005 ஆம் ஆண்டு 110 காச நோயாளர்கள் இனங்காணப்பட்ட இந்த மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டு அது 240ஆக அதிகரித்தது. 2014 இல் 138 பேர் அடையாளங்காணப்பட்டனர். 2015 இல் 147 பேர் இனங்காணப்பட்டனர். இவ்வாண்டு கடந்த மூன்று மாதங்களில் 36 பேர் அடையாளங் காணப்பட்டிருக்கிறார்கள்.

இது எம்மிடம் சிகிச்சைக்கு  வருகின்ற நோயாளர்களை வைத்தே இந்தத் தகவல்கள் பெறப்படுகின்றது. ஆனால் சமூகத்தில் இனங்காணப்படாத நோயாளர்கள் அதிகமாக இருப்பார்கள்  என்பதை உறுதியாக கூறலாம்.

காச நோய் என்பதைத்தான் சுவாச நோய் என்று சொல்லுவார்கள். காச நோய் என்ற சொல்லை பயன்படுத்தும் போது நோயாளிகள் பயப்படுகிறார்கள். இதனால்தான் எமது வைத்தியசாலையில் சுவாச நோய் சிகிச்சை பிரிவு என விளப்பரப் பலகை போட்டிருக்கிறோம்.

வைத்திய வசதிகள் நாட்டில் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஆனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்று. இது தலை கீழானது. உண்மையில் வைத்திய வசதிகள் அதிகரித்தால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைய வேண்டும்.

இதற்குக் காரணம் வைத்தியர்கள் நோயை இனங் காண்பதில் ஏற்படுகின்ற காலதாமதமாகும். காச நோய் முற்றிய பிறகுதான் நோயாளியை எங்களிடம் அனுப்புகிறார்கள். இந்த நிலை நோயாளியின் உயிருக்கே ஆபத்து ஏற்படத்தி விடுகின்றது.

எனவே, காச நோயயை விரைவில் குணப்படுத்துவதில் ஏற்படுகின்ற சிரம்மங்கள் வைத்தியத்துறையில் உள்ள பலவீனங்களும் ஒரு காரணமாகும். அதேவேளை நோயாளின் பக்கத்திலும் இருக்கின்றது என்றார்

“ஆங்கிலம் படிப்பதென்றால் ஆங்கில ஆசிரியரிடம்தான் ஒரு மாணவன் போக வேண்டும். இதேபோல்தான் காச நோய் என்றால் அதற்குரிய வைத்தியரிடம்தான் செல்ல வேண்டும். நோயாளிகள் பல தடவைகள் பல வைத்தியர்கிளிடம் சென்றுதான் எங்களிடம் வருகிறார்கள்.

பெரும்பாலான நோயாளிகள் அதிகமாக மக்கள் போகின்ற வைத்தியர்களை நாடிச் செல்கிறார்கள். இந்த இடத்தில் ஒரு காச நோயாளியை அந்த வைத்தியரால் இனங்காண முடியாது. எனவே பல முறை குறித்த நோயாளி அந்த வைத்தியரிடம் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் நோய் முற்றிவிடுகின்றது. இது நோயாளி பக்கத்தில் உள்ள பலவீனமாகும். எனவே மக்கள் விழிப்புணர்வு பெறவெண்டியது அவசியமாகும்” எனவும் தெரிவித்தார்.

“காச நோயாளியை சமூக்தில் இருந்து ஒதுக்குவது முற்றிலும் தவறு. நோயாளியை தொடுவதனாலோ, அவரது உடுப்புக்களை அணிவதனாலோ இது தொற்ற முடியாது. நோயாளி ஒருவர் கதைக்கும் போது அல்லது இருமும் போது காற்றின் மூலம் இன்னொருவருக்கு தொற்றக்கூடியது.வேறு எந்த மார்க்கத்தாலும் இது தொற்றமுடியாது. இதனுடைய நோய் அரும்பு காலம் இரண்டு மாதமாகும்.

இந்நோய் சுவாசத் தொகுதியில் ஏற்படுகின்றபடியால், அஸ்மா நோயாளர்களுக்கு இலகுவாகத் தொற்றக்கூடியது. அத்தோடு புகைபிடித்தல் பழக்கம் உள்ளவர்கள், எயிட்ஸ் நோயாளி, சீனி வியாதி உள்ளவர்களுக்கு இலகுவாகத் தொற்றிவிடும். ஏனெனில் அவர்கள் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாமையே இதற்கு காரணமாகும்.

காற்றின் மூலம் தொற்றுகின்ற போதும் 10 வீதமானவர்களே இந் நோயால் பீடிக்கப்படுகின்றனர். இவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவாகளாக இருப்பவர்களாகும்.

காச நோயால் பீடிக்கப்பட்டவர் ஒருவர் சீரான சிகிச்சையை பெறாவிட்டால் ஐந்து வருடங்களின் பின்னர் மரணத்தை சம்பவிக்க நேரிடும். சளி பரிசோதனை மூலமும், எக்ஸ்ரே கதிர் மூலமும் பரிசோதனை செய்து நோயாளி இனங்காணப்படுகின்றார்.

இரண்டு வாரங்களுக்கு மேலான தொடர்ச்சியான இருமல், பசியின்னை,மாலை நேரத்தில் இலேசான காய்ச்சல். இருமலோடு இரத்தம் வருதல் போன்றன நோயின் அறிகுறிளாகும். நோயாளி என இனங்காணப்பட்டவர் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு சிகிச்சை பெறவேண்டும்.முன் இரண்டு மாதங்களுக்கும் இரண்டு வகையாக மாத்திரைகள் வழங்கப்படும். அதன்பின்னர் நான்கு மாதங்களுக்கும் மேலும் இரண்டு வகையான மாத்திரைகளைக் கொடுத்து  சீரான சிகிச்சை முறை ஒன்றை எங்களுடைய கண்கானிப்பின் கீழ் வழங்குகிறோம்” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .