2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கோலி இரட்டைச் சதம்: வெற்றியை நோக்கி இந்தியா

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 11 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டியின் 4ஆவது நாள் முடிவில், இந்திய அணி வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

மும்பையில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில், 7 விக்கெட்டுகளை இழந்து 451 ஓட்டங்களுடன் நேற்றைய நாளை ஆரம்பித்த இந்திய அணி, 631 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் விராத் கோலி, தனது 3ஆவது இரட்டைச் சதத்தைப் பூர்த்திசெய்து, 235 ஓட்டங்களைக் குவித்தார். அவர் பெற்ற 3 இரட்டைச் சதங்களும், இவ்வாண்டிலேயே பெறப்பட்டனவாகும். அத்தோடு, அணித்தலைவராக இதுவரை 2,096 ஓட்டங்களைப் பெற்றுள்ள கோலி, அணித்தலைவராக அதிக சராசரிகளைக் கொண்டுள்ளோர் (குறைந்தது 2,000 ஓட்டங்களைப் பெற்றோரில்) வரிசையில், 65.50 என்ற சராசரியோடு 2ஆவது இடத்தில் காணப்படுகிறார். முதலிடத்தில், 101.51 என்ற சராசரியோடு டொன் பிரட்மன் காணப்படுகிறார்.

தவிர, இவ்வாண்டில் 11 டெஸ்ட் போட்டிகளில் 17 இனிங்ஸ்களில் விளையாடியுள்ள கோலி, 80 என்ற சராசரியில் 1,200 ஓட்டங்களைப் பெற்று, அதிக ஓட்டங்களைப் பெற்றோர் வரிசையில் 4ஆவது இடத்தில் காணப்படுகின்றார். முதல் 3 இடங்களிலும் ஜொனி பெயர்ஸ்டோ, ஜோ றூட், அலஸ்டெயர் குக் ஆகியோர் காணப்படுகின்ற போதிலும், அம்மூவருமே தலா 16 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

துடுப்பாட்டத்தில் ஏனையோரில் முரளி விஜய் 136, ஜயந்த் யாதவ் 104 (கன்னிச் சதம்), செற்றேஸ்வர் புஜாரா 47 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அடில் றஷீட் 4, மொய்ன் அலி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

231 ஓட்டங்கள் பின்னிலையில் காணப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, இன்றைய நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இதன்படி, 4 விக்கெட்டுகள் கைவசமுள்ள நிலையில், 49 ஓட்டங்களால் அவ்வணி பின்னிலையில் உள்ளது. துடுப்பாட்டத்தில் ஜோ றூட் 77, ஜொனி பெயர்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .