2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விம்பிள்டன்: சம்பியனானார் பெடரர்

Editorial   / 2017 ஜூலை 16 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் தோன்றிய மிகச்சிறந்த டென்னிஸ் வீரர்களுள் ஒருவராகக் கருதப்படும் ரொஜர் பெடரர், விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப்ஸ் தொடரில், இவ்வாண்டுக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவின் சம்பியனாகத் தெரிவாகியுள்ளார்.

குரோஷியாவைச் சேர்ந்த 28 வயதான மரின் சிலிச்சை எதிர்கொண்ட 35 வயதான பெடரர், அவரை இலகுவாக வீழ்த்தி, சம்பியன் பட்டம் வென்றார்.

ஆரம்பம் முதலே ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்திய பெடரர், முதலாவது செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை, மேலும் இலகுவாக, 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். தீர்மானமிக்க 3ஆவது செட்டில், சிறிதளவு போராட்டத்தை சிலிச் வெளிப்படுத்திய போதிலும், தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்திய பெடரர், 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றார். இதன்படி, நேர் செட் கணக்கிலேயே அவர், சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

ஒரு மணித்தியாலம், 41 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், சிலிச்சுக்கான வாய்ப்புகளை வழங்காது, ஆக்ரோஷமான விளையாட்டை, பெடரர் வெளிப்படுத்தினார்.

இது, விம்பிள்டனில் அவரது 8ஆவது சம்பியன் பட்டம் என்பதோடு, ஒட்டுமொத்தமாக 19ஆவது கிரான்ட் ஸ்லாம் பட்டமாகும். இதன்படி, விம்பிள்டனில் 8 பட்டங்களை வென்ற முதலாவது ஆண் என்ற பெருமையை, அவர் பெற்றார். அத்தோடு, பகிரங்க யுகத்தில், அதிக ஒற்றையர் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைப் பெற்றவர்கள் மத்தியில் முதலிடத்தில் உள்ள பெடரர், தனக்கும் 2ஆம் இடத்திலுள்ள ரபேல் நடாலுக்கும் இடையிலான வித்தியாசத்தை, 4ஆக அதிகரித்துக் கொண்டார்.

இந்தப் போட்டியைப் பார்வையிடுவதற்கு, பெடரரின் குழந்தைகளும் வந்திருந்த நிலையில், வெற்றியைத் தொடர்ந்து அவர், கண்ணீர் மல்கியிருந்தார்.

வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “தொடரில் எந்தத் தருணத்திலும் செட் ஒன்றைத் தோற்காது, இந்தப் பட்டத்தை நான் கையில் வைத்திருப்பது, அற்புதமானது. இதை என்னால் நம்ப முடியவில்லை. இது அதிகமானது. இவ்வாறான உயரத்தை நான் அடையலாமா என்ற நம்பிக்கையீனம் இது. கடந்தாண்டின் பின்னர், இங்கு இன்னோர் இறுதிப் போட்டியில் வருவேனா என உறுதியாக இருக்கவில்லை. இறுதிப் போட்டிகளில், சில கடினமான போட்டிகளைச் சந்தித்தேன். நொவக் ஜோக்கோவிச்சுக்கு எதிராக, 2 போட்டிகளைத் தோற்றேன்.

“ஆனால், நான் எப்போதும் நம்பினேன். நான் மீண்டும் வர முடியுமென நான் நம்பியதோடு, கனவு கண்டேன். இன்று நான் இங்கே, என்னுடைய 8ஆவது பட்டத்தோடு நிற்கிறேன். நீங்கள் தொடர்ந்து நம்புவீர்களெனில், வாழ்க்கையில் தூரமாகச் செல்ல முடியும்” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .