2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டெஸ்ட் போட்டிகளைச் சாகடிக்காதீர்கள்: அர்ஜுன ரணதுங்க

A.P.Mathan   / 2012 நவம்பர் 08 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் போட்டிகளைப் பாதுகாக்குமாறு இலங்கைக் கிரிக்கெட் சபையை இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க கோரியுள்ளார். அடுத்த வருடம் இடம்பெறவிருந்த தென்னாபிரிக்காவிற்கெதிரான டெஸ்ட் தொடரைப் பிற்போட இலங்கைக் கிரிக்கெட் சபை முடிவெடுத்துள்ளதையடுத்தே அர்ஜுன ரணதுங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

டெஸ்ட் தொடரொன்றை இல்லாது செய்தல் மாபெரும் குற்றமெனத் தெரிவித்த அர்ஜுன ரணதுங்க, இத் தீர்மானத்திற்குப் பின்னாலுள்ள சிந்தனையைத் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தார்.

தொடரொன்றைத் தாமதப்படுத்துதல் என்ற பேச்சில் தனக்கு நம்பிக்கையில்லை எனத் தெரிவித்த அவர், நடாத்துவதற்கு தங்களுக்கு நேரம் கிடையாது எனத் தெரிவித்து இலங்கைக் கிரிக்கெட் சபை அடுத்த வருடம் இத்தொடரைக் கைவிடுவதாக அறிவித்தாலும் தான் ஆச்சரியப்படப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

இந்த முடிவு தொடர்பாக இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் கருத்தெதனையும் தெரிவிக்காது காணப்படுகின்றமை குறித்துத் தான் ஆச்சரியமடைவதாகத் தெரிவித்த அவர், ஆனால் இலங்கையின் இளைய வீரர்கள் குறித்துத் தான் அதிகம் கவலையடைவதாகத் தெரிவித்தார்.

டினேஷ் சந்திமால், லஹிரு திரிமன்ன போன்ற வீரர்கள் டெஸ்ட் தொடர்களில் பங்குபற்றுவதன் மூலம் ஏராளமாகக் கற்றுக்கொள்ள முடியும் எனவும், அந்த வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இடம்பெறவிருந்த தென்னாபிரிக்காவிற்கெதிரான டெஸ்ட் தொடரை ஶ்ரீலங்கா பிறீமியர் லீக் தொடருக்காக இலங்கைக் கிரிக்கெட் சபை பிற்போடுமாறு தென்னாபிரிக்கக் கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்ததும், அதனை அச்சபை ஏற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .