2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’பிரதமரைத் தோற்கடிக்க ஜனாதிபதி உதவி கோரினார்’

Editorial   / 2018 ஜூன் 29 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைத் தொடர்புகொண்டு, குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவி கோரினாரென்றுத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதற்கு நாம் ஒப்புகொண்ட போதும், தீர்மானத்துக்கான வாக்களிப்பு நடைபெறுவதற்கான செயற்பாடுகளுக்கு நடுவிலேயே, ஜனாதிபதி அதைக் கைவிட்டுவிட்டார் என்றுத் தெரிவித்துள்ளார்.

தமிழ்மிரரின், சகோதர பத்திரிகையான டெய்லிமிரர் பத்திரிகைக்கு, முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ள செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், இலங்கை மீதான இந்தியாவின் அரசியல் தலையீடு உள்ளிட்ம பல விடயங்கள் குறித்துக் கருத்து தெரிவித்த அவரிடம், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கு என்னவென்பது தொடர்பாக வினவிய போது, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், தற்போதுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்ன செய்யப் போகின்றார் என்பது தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் ஏனெனில், அவருடன் தற்போது தொடர்பில் இல்லை என்றும் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, எனினும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது மாத்திரம், அவர் தன்னிடம் உதவி கோரியிருந்தார் என்றும் கூறினார்.

பிரதமருக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, அது தொடர்பான தீர்மானம், ஜனாதிபதி கையிலேயே தங்கியுள்ளது என்று, தான் அப்போதே கூறியதாகவும் ஆனால், சமீபத்தில் இது பற்றி கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி, தன்னால் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது என்றும் ஏனெனில், தனக்கு மேல் சிலர் உள்ளமை தொடர்பில் குறிப்பிட்டிருந்தார் என்றும் சுட்டிக்காட்டிய மஹிந்த ராஜபக்ஷ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு மேல், யார் அப்படி தீர்மானம் எடுக்கக்கூடியவர்கள் இருக்கின்றார்கள் என்பது பற்றி, தன்னால் உணர்ந்துகொள்ள முடியாமல் உள்ளதென்றுக் கூறினார்.

இது தொடர்பில், பல ஊடகங்களில், பலதரப்பட்ட கருத்துகளும் விமர்சனங்களும் வெளியிடப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், வேட்பாளராக யாரை நிறுத்த வேண்டுமென்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் மாத்திரமே தீர்மானம் எடுக்கமுடியும் என்று, ஒன்றிணைந்த எதிரணியின் அனைத்து எம்.பிக்களும் கூறி வருகின்றமை குறித்தான நிலைப்பாடு குறித்து அவரிடம் வினவியபோது, தனியாக இருந்து, எந்தவொரு தீர்மானத்தையும் தன்னால் எடுக்க முடியாது என்றும் நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் செய்தபோது, பொதுமக்களின் பல்வேறான கருத்துகள் கிடைத்தன என்றும் கூறினார்.

அத்துடன், மற்றைய தலைவர்களை விட, இந்த நாட்டை அதிகளவு சுற்றிவந்த தான், பொதுமக்களின் கருத்துகளையே முடிவாக எடுத்துக்கொள்ளவதாகவும் கூறினார். அத்தோடு, ஒன்றிணைந்த எதிரணியும் இது தொடர்பில் கருத்தளிக்க உள்ளதாகவும், சரியான நேரம் வரும்போது, அனைவரும் கூடி, வேட்பாளர் யார் என்பது தொடர்பாகத் தீர்மானிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே, அடுத்த வேட்பாளராக இருப்பாரென்று, பலரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றமை பற்றி வினவியபோது, ஜனாதிபதி வேட்பாளருக்குப் பொருத்தமானவராக அவர் இருப்பார் என்றே அனைவரும் கூறுகின்றனரே தவிர, அவரைத் தெரிவு செய்துவிட்டோம் என்று யாரும் கூறவில்லை என்றும், அத்தோடு, வேறு சில கோணங்களிலும் இது பற்றிப் பேசப்படுகின்றது என்றும் கூறினார்.

“கடந்த தேர்தலில், நீங்கள் தோல்வியைத் தழுவியமைக்கு, நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களின் முக்கிய பங்களிப்பே காரணம் என்று கூறப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மையினரின் தீர்மானம் எடுக்கும் ஆற்றல் குறித்து தங்களுடைய கருத்து யாது?” என்று அவரிடம் வினவப்பட்ட போது, அதற்குப் பதிலளித்த அவர், “அனைத்துச் சமூகங்களிலிருந்தும் வாக்குகளைப் பெற்றுக்கொள்வது முக்கியமானதென்றும் சிறுபான்மைச் சமூகம், ஒரு கட்சிக்கு மாத்திரம் தான் வாக்களிக்க வேண்டுமென்றுத் தீர்மானம் எடுத்தால், அது தாக்கத்தை ஏற்படுத்துமென்றும் குறிப்பிம்ம ராஜபக்ஷ, ஆனால், அதுவே தேர்தலின் இறுதி முடிவில் ஒரு காரணியாக அமையாதென்றும் ஆனால், ஜனாதிபதியாக ஒருவர் வரவேண்டும் என்றால், அனைத்து சமூகத்தினதும் வாக்குகளைப் பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியமானதென்றும் வலியுறுத்தினார்.

“கடந்த முறை, எங்களுக்கு எதிராக, போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. உண்மையில், எங்களுடன் இருந்தவர்களாலேயே, அவை முன்னெடுக்கப்பட்டிருந்தன. எங்களைக் காட்டிக்கொடுத்து விட்டு, அவர்கள் கைவிட்டார்கள். ஆனால், தற்போது, சிறுபான்மைச் சமூகத்தினர், அதை உணர்வதற்கு ஆரம்பித்துள்ளனர். எம்முடைய அரசாங்கம் உதவி செய்ததைப்போன்று, எந்தவொரு அரசாங்கமும் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு உதவவில்லை. முஸ்லிம் சமூகத்தினர், தத்தமது கிராமங்களில் சந்தோஷமாக இருக்கினரென்றால், அதற்கு, எங்களுடைய அரசாங்கமே காரணம்.

“யுத்தத்தைத் தோற்கடித்து, வடக்கிலும் கிழக்கிலும் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்தோம். தமிழீழ விடுதலைப் புலிகள், அவர்களை மந்தைகளைப் போல் நடத்தியிருந்தனர். ஆனால் நாம், கிண்ணியா போன்ற பகுதிகளில், அவர்களை மீள்குடியமர்த்தினோம். அவர்களது பகுதிகளில், எந்தவொரு அபிவிருத்தியும் இல்லாமல் இருப்பதையடுத்தே, அவர்கள் அதை தற்போது புரிந்துக்கொண்டுள்ளார்கள்” என்று அவர் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில், இந்தியாவால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்றும் அரசியலில், இந்திய அரசாங்கத்தால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். ஆனால், இலங்கையின் உள்ளக அரசியலில், இந்தியாவின் தலையீடு இருக்காதென்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தொடர்பான செயற்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், யுத்த வீரர்களுக்கு தீங்கு ஏற்படுத்த முடியாதென்றும் வன்முறையால், முழு நாடும் துன்புறுத்தப்பட்ட போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி நாம் கலந்துரையாடுவோம் என்றும், மக்களுக்கு எதிரான கொலை மற்றும் சித்திரவதைக்கு எதிராகக் குரல் எழுப்புவோம் என்றும், மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்ட அரசமைப்பின் 20ஆவது திருத்தம் பற்றிக் கருத்து தெரிவித்த அவர், தற்போதுள்ள அரசமைப்பில், துண்டு துண்டான மாற்றங்களைக் கொண்டுவருவதில் எந்தவொருப் பயனும் இல்லையென்றும் நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை நீக்குவது பற்றி, அதில், எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என்றும் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .