2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கிறிஸ்டல் பலஸை வென்றது யுனைட்டெட்

Editorial   / 2018 மார்ச் 06 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், கிறிஸ்டல் பலஸின் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்தபோதும் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.

இப்போட்டியின் 11ஆவது நிமிடத்தில், அன்றோஸ் தன்சென்ட் உதைத்த பந்து மன்செஸ்டர் யுனைட்டெட்டின் பின்கள வீரர் விக்டர் லின்டிலோபில் பட்டுக் கோலாக்கா முன்னிலை பெற்ற கிறிஸ்டல் பலஸ், போட்டியின் 48ஆவது நிமிடத்தில் பற்றிக் வான் அனோல்ட் பெற்ற கோலின் மூலம் தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டது.

இந்நிலையில், அன்டோனியோ வலென்சியாவிடமிருந்து வந்த பந்தை போட்டியின் 55ஆவது நிமிடத்தில் கிறிஸ் ஸ்மோலிங் தலையால் முட்டிக் கோலாக்க தமது மீள்வருகையை மன்செஸ்டர் யுனைட்டெட் ஆரம்பித்தது. தொடர்ந்து, அலெக்ஸிஸ் சந்தேஸின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி வர போட்டியின் 76ஆவது நிமிடத்தில் அதைக் கோலாக்கிய றொமேலும் லுக்காக்கு கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார். பின்னர் போட்டி முடிவடையும் நிமிடங்களில் நெமஞ்சா மட்டிக் அபாரமாகப் பெற்ற கோல் காரணமாக இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.

இப்போட்டியின் முடிவில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 78 புள்ளிகளுடன் மன்செஸ்டர் சிற்றி முதலிடத்திலிருப்பதுடன், மன்செஸ்டர் சிற்றியை விட 16 புள்ளிகள் குறைவாக 62 புள்ளிகளுடனுள்ள மன்செஸ்டர் யுனைட்டெட் இரண்டாமிடத்திலுள்ளது. மன்செஸ்டர் யுனைட்டெட்டை விட இரண்டு புள்ளிகள் குறைவாக 60 புள்ளிகளைப் பெற்றுள்ள லிவர்பூல் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றது.

லிவர்பூலை விட இரண்டு புள்ளிகள் குறைவாக, 58 புள்ளிகளைப் பெற்றுள்ள டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் நான்காமிடத்தில் காணப்படுவதோடு, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரை விட ஐந்து புள்ளிகள் குறைவாக 53 புள்ளிகளைப் பெற்றுள்ள இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சி ஐந்தாமிடத்தில் காணப்படுகின்றது. 45 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் ஆர்சனல் காணப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .