2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சுற்றுப்பயணத்தின் முதல் வெற்றியைப் பெறுமா இலங்கை?

Editorial   / 2019 ஜனவரி 11 , மு.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒற்றை இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி, ஒக்லன்டில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நியூசிலாந்துக்கான இந்த சுற்றுப்பயணத்தில் எந்தவித வெற்றியைம் பெறாத இலங்கையணி, சுற்றுப்பயணத்தில் தமது முதலாவது வெற்றியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் களமிறங்கும்.

அண்மையகால போட்டி முடிவுகளின்படி, இலங்கையணியின் பெறுபேறுகள் மோசமாய் அமைந்திருந்தாலும் நியூசிலாந்தின் பெறுபேறுகள் இலங்கையணியை விடவும் மோசமானதாகக் காணப்படுகிறது.

இதுதவிர, நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன், வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் ஆகியோருக்கு இப்போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கையணிக்கு ஆபத்தாந்தவனாக அமைந்த ஜேம்ஸ் நீஷம் காயமடைந்துள்ள நிலையில், சுற்றுப்பயணத்தின் தமது முதலாவது வெற்றியைப் பெறுவதற்கான சிறந்த சந்தர்ப்பாக இப்போட்டியை இலங்கை கருதுகிறது.

அந்தவகையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தமது சிறந்த துடுப்பாட்டவீரராகவிருந்த திஸர பெரேரா, அதிக பந்துகளை எதிர்நோக்கும் வகையில் அவரது வழமையான ஆறாவது அல்லது ஏழாமிடங்களில்லாமல் முன்னர் அவரை இலங்கை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துடுப்பாட்டத்துக்கேற்ற குறுகிய மைதானமாகவே இம்மைதானம் காணப்படுகின்ற நிலையில், திஸர பெரேராவோடு, நிரோஷன் டிக்வெல்ல, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், தசுன் ஷானக ஆகியோரில் ஒருவர் அல்லது இருவராவது சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினாலே வெற்றியைப் பெற்றுக் கொள்ளலாம்.

தனுஷ்க குனதிலக உபாதை காரணமாக இப்போட்டியில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக அணியில் சதீர சமரவிக்கிரம களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் கொலின் மன்றோவின் சிறந்த பெறுபேறுகளின் உதவியோடு இப்போட்டியை நியூசிலாந்து எதிர்கொள்வதோடு, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் றொஸ் டெய்லர் தொடர்ச்சியாக சிறந்த பெறுபேறுகளை வழங்கி வருவதும் நியூசிலாந்துக்கு கைகொடுக்கும்.

வில்லியம்சன் இல்லாத நிலையில், டிம் செளதியே நியூசிலாந்து அணிக்கு இப்போட்டியில் தலைமைதாங்கவுள்ள நிலையில், அண்மைக் காலமாக இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் மோசமான பெறுதியைக் கொண்டிருந்த அழுத்தத்துடன் இப்போட்டியில் அவர் களமிறங்குகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .