2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இனியொருபோதும் யுத்தம் ஏற்படமாட்டாது

Niroshini   / 2016 மே 21 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

இந்த நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற இனரீதியிலான புறக்கணிப்புக்களே யுத்தம் ஏற்படுவதற்கான பின்புலம் என்பதை தற்போதைய அரசாங்கம் உணர்ந்த செயற்படுவதனால் இனியொருபோதும்  யுத்தம் ஏற்படமாட்டாது என மீன்பிடி நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு உறுகாமம் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை மாலை  மீனவர்களுக்கு தொழில் உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
உறுகாமம் மீனவர் சங்கத்தலைவர் கே.தியாகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உறுகாமம் பிரதேசத்திலுள்ள 9 அமைப்புக்களைச் சேர்ந்த  25 பேருக்கு தோணிகள் வழங்கப்பட்டதுடன் 30 ஆயிரம் மீன் குஞ்சுகளும் உறுகாமம் குளத்தில் விடப்பட்டன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக உதவிச் செயலாளர் நவரூப ரஞ்சனி உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்தகால யுத்தத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீன்பிடித்துறை பின்னடைவுடன் உள்ளது. இதனால் மீனவ சமூகத்தை விருத்திசெய்வதற்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளோம். மீனவ சமூகத்தைப் பொறுத்தமட்டில் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள்  குறைவான வருமானத்தைப் பெறுபவர்களாக காணப்படுகின்றார்கள்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக வாகரையில் ஆரம்பிக்கவுள்ள திட்டத்தில் சுமார் ஐயாயிரம்பேருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும். அதுதொடர்பாக மாவட்ட செயலகத்தில நடைபெற்ற கூட்டத்தில் முடிவுசெய்துள்ளோம்.
 
கடல் மீன்பிடியைப் பொறுத்தவரை மீனவர்கள் ஓரளவு வருமானத்தைப் பெறுகின்றார்கள். அதை மேலும் மேம்படுத்துவதற்கு மீன்பிடி துறைமுகங்கள் அமைத்து படகுகள் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.
 
கடந்த காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் எமது நாட்டு மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எமது நாட்டில் பிடிக்கப்படும் கடல் மீன்களுக்கு வெளிநாட்டுகளில் நல்ல சந்தை வாய்ப்பு கிடைக்கின்ற நிலமை காணப்படுகிறது.

அதேபோல  உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் நன்னீர் மீன்களுக்கும் வெளிநாடுகளில் வரவேற்பு காணப்படுவதால்,  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இன வாதிகள் வடக்கு கிழக்கிலும் உள்ளனர் அதேபோன்று தெற்கிலும் இருக்கிறார்கள்.
 
தற்போது எமது நாட்டிலே வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவு  ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு உயிரிழப்பு உடைமையிழப்பு ஏற்பட்டுள்ளன. இதிலே சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்ற பேதமின்றி அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தாங்களாக முன்வந்து உதவவேண்டியவர்களாக நாங்கள் இருக்கிறோம்.
 
வெள்ள அனர்த்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வங்கவதில் அரசாங்கத்தை குறைகூறுகிறார்கள். இயற்கை அனர்த்தத்தில் அரசியல் செய்ய முனைகிறார்கள். அரசாங்கம் மக்களின் அதிருப்தியை அடைந்துள்ளதாககூறுகிறார்கள். பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளபோது நிவாரண பணிகளில் சிறு தடங்கள்கள் ஏற்படுவதுண்டு. எங்களால் இயன்றளவு உதவிகளை மேற்கொண்டுள்ளோம். வெளிநாடுகளின் உதவிகளும் நாடிவருகின்றன என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .