2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'சிறுபான்மைச் சமூகத்தினரின் நம்பிக்கையை குழப்பும் முயற்சியே பாதயாத்திரை'

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
இந்த நாட்டில் அனைவரும் சமத்துவமாக வாழக்கூடிய சூழல் புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதன் மூலம் ஏற்படுமென்ற நம்பிக்கையில் சிறுபான்மைச் சமூகத்தினர் உள்ள நிலையில், இதனைக் குழப்பும் முயற்சியே கூட்டு எதிரணியினர் பாதயாத்திரை ஆகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்; தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு, ஊரியன்கட்டுக் கிராமத்தில் திங்கட்கிழமை (01) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'கடந்த மூன்று தசாப்தகால அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது மக்கள் இலட்சக்கணக்கான உயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். தங்களின் சொத்துகளை இழந்துள்ளார்கள். எமது மக்கள் இழந்த இழப்புக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்' என்றார்.
 
'புதிய அரசியல் யாப்பு உருவாக்குவதன் மூலம் இந்த நாட்டில் சமத்துவமாக வாழக்கூடிய  சூழல் ஏற்படுமென சிறுபான்மையின மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனைக் குழப்பும் வகையில் கூட்டு எதிரணியினர் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்கள்.
 
அரசியலமைப்பின் மூலம் இணைந்த வடகிழக்கில்; தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் உச்சக்கட்ட அதிகாரப்பகிர்வுடனான சமஷ்டி முறையிலான தீர்வை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். தங்களை ஆளும் வகையில் தீர்வுத்திட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்பது எமது மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு' என்றார்.  
 
'பாதயாத்திரையில் கலந்துகொண்டவர்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்கள். சிறுபான்மையின மக்களைப் பகைத்துக்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவதென்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கனவாகவே இருக்கும்.
 
கூட்டு எதிரணியினரின்; பாதயாத்திரையானது தங்களின் நிலையைப் பாதுகாத்துக்கொள்வதும் தங்களுடன் இருப்பவர்களைத் தக்கவைத்துக்கொள்வதுமே தவிர, இதனால் நாட்டு மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை' எனவும் மேலும்;; அவர்  கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .