2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'நல்லாட்சியிலும் இனவாத நச்சு விதை தூவப்படுகிறது'

Niroshini   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஆர்.ஜெயஸ்ரீராம்,பேரின்பராஜா சபேஷ்

“நல்லாட்சியிலும் இனவாத நச்சு விதைகள் தூவப்பட்டிருப்பது கவலையளிக்கிறது” என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

“சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகளை தரவேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்துக்கு உண்டு என்கின்ற யதார்த்தத்தை மூடி மறைக்காமல் நாம் மத்திய அரசாங்கத்துக்கு அடிக்கடி சுட்டிக்காட்டி வருகின்றோம்” எனவும் குறிப்பிட்டார்.

ஏறாவூரில் சுமார் 40 கோடி ரூபாய் செலவு மதிப்பீட்டில் ஏறாவூர் பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதி, பெண்கள் பொதுச்சந்தைக் கட்டடத் தொகுதி மற்றும் கலாசார மத்திய நிலையம் என்பவற்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஏறாவூர் நகரில் வெள்ளிக்கிழமை மாலை நடை​பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

13ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று அடிக்கடி கூறிவருகின்ற ஒருவன் என்ற ரீதியிலே எந்த வித பேச்சுவார்த்தையும் இல்லாமல் உடனடியாக சிறுபகான்மையினருக்கு அதன் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

இனவாதப் போக்குக்குரிய நச்சு விதைகள் இந்த நாட்டிலே இப்பொழுது தூவப்பட்டிருக்கின்றன.இந்த இனவாதப் போக்கு திட்டமிட்டு தூண்டப்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்துள்ளது.

சிறுபான்மையினருக்கான அரசியல் உரிமைகள் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கனிந்து வரும்பொழுது, அவ்வாறு சிறுபான்மையினருக்கு எந்தவித உரிமைகளும் கிடைத்துவிடக் கூடாதென்பதற்காக கடந்த கால இனவாத அரசுகள் மேற்கொண்ட அரசியல் இராஜதந்திரம் போன்றே இப்பொழுதும் திட்டமிட்ட செயற்பாடு இடம்பெறுகின்றதா என்ற நியாயமான கேள்வி எமக்குள் எழுகின்றது.

இவ்வாறுதான் கடந்த காலத்திலே சிறுபான்மையினருக்கான நியாயமான உரிமைகள் கிடைக்க வழியேற்படுகின்றபோது அதனைக் குழப்பியடிப்பதற்காக மறுமுனையில் தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களை குழப்பியடித்து இனவாதத்தைத் தூண்டி கவனம் திசை திருப்பப்பட்டன. அதையொத்த நிகழ்வுகளே இந்த நல்லாட்சியிலும் நடப்பது போல் உணர முடிகின்றது.

எனவே, குழப்பவாதிகளை கூண்டில் போட வேண்டிய பொறுப்பு நல்லாட்சி அரசாங்கத்துக்கு உள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .