2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஐ.தே.க. சார்பாக மட்டக்களப்பிலிருந்து ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும்: சசிதரன்

Sudharshini   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்   

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஒரு தமிழ் பிரதிநிதியை இம்முறை நீங்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் நாற்பது வருடகாலமாக எமது கட்சி மீதுவைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாட்டுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என ஜக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை வீனஸ் பாலர் பாடசாலைக் கட்டடத்தில் சனிக்கிழமை (07) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,


ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக 2000ஆம் ஆண்டுக்கு பின்னர், ஆறு தேர்தல்களில் நான்  போட்டியிட்டு இருக்கிறேன். அந்த ஆறு தேர்தல்களிலும் ஒரு தடவையைத்; தவிர ஏனைய 5 தடவைகளும் மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை.  


ஆனால், தற்போது நல்ல சந்தர்பம் ஒன்று கிடைத்திருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக்கூடாது. சென்ற முறை ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஒருவரை தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்பியிருந்தால் தற்போது அவர் ஓர் அமைச்சராக இருந்திருப்பார். அது கட்சிக்கும் மக்களுக்கும் தற்போது நன்மையான விடயமாக அமைந்திருக்கும்.


இந்த களுதாவளைக் கிராமத்தைப் பொருத்தளவில் என்னால் இயன்றளவு உதவிகளை வழங்கியுள்ளேன். அராஜக அரசினை மாற்றியமைக்க வேண்டும், அதிலிருந்து மக்களை விடுபடவைக்க வேண்டும் என நினைத்து பல வேலைகளை செய்து, தற்போது அரசாங்கத்தை மாற்றி இருக்கின்றார்கள்.  


ஆனால், இந்த மாற்றத்தினை எங்களுடைய கட்சியோ அல்லது வேறு கட்சிகள் சொல்லியோ நிகழவில்லை. மக்கள் ஏற்கனவே தீர்மானித்ததன் விளைவாகத்தான் நடந்தேறியுள்ளது.


தற்போதைய அரசாங்கம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியை ஒரு கோடி ரூபாவாக உயர்த்தி இருக்கின்றது. எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு கூடுதலான வேலைகளை செய்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.


எனவே, எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஒருவரையேனும் மட்டக்களப்பிலிருந்து நடாளுமன்றம் அனுப்பிவைக்க வேண்டும்.


எமது கட்சியானது தேசியக் கட்சியாகும். இந்நாட்டை வேறு எந்த கட்சியும் ஆளப்போவதில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியும் தான் ஆளப்போகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .