2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சிவராத்திரி நிகழ்வுகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நாவலடி  காயத்திரி பீடத்தில் சிவராத்திரி தினத்தன்று மகா யாகம், சப்தரிஷிக்களுக்கும் பசுபதி லிங்கத்துக்கும் அபிஷேகம், மத  சொற்பொழிவு, திருவாசகம் முற்றோதல் ஆகியவை நடைபெறவுள்ள நிலையில், அனைவரையும் கலந்துகொண்டு பயனடையுமாறு அப்பீடத்தின் பிரதமகுரு சிவயோகச் செல்வர், கதம்பவாரிதி சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார் வேண்டுகோள் விடுத்தார்.  

காயத்திரி பீடத்தில் சிவராத்திரி தினத்தன்று நடைபெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பான கூட்டம்  நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

'மேற்படி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளன. விரதம் அனுஷ்டிக்கும்  ஒவ்வொருவரும் தனித்தனியாக குண்டம் ஸ்தாபித்து யாகம் செய்யவேண்டும். அத்துடன்,  தத்தம் கரங்களினாலேயே யோகலிங்கத்துக்கும்; சப்தரிஷிகளுக்கும் புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யவேண்டும்.

காயத்திரி சித்தர் சுவாமி முருகேசுவே காயத்திரி பீடத்தையும் சப்தரிஷி வளாகத்தையும் ஸ்தாபித்தவர். சப்தரிஷிகளுக்கான வணக்கஸ்தலம் இதைத் தவிர, உலகில் வேறெங்கும் இல்லை. அவருடைய ஆன்மிக பலம், அறிவு, ஆற்றல், சித்துக்கள் என்பவற்றை அளந்து பார்க்க யாராலும் முடியாது. அவர் இப்போதும் எங்களை சூட்சுமாக வழி நடத்துகிறார். அவர் காட்டிய வழிமுறைகளை யாகம் செய்வதிலும் அபிஷேகங்களிலும் வழிபாடுகளிலும் கடைபிடித்துவருகிறோம். சப்தரிஷிகள்  இங்கே சூட்சுமாக நடமாடுகிறார்கள்.

பக்தியோடு பூசிப்பவர்களுக்கு கனவிலும் நனவிலும் காட்சி அளித்து, அவர்களை ஆசிர்வதிக்கிறார். அவர்களது துன்பங்களையும் துயரங்களையும் போக்குகிறார். இங்கே நடைபெறும் இவ்வாறான ஆன்மிக நிகழ்வுகள் அவர்ரை ஈர்க்கும் என்பதை பக்தர்கள்  புரிந்துகொள்ளவேண்டும்.

யாகம் என்பது தேவதைகளை கூவி அழைப்பதாகும். ஒவ்வொரு பக்தரும் பக்தியோடு யாகம் செய்யும்போது,  யாககுண்டத்தில் அந்தத் தேவதை தோன்றி அப்பக்தரின் வேண்டுதலை நிறைவேற்றும்.  இது சுவாமி முருகேசுவின் தேவவாக்கு. இதேபோன்று புனித தீர்த்தங்களால் பசுபதி லிங்கத்துக்கும்  சப்தரிஷிகளுக்கும் அபிஷேகம் செய்யும்போதும் அத்தேவதைகள் அருள்மழை பொழிவர். புனித தீர்த்தங்கள் கங்கா, ஜமுனா, சிந்து, காவேரி, சரஸ்வதி, துங்கபத்ரா, வைகை, கோதாவாரி என்பன சாமானியமானவை அல்ல. சக்தி நிறைந்தவை. பக்தர்கள் தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்யும்போது, அவர்கள் அத்தேவைகளின் அருளாசிக்கு உட்படுவார்கள்.

சிவராத்திரி தினத்தில் இவ்வாறு பக்தர்களை ஆன்மிக நிகழ்வில் நேரடியாக உள்வாங்குவதற்கான நோக்கமே அதுதான்.
மேலும், யாகம் செய்யும்போது பக்தர்களால் ஓதப்படும் மந்திரங்களும் உபாம்சம், உபாம்சுவாம், மானசீகம் ஆகிய விதிப்படி ஓதப்படவேண்டும் யாகத்துக்குரிய திரவியங்களையும் புஷ்பங்களையும் ஆகுதிப் பொருட்களையும் யாகம் செய்வோர் தனித்தனியாக குறைவின்றி கொண்டுவரவேண்டும். எமது வளாகத்தில் நல்ல அனுபவம் பெற்ற பக்தர்கள் யாகம் செய்யும் பக்தர்களுக்கு உதவுவார்கள். ஆதலால், அவர்கள் நேரகாலத்தோடும் வரவேண்டும்.

இதை விட, சிவராத்திரி பகற்பொழுதில் திருவாசகம் முற்றோதல் நடைபெறும். மட்டு. மாவட்ட சைவத் திருநெறிமன்றம் இதை நடத்தும். யோகசக்கரங்கள் என்ற தலைப்பில்  சமய சொற்பொழிவு நடைபெறும். பக்தர்களுக்கு அருளும்வலுவும் சேர்க்கும் இறுதி நிகழ்வாக சமுத்திரா தீர்த்தம் நடைபெறும்.

அன்றைய நிகழ்வு முழுவதும் சிவராத்திரிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டதாகவே இருக்கும். இந்நிகழ்வுகளில் அனைவரும் உடலாலும் உள்ளத்தாலும் உணர்;வாலும் கலந்து இறை ஐக்கியம் பெறவேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .