2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இணக்க அரசியலினால் இனவாதம் குறைந்துள்ளது: இராகிருஷ்ணன்

Sudharshini   / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் ஆஸிக்

நாட்டில் இன்றிருப்பது இணக்கப்பாட்டு அரசியலாகும். இந்த இணக்கப்பாட்டு அரசியல் காரணமாக இனவாத அடிப்படையிலான செயற்பாடுகள் குறைந்துள்ளன என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கண்டி டி.எஸ். சேனநாயக்க சிறுவர் வாசிகசாலை கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'நாட்டில் இன ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைந்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைந்து இணக்கப்பாட்டு அரசியலை உருவாக்கினர். அதில், சில கட்சிகள் பங்காளிகளாக உள்ளன.

அதேநேரம் பங்காளியாக விரும்பாதவர்களுக்கு எதிரணியில் முக்கிய இடங்கள், விட்டுக் கொடுப்புடன் வழங்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தனும் எதிரணியின் அவைத் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனூடாக இணக்கப்பாட்டு அடிப்படையில் ஓர் அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்துள்ளனர்;. இதன் காரணமாக தற்போது இனவாத அடிப்படையிலான செயற்பாடுகள் குறைத்துள்ளன. யார் அதிகமான சேவைகளை செய்கிறாரோ அவருக்கே வாக்களிப்போம் என்ற அடிப்படையில் இருந்த பெரும்பான்மை மக்கள், இன்று மாறி விட்டனர்.
பெரும்பான்மை மக்களிடம் இருந்து குறிப்பிடத்தக்க அளவு வாக்குகள் தமிழ் வேட்பாளர்களான எமக்கு இம்முறையும் கிடைத்தன.

மொழியானது இனப்பிரச்சினைக்கு முக்கிய சவாலாக உள்ளது. எனவே, தமிழ் மக்கள் சிங்களம் கற்பது போல் சிங்கள மக்களும் தமிழைக் கற்று எம்முடன் கைகோர்க்க முன்வர வேண்டும்.

நீண்டகாலம் மாகாண சபை அமைச்சராக நான் இருந்துள்ளேன். 2010 வரை கண்டியில் என்னுடைய அமைச்சு இயங்கியது. அந்த அடிப்படையில் பலதுறைகளிலும் கண்டியில் நண்பர்கள் இருக்கின்றனர்.

கண்டி நகரில் சில பாடசாலைகளில் மூன்று மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. அதுபோல் சகல இனங்களும் சேர்ந்து கல்விக் கற்கக் கூடிய ஒரு கல்விக் கூடத்தை நுவரெலியாவில் நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர்; என்னிடம் தெரிவித்தார்.

ஆங்கில மொழியில் கல்வி கற்கக் கூடிய ரோயல் கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியாவுக்கு மட்டுமல்ல முழுநாட்டுக்கும் நான்,  கல்வி இராஜாங்க அமைச்சர். மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரை கண்டி, மாத்தளை மாவட்ட மக்களினது கல்விப் பிரச்சினைகளையும் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரை கல்வியை மட்டுமல்லாது பண்பாடு, கலாசாரம் போன்றவற்றையும் வளர்க்கக் கடமைப்பட்டுள்ளேன்.

கடந்த 15 வருடமாக கண்டி மாவட்டத்தில் இருந்து தமிழ் பிரதிநிதி ஒருவராவது தெரிவாக மாட்டாரா என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால், மீண்டும் ஒருவர் தெரிவாகியுள்ளார். எனவே, கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து தக்கவைக்க கண்டி வாக்காளர்கள் பாடுபட வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .