2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

“பொய் பிரசாரங்களால் மக்களை திசைதிருப்ப முயற்சி”

Kogilavani   / 2017 மே 30 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்திலுள்ள முக்கியக் கட்சியொன்று, ஊடகமொன்றின் துணையுடன் பொய் பிரசாரங்களை பரப்பி, அரசியல் இலாபம் தேட முனைவதாக, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“மலைநாட்டு புதியகிராமங்கள் அமைச்சை நான் பொறுப்பேற்றப் பின்னர், அரசியல், தொழிற்சங்கபேதமின்றி பணிகளை முன்னெடுத்து வருகின்றேன். குறிப்பாக மண்சரிவு, தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன். ஆனாலும், இதனை சிலர், கட்சி ரீதியாகவும் தொழிற்சங்க ரீதியாகவும் நான் முன்னெடுப்பதாக, பொய் பிரசாரங்களை முன்னெடுத்து, அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர். அவர்கள் அதற்குரிய பிரதிபலனை எதிர்கொள்வர்” என்று, அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில், தீ விபத்தினால் பாதிப்புற்ற இருபத்தைந்து தொழிலாளர் குடும்பங்களுக்கு, புதிய வீடுகள் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளன.

பிரவுன்ஸ்வீக் வீடமைப்பு திட்டம் என்பது, தீயினால் எரியுண்ட லயத்தில் வாழ்ந்த குடும்பங்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்த 25 குடும்பங்களுக்காக அமைக்கப்பட்டது.

அவர்களுக்கு உறவினர்கள் இருக்கலாம், அவர்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கலாம், இப்போது வீடமைப்பு திட்டம் நிறைவுபெற்ற வேளையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், இரண்டு வீடுகளை கேட்பது நியாயமானது அல்ல. அதுவும் அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் இத்தகைய நடவடிக்கைகள் ஒரு சில கட்சிகளால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

இதனைக் காரணமாக வைத்து, பிரன்ஸ்வீக் வீடமைப்பு திறப்பு விழாவின்போது, சிலர் குழப்பத்தை விளைவிக்க முயன்றனர். இக்குழப்பத்துக்கு ஊடகமொன்றும், முக்கிய அரசியல் கட்சியொன்றும் பக்கபலமாக இருந்தது தெரியவந்துள்ளது.

இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். இவ்வாறானவர்களுக்கு, உரிய பதிலடி கொடுக்கப்படும். அவர்கள் பிரதிபலனை அனுபவிக்க நேரிடும்” என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .